விவேகம்,Vivegam

விவேகம் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜித் குமார் நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் வந்திருக்கும் மற்றுமொரு மாஸ்-கிளாஸ் ஆக்ஷன் படம் தான் "விவேகம்".

இந்தியாவில் பூமிக்கு அடியில் சர்வதேச சதிக்காரர்களால் புதைக்கப்பட்டிருக்கும் 3 புளூடோனியம் அணு குண்டுகளில் ஒன்று வெடித்து ஏராளமான உயிர் சேதம் ஏற்படுகிறது. மீதி இரண்டு வெடிப்பதற்குள், முதல் ஒன்றை வெடிக்க வைத்த நடாஷா எனும் அக்ஷரா ஹாசனைத் தேடிப் பிடிக்க, செர்பியாவில் களம் இறங்கும் சர்வதேச உளவு போலீஸ் ஆபிஸர் ஏ.கே. எனும் அஜெய் குமார் அலைஸ் அஜித்குமார், அக்ஷராவை கண்டு பிடித்ததும் அவர் குற்றமற்றவர் என நம்புகிறார்.

அவரை வைத்தே மீதி இரண்டு அணுகுண்டுகளையும் செயலிழக்கச் செய்யும் முடிவில் அவரை அழைத்து வரும் அஜித் கண் எதிரிலேயே அக்ஷரா கொல்லப்படுகிறார். மேலும், அந்த நிகழ்வு முடிந்ததும் அஜித்தும், ஆர்யன் எனும் விவேக் ஓபராய் உள்ளிட்ட தன் சக போலீஸ் டீமாலேயே கொலை வெறியுடன் தாக்கப்படுகிறார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் உளவு போலீஸுக்குள்ளேயே உளவாளியாக இருக்கும் அஜித்தின் நண்பர் ஆர்யன் - விவேக் ஓபராய் தான்... என்பது தெரிந்ததும் ஆரம்பமாகிறது அஜித்தின் ஆக்ஷன் அவதாரம்.

தன்னுடன் வயிற்று பிள்ளைக்காரியாக இருக்கும் தன் காதல் மனைவி யாழினி எனும் காஜல் அகர்வாலையும், இந்திய நாட்டையும் எப்படி? ஐரோப்பிய நாடான செர்பியாவில் இருந்து கொண்டே, சர்வதேச தீவிரவாதிகளிடமிருந்தும், அவர்களிடம் விலை போன தன் நம்பிக்கை துரோகி நண்பர்களிடமிருந்தும் காபந்து செய்கிறார்.? என்பது தான் "விவேகம்" படத்தின் வேகவேகமான கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

அஜித், சர்வதேச போலீஸ் ஏ.கே. எனும் அஜெய்குமாராக வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார். அதிலும் ஐரோப்பாவின் செர்பியா தான் மொத்தப் படத்தின் கதைக் களமும் என்பது அவரது வெள்ளைக்கார லுக்கிற்கு ரொம்பவே ஆப்டாக இருக்கிறது.

மனைவி காஜலுடன் சமிக்கை மொழி பேசியபடி சமையலறையில் உதவுவதில் தொடங்கி, சண்டை காட்சிகளில் பைக் ரேஸில் பைட், பறக்கும் பாரின் இரயில்களுக்கு இடையே பைட், பனிமலையில் துப்பாக்கி சண்டைக்குப்பின் நடுங்க வைக்கும் குளிரில் உயிர் பிழைக்கும் காட்சி, மனைவியை இக்கட்டில் இருந்து காப்பாற்றி தான், தான் என துப்பாக்கி குண்டுகளாலேயே ஏ.கே என சுவரில் வரைவது.... என ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் மனிதர் மிரட்டியிருக்கிறார்.

