தினமலர் விமர்சனம்
‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா ஜோடி மீண்டும் நடித்து, தஞ்சை மண் மணம் கமல வெளிவந்திருக்கும் படம் தான் "திருநாள்".
கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள் கதைப்படி, ஹீரோ ஜீவா, பிளேடு எனும் பெயரில் ஒரு பெரிய மனிதரின் கையாளாக கட்டப் பஞ்சாயத்து, தாதாயிஸம் எல்லாம் செய்து வருகிறார். பெரிய மனிதரின் தொழில் பார்ட்னர் ஜோ மல்லூரி அவரது மகள் நயன்தாரா. இக்கட்டான சூழலில் நயனை, ஜீவா காப்பாற்ற இருவருக்கும் ஏற்கனவே கனவிலும், நிஜத்திலும் இருக்கும் காதல் பூத்து காய்த்து குலுங்குகிறது. அக்காதல், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கனிந்த தா? காலியானதா..? என்பது தான் "திருநாள் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.
ஜீவா - பிளேடாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். நாகா - சரத் லோகித் சிவாவை கொண்டாடும் இடத்திலும் சரி, பின் அவரையே எதிர்த்து களம் இறங்கும் காட்சிகளிலும் சரி வழக்கம் போலவே பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். வாவ்.
அதே மாதிரி, நயன்வுடனான காதல் காட்சிகளிலும் கதகளி ஆடியிருக்கிறார் பேஷ், பேஷ்! ஜீவா நயனுக்காக, எல்லையம்மனுக்கு நேர்ந்து கொண்டு மாலை தாலி வாங்கி கட்டும் காட்சியில், எதிரிங்க என்னை வெட்ட வந்தப்போ கூட நான் எந்தசாமியையும் வேண்டியதில்லை... உனக்கே தெரியாமல் உன்னை எவ்வளவு நாளா லவ் பண்றேன் தெரியுமா? என்றபடி ஜீப்பில் கிளம்பும் இடத்தில் ஜீவா செம ரொமான்ஸ் பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். அப்போது ஒளி ஒலிக்கும் ‛பழைய சோறு பச்சை மிளகாய்.... பாடலும் பலே, பலே!
நயன்தாரா - வித்யாவாக, சாக்கு மண்டி முதலாளியின் நீக்கு போக்கு தெரிந்த டீச்சர் மகளாக கன கச்சிதம். ஜீவா நயனை ஒரு காட்சியில், காப்பாற்றி காரில் வைத்துக் கொண்டு மாலை தாலி எல்லாம் வாங்கிடும் காட்சி நயன்தாரா பதறும் இடம், பதம்.
திக்குவாய் மணியாக கருணாஸ், இன்ஸ் மாரிமுத்து, நாகாவாக சரத் லோகித் சிவா, ஏசிபி புகழேந்தியாக "நீயா நானா கோபிநாத், பருத்தி வீரன் சுஜாதா, அவரது கடன்கார கணவராக யோகி தேவராஜ், மீனாட்சி, நயனின் அப்பா ஜோ மல்லூரி, அம்மா ரமா, தாய் மாமா அப்புக்குட்டி - ராமதாஸ் எல்லோரும் கச்சிதமாக கலக்கியிருக்கின்றனர்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் தஞ்சை, கும்பகோணம் பகுதி பச்சை பசேல் கொள்ளை அழகு. ஸ்ரீயின் இசையில் பழைய சோறு பச்சை மிளகாய் ...., கரிசகாட்டு கவிதையே ..., திட்டாதே நீ .... உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட வைக்கும் ராகம். பின்னணி இசையும் பிரமாதம். வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்யின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு !
பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் தஞ்சை பகுதி அடியாட்கள், ரவுடிகள் சங்கறுத்துடுவேன்.... (கழுத்தறுப்பது தானே தஞ்சை தமிழ்?) என்பது உள்ளிட்ட மதுரை பாஷை பேசி வெறுப்பேற்றுவது உள்ளிட்ட இன்னும் சில குறைகளை கண்டு கொள்ளாது விட்டால்., ,"பொறுக்கி வாழ்க்கைன்னாலே இப்படித்தான் பிளேடு... உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு கேள்வி பட்டேன் எங்களுக்கெல்லாம் அமையல... விட்டுடாதே..." எனும் நல் வாழ்க்கைக்கு ஏங்கும் ரவுடியின் அட்வைஸ் உள்ளிட்ட நல்ல விஷயங்களுக்காக திருநாளை கொண்டாடலாம்!
மொத்தத்தில், "திருநாள் - கொண்டாட்டம்!"