ஆலகாலம்,Aalakaalam

ஆலகாலம் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஜெயகிருஷ்ணமூர்த்தி
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - ஜெயகிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரிராவ்
வெளியான தேதி - 5 ஏப்ரல் 2024
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 3/5

சினிமா என்பது பொழுதுபோக்குதான் என்றாலும் அவ்வப்போது சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. குடிப்பழக்கத்தால் இன்றைய தலைமுறையினர் கூட ஏறக்குறைய அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர் என்று சொல்லுமளவிற்கு இருக்கிறார்கள்.

'குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்' திரைப்படங்களின் முன்பாக ஒரு எச்சரிக்கை வாசகம் போடுவார்கள். அந்த வாசகத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு படம் இது. அப்படிப்பட்ட பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி கெடுகிறது, அப்பழக்கத்திற்கு ஆளானவரது உடல் நலம் எப்படிப் போகிறது என்பதை உணர்வுபூர்வமாய் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணமூர்த்தி.

விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஈஸ்வரி ராவ். அவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கள்ளச்சாராயத்தால் பலி ஆகிறார். தனது ஒரே மகனைப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறார். நன்றாகப் படிக்கும் ஜெயகிருஷ்ணமூர்த்தியை வளர்த்து ஆளாக்கி சென்னையில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்க்கிறார். அங்கு படிக்கும் சாந்தினி, ஜெயகிருஷ்ணமூர்த்தியின் திறமையைப் பார்த்து அவரைக் காதலிக்கிறார். கல்லூரியில் முத்தம் கொடுத்துக் கொண்டதால் இருவரும் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள். சாந்தினி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வர, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார். தனது காதலைப் பற்றியும், திருமணம் பற்றியும் அம்மாவிடம் மறைக்கிறார் ஜெயகிருஷ்ணமூர்த்தி. கல்லூரிக்குப் போக முடியாததால் எலக்ட்ரீஷியன் வேலைக்குப் போகும் ஜெயகிருஷ்ணமூர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கப் பழகி ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே மாறிப் போகிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் பாதி ஒரு கல்லூரி காதல் கதையாக நகர்கிறது. இரண்டாம் பாதி குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் ஒருவனின் நிலையையும், அதனால், அக்குடும்பம் எப்படிப்பட்ட பாதிப்புகளை சந்திக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயகிருஷ்ணமூர்த்தி.

இடைவேளை வரையிலான காட்சிகளில் நாயகன் ஜெயகிருஷ்ணமூர்த்திக்கு நடிப்பு வரவேயில்லை. ஆனால், இடைவேளைக்குப் பிறகு அவரா இவர் என்று சொல்லுமளவிற்கு நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு ஒரிஜனல் குடிகாரன் எப்படி இருப்பானோ அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து பின் குடிக்காமல் போனால் என்னவோ ஆகிறது என ஓசி குடி குடிக்கும் அளவிற்கு மாறிப் போகிறார். மனைவியிடமே குடிக்க வேண்டும் என வாங்கி வரச் சொல்கிறார். எத்தனை மொடாக் குடியர்களைப் பார்த்து பார்த்து இப்படி காட்சிகளை அமைத்தார், குடிகாரனாக அப்படியே நடித்துள்ளார் என வியக்க வைக்கிறார்.

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் ஜெயகிருஷ்ணமூர்த்தியின் திறமையைப் பார்த்து அவரைக் காதலிக்கிறார் சாந்தினி. தனது குடும்பமே எதிர்த்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். வசதியாக வாழ்ந்த சில பெண்கள் காதலுக்காக இப்படி வீட்டை விட்டு வெளியேறி தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டது பற்றி பல கதைகளைக் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். கணவன் எவ்வளவு மோசமான குடிகாரனாக இருந்தாலும் 'காதல்' காரணமாக அவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறார் சாந்தினி. கர்ப்பிணியாக இருந்தாலும் வேலைக்குப் போகிறார், கணவனைக் காப்பாற்றுகிறார். சாந்தினி கதாபாத்திரம் மீது ஒரு அனுதாபம் அல்ல பல அனுதாபம் வருகிறது.

ஆதரவில்லாமல் இருக்கும் சாந்தினி, ஜெயகிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவளித்து அவர்களை தங்கள் குடியிருப்பு அருகிலேயே தங்க வைத்து பார்த்துக் கொள்கிறார் தீபா. இப்படியான சில நல்ல உள்ளங்களை பல ஏரியாக்களில் பார்க்கலாம். தங்களைப் பார்த்துக் கொள்வதை விடவும் மற்றவர்கள் மீது அவ்வளவு கரிசனம் காட்டுவார்கள்.

ஜெயகிருஷ்ணமூர்த்தியின் அம்மாவாக ஈஸ்வரி ராவ். தனது மகன் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என ஆசைப்படும் அப்பாவி கிராமத்து அம்மா. மகனின் நிலை பற்றி கடைசியில் தெரிந்து ஓடி வந்து பார்த்து அவரே சரக்கையும் வாங்கிக் கொடுத்து தவிக்கிறார். கிளைமாக்சில் அவர் செய்யும் ஒரு விஷயம் பல தாய்மார்கள் செய்ய நினைக்கும் ஒன்று.

என்ஆர் ரகுநந்தன் பின்னணி இசை உணர்வுபூர்வமான படத்தில் அந்த உணர்வை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. சத்தியராஜ் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் அறிமுக இயக்குனருக்கு சரியாகக் கை கொடுத்திருக்கிறது.

மேக்கிங் உள்ளிட்ட சில விஷயங்கள் மட்டுமே இந்தப் படத்தில் சிறு குறையாக உள்ளது. ஆனால், நல்ல கருத்தைச் சொல்ல ஆசைப்பட்டுள்ள படம் என்பதால் அவை பெரிதாகத் தெரியவில்லை. இந்த 'ஆலகாலம்' படத்தைப் பார்த்து ஐந்து பேராவது குடியை விட்டால் அதுவே இப்படத்திற்குக் கிடைத்த வெற்றி.

ஆலகாலம் - குடிப்பவர்களுக்கான பாடம்..

 

ஆலகாலம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஆலகாலம்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