2.5

விமர்சனம்

Advertisement

அதர்வா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா, சூரி, "நான் கடவுள்" ராஜேந்திரன், மயில்சாமி... உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, ஓடம்.இளவரசு எழுத்து, இயக்கத்தில், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா வழங்க, ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கே.சிதம்பரம் வெளியீடு செய்திருக்கும் காதல் - காமெடி படம் தான் "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்".

ஆட்டோகிராப் பட பாணியில் தன் முன்னாள் காதலிகளைத் தேடி, தன் திருமண பத்திரிகையைத் தர, மதுரை வரும் சென்னை ஐ.டி இளைஞர் ஜெமினி கணேசன் - அதர்வா, பலே கில்லாடி பில் - டப்பில் மதுரையில் திரியும் சுருளிராஜன் - சூரி உதவியுடன், தன் காதலிகளைத் தேடியபடியே, தனது காதல் ப்ளாஷ்பேக்குகள் ஒவ்வொன்றையும் சுருளி - சூரி, இவரை அசகாய சூரனாக நினைத்து வாய் பிளக்க, பிளக்க, காட்சிகளாக நம் கண்முன் நிறுத்துகிறார். இறுதியில் சூரியின் மனைவியும் தன் முன்னாள் காதலி தான் என்பதை போட்டுடைத்து சுருளி - சூரிக்கு அதிர்ச்சி அளித்து, மாப்பிள்ளை கோலத்தில் தன் திருமண மேடையில் நிற்கும் ஜெமினி - அதர்வா, இறுதியில் யாரை திருமணம் செய்து கொள்கிறார்?, அவரது திருமணத்தில் அவர் விருப்பம் போலவே அவரது முன்னாள் காதலிகளும் சூரியும் கலந்து கொண்டனரா? இல்லையா..? என்பது தான் "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்" பட கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், இத்யாதி, இத்யாதி எல்லாம்.

தன் திருமண பத்திரிகையை நேரில் தர, முன்னாள் காதலிகளைத் தேடி வரும் ஐடி இளைஞர் ஜெமினி கணேசனாக அதர்வா, அட்டகாசம். ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா ஆகியோருடனான அவரது காதல் ப்ளாஷ்பேக்குகளும் ஹாசம் என்றாலும், அப்பா சிவாவின் எதிரிலேயே புதுமுகம் அதிதி புகாங்கருக்கு லிப் டு லிப் கிஸ் அடிப்பதெல்லாம் கொஞ்சம் ஒவராக தெரிகிறது.

சதா சர்வ நேரமும் முதுகில் சொருகிய கத்தியுடன் களேபரம் பண்ணும் சுருளிராஜன் - சூரி., சில இடங்களில் சிரிக்க வைத்து பல இடங்களில் பலமாக கடிக்கிறார். பாவம் ரசிகன்.

லாவன்யா - ரெஜினா, பூஜா - ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா - ப்ரணிதா, தேவி - அதிதி புகாங்கர் உள்ளிட்ட நான்கு நாயகியரும் கொஞ்ச கொஞ்ச நேரமே வந்தாலும் அதர்வாவுடன் கொஞ்சிப் பேசி காதல் காட்சிகளில் மிஞ்சி நடித்துக் "காட்டி" (ஐஸ்வர்யாராஜேஷ் தவிர்த்து) ரசிகனின் நெஞ்சம் அள்ளுகின்றனர் (நடிப்பில் ஐஸ்வர்யா மற்ற மூவரைக் காட்டிலும் அள்ளுகிறார் என்பது தனி...) என்பது படத்திற்கு பலம்.

சுல்தான் கட்டப்பா - "நான் கடவுள்" ராஜேந்திரன், இவருக்கு இவர் அப்பாவா என நம்ப முடியாத அளவிற்கு ப்ரணிதாவின் ஜோசியர் அப்பாவாக வரும் மயில்சாமி, நாயகர் அதர்வாவின் அப்பாவாக வரும் அம்மா டி.சிவா, அம்மா சோனியா வெங்கட் உள்ளிட்ட எல்லோரும் வழக்கம் போலவே பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றனர்.

பிரவின்.கே.எல்.லின் படத்தொகுப்பில் முன்பாதி கொட்டாவி விட வைக்கும் குழப்பம் என்றாலும், பின்பாதி பிரமாதம் என்பதற்காக பாராட்டலாம்.

எம்.ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு பெரிய குறை இல்லா அழகிய ஓவிய பதிவென்பது ஆறுதல்.
டி.இமானின் இசையில்,"அம்மு குட்டியே....", " கண்மணியே...", "வெண்ணிலா தங்கச்சி...", "ஆஹா ஆஹா ஆதாம் ஏவாள்...", "தம்பி கட்டிங்கு..." எனத் தொடங்கித் தொடரும் பாடல்கள் வழக்கம் போலவே ரசனை. ஆனால், பாடல்களில் காட்டும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கைக் கூட பின்னணி இசையில் இமான் காட்டுவதில்லை... என்பதற்கு இந்தப் படம் மேலும் ஒரு சான்று.

காட்சிகளில் ரசிகனை லயிக்க விடாது தவிக்க விடும் இமான், இனி பின்னணி போடுவதை நிறுத்திக் கொண்டு, அதில் ஸ்பெஷலிஸ்டுகளான இசைஞர் சபேஷ் - முரளி போன்றோருக்கு வாய்ப்பளிததால் தியேட்டரில் இது மாதிரி படங்களின் ஆயுள் இன்னும் சற்று கூடும் என்பது நம் எண்ணம் மட்டுமல்ல... பெருவாரியான ரசிகனின் எண்ணம் என்பதும் திண்ணம்.

ஒடம்.இளவரசின் எழுத்து, இயக்கத்தில், "ஆட்டோகிராப்பை"யும் ஜீவன் நடித்த "நான் அவனில்லை" படத்தையும் கலந்து கட்டி காமெடியாக வந்திருக்கும் முழு நீள... காதல் படமான "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்" படத்தில், ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளும் படம் முழுக்க பரவி, விரவிக் கிடந்தாலும் முன்பாதி படத்திற்கு, பின்பாதி படம் ஹாசம், வாசம்... என்பதும், காமெடி என்ற பெயரில் கொஞ்சம் கடித்தாலும்... வழக்கமான காமநெடி (படம் முழுக்க அத்தனை காதல்கள் நாயகருக்கு இருந்தும்...) படமாக இல்லாததும் ஆறுதல்!

ஆகமொத்தத்தில், "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - நிறைய ஜெமினி (காதல்) கொஞ்சம் சுருளி (காமெடி) என்பது சற்றுக்குறை!"

 

பட குழுவினர்

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