அஜித், ரசிகர்களை ரொம்ப நேரம் காத்திருக்க விடாமல், டைட்டிலுக்கு முந்தைய இரண்டாவது காட்சியிலேயே ஒரு தீவிரவாத கும்பல் கூடாரத்திற்குள் புகுந்து, 2 கைகளிலும் துப்பாக்கியுடன் "தேங்க்யூ, நான் யார் என்பதை எப்போதும் நான் முடிவு செய்வதில்லை என்னை சுற்றி இருப்பவர்கள் தான் முடிவு செய்வார்கள்..." என பன்ச் அடித்த படி எண்ட்ரி கொடுத்து விட்டு, அவர்களது கூடாரத்தை காலி செய்து விட்டு காட்டில் பெரிய நீர் வீழ்ச்சி அணைக்கட்டில் பத்து ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான படை வீரர்கள் சூழ்ந்து நின்று சுட்டுத் துள்ள அவ்வளவு உயரத்தில் இருந்து இரண்டு ஹெலிஹாப்டர்கள் உள்ளிட்ட எதிராளிகளை சுட்டு தள்ளியபடியே கீழே குதித்து தப்பிக்கின்ற மாஸ் சீனில் தியேட்டரில் ஆரம்பமாகும் கிளாப்ஸ் ஸும், விசில் சப்தமும், படத்தின் இறுதி வரை வியாபித்திருக்கிறது.. என்பது லாஜிக் இல்லா மேஜிக் காட்சிகளைத் தாண்டி இப்படத்திற்கும் அஜித்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி!

மேலும், "வாழ்க்கையில இழக்கக் கூடாதது இரண்டு விஷயம் ஒன்னு அப்பா, அம்மாவின் அன்பையும், இன்னொன்று நல்ல நண்பனின் நட்பையும் இழக்கவேக் கூடாது", "இன்னும் இந்த உலகத்துல விலை போகாத உண்மையும் வளையாத நேர்மையும் இருக்குடா நண்பா..." என்றெல்லாம் படத்தின் ஆரம்பம் தொட்டு, இறுதி காட்சி வரை அஜித் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம் கூட்டும் வசீகரம்.

ஹேண்ட்ஸம் வில்லன் கம் அஜித்தின் நண்பனாக விவேக் ஓபராய் செம்ம... "ஒரு வழி இருந்தாலே அவன் ஆடுவான் அறுபது வழி இருக்கு... அடங்க வேமாட்டான்", "போராடம அவன் போகவும் மாட்டான் சாகவும் மாட்டான்...", "அஜெய்குமார், உங்க பார்வையில படக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா அவன் நிழலைக்கூட நெருங்க முடியாது" என்றெல்லாம் இவர் அஜித்தை போற்றிக் கொண்டே அவரை போட்டுத்தள்ள பார்க்கும் இடங்களும் அதில் இவரது நடிப்பும் ஹாசம்! அதிலும், "நண்பா, உண்மையில் இந்த உலகத்தை ஆளுறது ரகசிய அரசாங்கம்..." என விரோதியான நண்பனுக்கு தன் நிலையை புரிய வைக்க முயலும் இடங்கள் .... வாவ்!

அஜித்தின் ஆசை மனைவி யாழினியாக காஜல் அகர்வால் "நீங்க எப்படி ஏமாந்தீங்க..? ,உங்களை கலங்க வச்சவன கதிகலங்க வைக்கணும்...", என்று அஜித்தை வயிற்று பிள்ளைதாச்சியாக உசுப்பேற்றும் இடங்களிலும், "ஒரு மனைவியா எனக்கு உடலாலும் உள்ளத்தாலும், ஆத்மாவாலும் கிடைச்சிருக்கிற சந்தோஷம் எல்லா ஜென்மத்துலேயும் கிடைக்கணும்னு வேண்டிக்கறேன்..." என நெக்குருகும் இடங்களிலும் சிறப்பாய் நடித்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் காட்டிலும் சமிக்கை மொழியில் இவரும் அஜித்தும் பேசிக் கொள்ளும் இடங்கள் காதல் ரசம். கீப் இட் அப் காஜல்!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அடையாளம் தெரியாது திரியும் நடாஷா - அக்ஷரா ஹாசன் கொஞ்ச நேரமே வந்து கொலையுண்டு போய் பச்சாதாபம் ஏற்படுத்துகிறார் என்றால், நான்கு மொழி தெரிந்த அஜித்தின் மொழி பெயர்ப்பாளராக நான்கைந்து சீன்களில் வந்து காணாமல் போகும் ஆப் எனும் அருமைநாயகமாக கருணாகரன் காமெடி கிச்சு கிச்சு மூட்டுகிறார். அருமையின் அப்பாவாக குரல் மட்டும் கொடுத்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் இரண்டே சீனில் வரும் சுவாமிநாதன், உள்ளிட்டோரும் கச்சிதம்.

