தினமலர் விமர்சனம்
இளையராஜா இசையமைப்பில், பால்கி இயக்கத்தில், அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடித்து வெளியாகியுள்ள படம் ஷமிதாப்
தயாரிப்பாளர் : சுனில் லுல்லா, ஆர்.பால்கி, ராகேஷ் ஜீன்ஜூன்வாலா, ஆர்.கே. தமனி, அபிஷேக் பச்சன்
இகாத்புரி எனும் குக்கிராமத்தில் வசிக்கும் இளைஞன் டேனிஷ் (தனுஷ்). இவனுக்கு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வேண்டும் என்பதே அவனது கனவு. டேனிஷ் வாய் பேச இயலாதவனாக இருந்தபோதிலும், பாலிவுட்டில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்துவருகிறான். தனுஷின் நடிகர் கனவு நிறைவேறுவதற்கு, அக்ஷரா ஹாசன் உதவி செய்கிறார். டேனிஷிற்கு, டப்பிங் குரல் கொடுத்து அவனை பெரிய நடிகராக்க, தனுஷ் உடன் சேர்ந்து, அக்ஷராவும் பாடுபடுகிறார். ஒருநாள், அவர்கள் அமிதாப் சின்கா (அமிதாப்பச்சன்) காண செல்கின்றனர். டேனிஷிற்காக டப்பிங் குரல் கொடுக்குமாறு, அமிதாப் சின்காவிடம் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அமிதாப் குரல் கொடுத்தாரா? டேனிஷ் முன்னணி நடிகர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை...
சீனிகம் மற்றும் பா படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குநர் ஆர்.பால்கி எடுத்துள்ள மூன்றாவது படம் ஷமிதாப். புதுவிதமான கதை தான் என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திய விதத்தில், இயக்குநர் சற்று கோட்டை விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இயக்குநர் பால்கி, அமிதாப் பச்சனின் குரலை, மிகவும் மெச்சத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதிலேயே படத்தின் மற்ற அம்சங்களை கோட்டை விட்டுள்ளார். படத்தின் சில காட்சிகள், பார்வையாளர்களுக்கு மிகவும் பிரமிப்பாக அமைந்துள்ளன. ஆனால், அதே காட்சிகள், கதையின் போக்கை சற்று விலகி செல்லவும் வைக்கின்றன. தனுஷின் நடிகர் ஆக வேண்டும் என்ற பயணம், யதார்த்தமாக அமைக்கப்படவில்லை. படத்தின் முதல்பாதி சுவாரசியமாக செல்லும் போதிலும், பின்பாதி, ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாகவே உள்ளது. இளையராஜா இசையில், பிட்லி பாடல், பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.
அமிதாப் பச்சன், நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை, இப்படத்தில் காட்டியுள்ளார். ஆனால், இந்த படத்தில், அமிதாப்பின் குரல் மட்டுமே மையப்படுத்த்துள்ளதால், அவரின் நடிப்பு, கடலில் விழுந்த நீர்த்துளி போன்று காணாமல் போய் விடுகிறது. படத்தில், அமிதாப் பச்சனி்ற்கு போட்டியாக, தனுஷ்சும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன், டிராமா, எமோஷனல் என எல்லா துறைகளிலும், தனுஷ் புகுந்து விளையாடி இருக்கிறார். தனுஷின் நடிப்பை பார்க்கும்போது, பாலிவுட்டில் அவருக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது என்பதை அவர் இப்போதே குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த படத்தின் மூலம், திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ள கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசனும் நடிப்பில் மிளிர்ந்துள்ளார். படத்தின் மூன்றாவது ஹீரோ என்று அக்ஷரா ஹாசன் என்று சொல்லுமளவிற்கு, அவரது நடிப்பு அமைந்துள்ளது.
எதிர்பார்ப்புகளை சில இடங்களில் பூர்த்தி செய்ய தவறி இருந்தாலும், அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்...
ரேட்டிங் : 3.5/5