தினமலர் விமர்சனம் » சிறுத்தை
தினமலர் விமர்சனம்
பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல். (இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!
திருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அப்புறம்? அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி!. குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட! ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா? போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா? குழந்தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார்? தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை!
சகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல. சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்! தியேட்டரே சிரிப்பில் குளோஸ்!!
தமன்னா, கார்த்திக்கு பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு!
ஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.! தமிழுக்கு?!
வித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை!
---------------------------------
குமுதம் விமர்சனம்காமெடிக் காக்டெய்லில் காரசாரமான ஆந்திரா சைட்டிஷ்ஷோடு சீறிப்பாயும் ஒரு காக்கிச்சட்டையின் கதை.
கதை என்ன? திருட்டுப் பையன் கார்த்தி, ஒரு பெட்டியை அபேஸ் செய்யும்போது அதனுள் இருக்கும் ஒரு குழந்தை, "அப்பா என்று கார்த்தியை உரிமை கொண்டாடுகிறது. தவிர கார்த்தியைப் போட்டுத்தள்ள ஒரு கும்பலே வீச்சரிவாளுடன் சுத்துகிறது. யார் அந்த குழந்தை? கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது தெரிந்தவுடன் ராக்கெட்டாய் சீறுகிறது சிறுத்தை.
கார்த்திக்கு இது நான்காவது படம். இரட்டை வேடத்தில் முதல் படம். நல்லவன் மாதிரி சிரித்துக் கொண்டே ஆட்டையைப் போடுவதாகட்டும், குழந்தையை முதலில் வெறுத்துவிட்டுப் பின்னர் அதை ஏற்றுக் கொள்வதாகட்டும், தமன்னாவின் அழகில் சொக்கிப் போய் கிறுகிறுத்து அலைவதாகட்டும், எதிரிகளை சொல்லி அடித்து துவம்சம் செய்வதாகட்டும் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுகிறார் கார்த்தி. சந்தானம் கூட்டணி வேறு. ரகளைக்கு சொல்லவா வேண்டும்?
அதுவும் கொலை செய்யப்பட்ட பாண்டியனாக மீண்டும் எதிரியின் கோட்டைக்குள் புகுந்து, வலது காலா, இடது காலா எதை முதலில் வைப்பது என்று பல்லாங்குழி ஆடி, "டடடபா என்று டேபிள் மேல் தாளம் தட்டி, பழைய ஞாபகத்தில் வில்லனின் செயினையும் அபேஸ் பண்ணி, ஸ்டைலாய் நடந்து பின்னிப் பெடலெடுக்கும் காட்சியில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.
"நான் சாகும்போது என் கண்ணுல பயம் இருக்கக் கூடாது, உதட்டுல புன்னகை இருக்கணும், கை மீசையை முறுக்கணும்!, "போலீஸ்காரனோட உடுப்புகூட டூட்டி பார்க்கும்டா! வசனம் சில இடங்களில் பளிச்.
ஜில்லென்று இருக்கிறார் தமன்னா. வழக்கம்போல் அப்பாவி இடுப்பைக் காட்டும்போது அடப்பாவி!
படத்தில் செமையாய் ஸ்கோர் செய்கிறார் சந்தானம். வசனத்தில் அவ்வப்போது ஆபாசம் வந்தால் உடனே சிரிக்கிறார்கள்!
ராக்கெட் பாட்டு ஓகே. மற்றவை பெப்பே. தெலுங்கு வாடையும், ஆந்திரக் கூச்சலும் ஓவர் டோஸாகி எரிச்சல் மூட்டுகிறது. யார் அந்த குட்டிக் குழந்தை? கொள்ளை அழகு. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் அந்தச் சிறுமி, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, "நான் அப்பா சொல்றேன், கையை விடு என்று கார்த்தி கத்தும் காட்சி நன்று.
சிறுத்தை : கொஞ்சம் உறுமல், கொஞ்சம் இருமல்! குமுதம் ரேட்டிங் : ஓ.கே.!
------------------------------------கல்கி விமர்சனம்யாருக்கும் வளைந்து கொடுக்காத போலீசும், எல்லோரையும் வளைத்துவிடத் துடிக்கும் வில்லனும் முட்டிக்கொள்ளும் அதரப் பழசான கோடம்பாக்கத்து கொத்து பரோட்டா கதைதான் சிறுத்தை. ஆனால், என்ன மாயமோ தெரியலை. அந்த சலிப்பு தெரியாமல் படத்தை நகர்த்தி சக்ஸஸ் ஆட்டம் போட்டிருக்கிறார் இயக்குனர் சிவா. படம் ச்சும்மா கலகலன்னு நகருது!
ராக்கெட் ராஜா; ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ். கேரக்டர்களில் டபுள் கேம் ஆடியிருக்கும் கார்த்தியின் கொடிதான் படம் முழுக்க. சீனுக்கு சீன் ஆழக் காலூன்றி அலசியெடுத்திருக்கும் கார்த்தி, இப்படியே தொடர்ந்தால் அண்ணன் சூர்யாவையும் மிஞ்சிவிடலாம். ஐ.பி.எஸ். போலீஸைவிட, ராக்கெட் ராஜாவின் ரவுசு மனசை அள்ளுகிறது!
இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் மாதிரி இனி காமெடிக்கு சந்தானம். கார்த்திக்குக் கொடுக்கும் காமெடி கவுண்டரில் மனிதர், கிடைக்கும் கேப்களிலெல்லாம் கெடா வெட்டுகிறார்!
கார்த்தி - தமன்னா காதல் கெமிஸ்ட்ரி(?)யால் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைவது உறுதி! கார்த்தி எது சொன்னாலும் நம்பும் மக்கு பெண் தமன்னா, எந்த கோணத்தில் பார்த்தாலும் செம ப்யூட்டி! அவர் க்ளாமரிலும், டான்ஸிலும் சிக்ஸர் அடித்து, நடிப்பில் டக்அவுட் ஆவது ஒன்றும் புதிதல்ல!
படத்தில் சுட்டிக்காட்ட குறைகள் நிறைய; எனினும் கார்த்தி - சந்தானம் அடிக்கும் லூட்டி சுனாமியில் அத்தனையும் ஸ்வாகா! சீனுக்கு சீன் ஜாலி; டயலாக்குக்கு டயலாக் கைதட்டல் என படத்தை கொடுத்து, கமர்ஷியல் டைரக்டர் என்ற முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார் சிவா. எப்போதும்போல வித்யாசாகர் தன் இசையால் "உள்ளேன் ஐயா. அதுவும் அந்த "ஜிந்தாத்தா ஜிந்தா குழந்தைகளையும் ஆட்டம் போட வைக்கும்! ராஜீவனின் கலையால் படத்தை அழகு படுத்தியிருப்பதும் "சூப்பர்ப்! தெலுங்கிலிருந்து "டப்படித்திருப்பதால், கதையிலும், வசனத்திலும் "ஏகத்துக்கு காரம்!
லாஜிக் பற்றி கவலைப்படாமல் வயிறு குலுங்க சிரிக்க நீங்க ரெடியா? அப்போ சிரிக்க வைக்க "சிறுத்தை ரெடி. சிறுத்தை கமர்ஷியல் ராக்கெட்!