ரூபனின் படத்தொகுப்பு பக்கா பாஸ்ட் தொகுப்பு, வெற்றியின் ஒளிப்பதிவில் செர்பியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் செம்மய்யா!

அனிருத்தின் பின்னணி இசையும், "விடுதலை....", "காத்திருந்தேனே...", "வர்றான் பாரு..." உள்ளிட்ட பாடல்கள் இசையும் படத்திற்கு பலம்

சிவாவின் எழுத்து, இயக்கத்தில் முதலில் அஜித்தின் மனைவி காஜல் அகர்வாலை கொல்ல முயலும் விவேக் ஒபராய், அதில் தோற்ற பின், பிறகு பிரிதொரு காட்சியில் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே ஐரோப்பாவில் ஓடும் மெட்ரோ ரயில்களில் நெட் பார் பவர்களை பாலோ செய்து அவரை தூக்கி, அஜித்தை தடுக்க, பிடிக்க நினைப்பதும்... 80 நாடுகள் 8 ஏஜென்சிகளால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்ட்ட அஜித், ஹாயாக திரிந்து சாதிப்பதும்.... உள்ளிட்ட காதில் பூச்சுற்றும் லாஜிக் இல்லா மேஜிக் சமாச்சாரங்களை தவிர்த்துவிட்டு, "கடவுள் எந்த ரூபத்தில் வந்து காப்பாற்றுவார்னு தெரியாதும்மா ... இப்ப நம்ம குழந்தை ரூபத்துல வந்திருக்கிறார்...", "நான் தோத்துட்டேன்னு நானா ஒத்துக்கற வரை எவனாலும் என்னை ஜெயிக்க முடியாது...", "ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே கொண்டாடுறதும், ஜெயித்த பின் ஆடுறதும் எனக்கு பிடிக்காத விஷயம்...", "பயத்துக்கு பாஷை கிடையாது..." என்பது உள்ளிட்ட அஜித்துக்காகவே உருவாக்கப்பட்ட வசீகர வசனங்களுக்காகவும், ஒரு மாஸ் கிளாஸ் திரைப்படமாகவும் பார்த்தோம் என்றால், "விவேகம் வேகம் வேகம்..... என ரசிகனை இருக்கையோடு இயல்பாக கட்டிப்போடுகிறது."

ஆக மொத்தத்தில், "விவேகம் - வேகம், வேகம்... என்றிருக்கிறது. அது, இன்னும் கொஞ்சம், விவேகமாகவும் இருந்திருக்கலாம்!"

 

பட குழுவினர்

விவேகம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

அஜித் குமார்

நடிகர் அஜித்குமாரின் சொந்த ஊர் ஐதராபாத். 1971ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதி பிறந்த இவர், 1992ம் ஆண்டு பிரேம் புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த புதுமுகத்திற்கான விருது பெற்ற அஜித், தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படம் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்து பாசமலர்கள், பவித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித்தின் முதல் வெற்றிப்படம் ஆசை. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், வாலி, பூவெல்லாம் உன் வாசம், முகவரி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், வரலறு, பில்லா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் சிறந்த கார் பந்தய வீரர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் விமர்சனம் ↓