நாயகன் - பவன் கல்யாண்
நாயகி - ஷ்ருதிஹாசன்
இயக்குனர் - கிஷோர் குமார்(டோலி)
தமிழில் அஜித் தமன்னா நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் பவன் கல்யாணின் கட்டமராய்டு திரைப்படம். ஆந்திர ரசிகர்களிடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராயுடு-வான பவன் கல்யாண் தனது நான்கு சகோதரர்களுடன் கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சகோதர்களுக்கு திருமணம் செய்தால் மனைவியர் வந்து ஒற்றுமையை குலைத்துவிடுவர் என்று எண்ணி திருமணத்தை தவிர்த்து வருகின்றார். ராய்டு.
ராயுடுவிற்கு தெரியாமல் ஆளுக்கு ஒரு காதலியுடன் சுற்றும் ராயுடுவின் தம்பிமார்கள் தங்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால் முதலில் அண்ணனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்குகின்றனர். ராய்டுவிற்கு மனம் கவர்ந்த நாயகி அவந்தியை(ஷ்ருதிஹாசன்) ராய்டுவுடன் சேர்த்து வைக்க அவரது சகோதரர்கள் திட்டமிடுகின்றனர். இருவரும் காதலிக்க துவங்கும் நேரத்தில் தனது காதலியின் குடும்பத்திற்கு இருக்கும் பிரச்சனை ராய்டுவிற்கு தெரிய வருகின்றது. அவந்தி குடும்பத்திற்கு இருக்கும் பிரச்சனை என்ன? ராய்டு இப்பிரச்சனைகளை எப்படி தீர்த்தார்? ராய்டு தனது காதலி அவந்தியை அவளது பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தாரா என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைகின்றது இப்படத்தின் இரண்டாம் பாகம்.
பவன் கல்யாண் ராய்டு வேடத்திற்கு மிகச்சரியாக பொருந்துகின்றார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிராமத்து நாயகனாக மனதில் நிறைகின்றார் பவன் கல்யாண். வசனங்களிலும், உடல் பாவனைகளிலும் வசீகரிக்கும் பவன் கல்யாண் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளில் அணல் பறக்க செய்துள்ளார். பவர் ஸ்டார் ரசிகர்கள் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் மாஸான வசனங்களிலும் கைதட்டல்களால் திரையரங்குகளை அதிரச் செய்கின்றனர். பவன் கல்யாணுக்கு ஷ்ருதிஹாசன் சரியான தேர்வு. ஏற்கனவே கபார் சிங் படத்தில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் ஷ்ருதிஹாசன் ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்து அதனை நிணைவூட்டியுள்ளது.
நகைச்சுவை நடிகர் அலி மற்றும் சிவ பாலாஜி உள்ளிட்ட பவன் கல்யாணின் சகோதர்களும் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகின்றனர். பவன் கல்யாண் மற்றும் அவரது சகோதரர்களுக்கு இடையேயான நகைச்சுவைக்காட்சிகள் சிரிப்பலைகளை உருவாக்குகின்றது. நகைச்சுவை, காதல் என செல்லும் முதல்பாதி இடைவேளைக்கு பின்னர் வேகமெடுகின்றது.
ஏற்கனவே வெற்றி பெற்ற கதையை அப்படியே அச்சு மாறாமல் இயக்குனர் கிஷோர் ரீமேக் செய்துள்ளார். யூகத்திற்கு ஏற்ப பல இடங்களில் அடுத்த காட்சிகள் அமைவது சலிப்பை ஏற்படுத்துகின்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளையும் மாஸான வசனங்களுமே இரண்டாம் பாதி முழுக்க நிறைந்து காணப்படுகின்றது.
பாடல்களுக்கு சூப்பராக வாசித்துள்ளது அணுப் ரூபன்ஸ் பின்னணி இசைக்கு சுமாராக வாசித்துள்ளார். அதிலும் இரண்டாம் பாகத்தில் வரும் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைகின்றது. பவன் கல்யாணுக்கு மாஸ் காட்டிய இயக்குனர் கிஷோர் அவரது தரத்திற்கு வில்லனை தேர்வு செய்ய தவறிவிட்டார். அழகாக தோன்றும் வில்லன் தருண் அரோரா பவன் கல்யாணின் மாஸ் ஹீரோயிசத்திற்கு முன்னால் சாதாரண வில்லனாக தெரிகின்றார்.
கிராமத்து காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக காட்சிப்படுத்தியுள்ளார் பிரசாத் முரெல்லா. கௌதம் ராஜின் எடிட்டிங் சுமார் ரகமே. முதல் பாதியில் காதல் நகைச்சுவை என அமக்களப்படுத்திய கிஷோர் இரண்டாம் பாகத்தில் திரைக்கதை ஓட்டத்தை வேகப்படுத்தாமல் சோதித்துவிட்டார். இருப்பினும், கட்டமராய்டு - மாஸ் “ராய்டு”