தினமலர் விமர்சனம்
பாபி சிம்ஹா ஸோலோ ஹீரோவாக நடித்து, தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் வெளிவந்திருக்கும் பொலிட்டிக்கல் சட்டையர் திரைப்படம்.
ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் புதியவர் சரத் இயக்கியிருக்கும் கோ-2 படத்தின் கதைப்படி, அநாதையான தன்னை வளர்த்து ஆளாக்கி, மீடியா பர்ஸ்னாலிட்டியாக மிளிரவும் செய்து வாழ்வு ஏற்படுத்தி தந்த சமூக சேவகரான தேச பக்தரையும், அவரது வாரிசையும் தன் அரசியல் சுயலாபத்திற்காக தீர்த்துக் கட்டும் அமைச்சரை தன் புத்திசாலிதனத்தால் ஒழித்து கட்ட முயலும் ஒரு தைரியசாலி நிருபரின் சாமர்த்தியமும், சாதுர்யமும் தான் கோ-2 படத்தின் மொத்த கதையும். இக்கதையினூடே அவரது காதலையும், நட்பையும் கலந்து கட்டி கலர்புல்லாக ஒரு முழு நீள பொலிட்டிக்கல் சட்டையர் படத்தை பளிச் சென தந்திருக்கிறது கேர-2 டீம்!
அநாதையாக, சமூக அக்கறை கொண்ட நிருபராக, முதல்வரை கடத்தும் துணிச்சல்காரராக பாபி சிம்ஹா., பக்கா!
தமிழக முதல்வர் பிரகாஷ்ராஜை மந்திரி மகன் பாலசரவணன் உதவியுடன் கடத்தி வைத்துக் கொண்டு, சாவகாசமாக தன் டிமாண்ட் என, போலீஸிடம் ஏடிஎம்மில் எடுத்து பேங்கில் கிழித்ததன் ஆயிரம் ரூபாய் திரும்ப வேண்டுமென பிடிவாதம் பிடிப்பதில் தொடங்கி, தனக்கு பிடித்த காந்தி படத்தை தவறான காரியங்களுக்கே பெரிதும் பயன்படும் ரூபாய் நோட்டில் இருந்து தூக்கி கள்ள நோட்டுகளுக்கும், கருப்பு பணத்திற்கும் விடை கொடுக்க வேண்டும்... என தொடர்ந்து, விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தில் இரட்டை வேஷம் போடும் மத்திய, மாநில அரசுகளை தான் கடத்தி வந்த முதல்வருக்கு முன், சாடுவது வரை... சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.
நாயகி நிக்கி கல்ராணியுடனான காதல் காட்சிகளிலும் கூட பாபி பக்கா சாமி! ஒரு காட்சியில் பாபியை பார்த்து இவர் பேசும் வசனம் எங்கப்பாம்மா வர்றதுக்குள்ள வேல தேடிக்கோ, இல்ல வேற (ஆள்) தேடிக்கோ... என்பதாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நாயகருக்கு உதவும் நாயகியாக நிக்கி கல்ராணி சந்தோஷமமம்மணி!
பாபியால் கடத்தப்பட்ட முதல்வராக பிரகாஷ்ராஜ், ஆரம்பத்தில் பீ.பி.ராஜா-வும் பின், பாபிசிம்ஹாவை புரிந்து கொண்ட தலைவனாகவும் வழக்கம் போலவே கச்சிதம்.
பாபியின் நண்பர் கம் நல்ல அமைச்சரின் வாரிசாக பால சரவணன் பர்பாமென்ஸ் செம மாஸ். போலீஸ் விசாரணையில் தளபதி, காதல் தேசம், படக்காட்சிகளை கலந்து சொல்லி தப்பிக்கும் அவரது சாமர்த்தியம் செம ஹாஸ்யம். சுவாரஸ்யம் .
கெட்ட அமைச்சராக இளவரசு, தொண்டர் படை தலைவராக மயில்சாமி, கெஸ்ட் அப்பியரன்ஸ் நாசர், கருணாகரன் உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
லியோன் ஜேம்ஸின் இனிய இசை, பிலிப் ஆர்.சுந்தர் & வெங்கட்.என்-னின்அழகிய ஒளிப்பதிவு, கே.ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு எல்லாம் சரத்தின் இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளையும் மறந்து, மறைத்து " கோ அளவிற்கு ரசிகனை "கோ-2 ஓடும் திரையரங்கிற்கு "கோ- டூ" என கொண்டு வருவதும் நிச்சயம்!
கோ - 2 - டைமிங்-டூ-பாபி சிம்ஹா அண்ட் கோ!