ஒக லைலா கோசம் என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல ஹீரோவான நாக சைதன்யா நடித்திருக்கும் படம் தான் தோசெய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிரிதி சனோன் நடித்துள்ளார்.
சுவாமி ரா ரா பட புகழ் சுதீர் வர்மா இயக்கி உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில், ஹீரோ நாக சைதன்யாவுக்கு வித்தியாசமான வேடம் என்றே சொல்ல வேண்டும். படத்தின் தொடக்கத்திலேயே வங்கியில் கொள்ளை நடிக்கும் காட்சி காட்டப்படுகின்றது. இந்த கொள்ளையை டானான மாணிக்யம் (புசனி) திட்டம் போட்டு அதனை நிறைவேற்ற ரகு ராஜு மற்றும் பரத் ராஜு ஆகியோரை அனுப்புகிறார். இந்நிலையில் ஹீரோ சந்துவின் (நாக சைதன்யா) அப்பாவான ராவ் ரமேஷ் ஒரு நேர்மையான டாக்ஸி டிரைவராவார். சந்துவின் சகோதரி டாக்டருக்கு படிக்கிறார். இப்படியாக இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கின்றது. திடீரென ராவ் ரமேஷ் செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார். நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கின்றது. இதனை அடுத்து சந்துவின் குடும்பம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிறது. குடும்பத்தின் மொத்த பொறுப்பும் சந்துவின் மேல் விழுகிறது. சந்து பண நெருக்கடிக்கு ஆளாகுகிறார்.இந்நிலையில் வில்லன் கொள்ளையடித்த பணம் சந்துவிடம் வந்து சேருகின்றது. அதனை அடுத்து சிக்கலில் மாட்டுகிறார். இந்நிலையில் கதாநாயகியான கிரிதி சனோனை சந்தித்து காதலில் விழுகிறார்.
இக்கட்டான சூழ்நிலையில் அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற என்னென்ன செய்கிறார்? குறிப்பாக அவருடைய சகோதரியின் படிப்புக்கு எவ்வாறு உதவுகிறார்? தனது தந்தை குற்றமற்றவர் என்பதை எவ்வாறு நிரூபிக்கிறார்? காதலியோடு எப்படி ஜோடி சேருகிறார்? இதுதான் படத்தின் மீதிக்கதையாகும்.
இந்த படத்தில் நாகசைதன்யா ஸ்டைலிஷாக இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். அவரை இந்த படத்தின் மூலம் புதிய பரிணாமத்தில் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனகச்சிதமாக நடித்துள்ளார். கதாநாயகி கிரிதி சனோன் மிகவும் அழகாகவும், வசீகரமாகவும் வலம் வருகிறார். இவருக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே அமையப்பெற்ற காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. சினிமா நடிகர் புல்லட் பாபுவாக வரும் பிரம்மானந்தம் நகைச்சுவையில் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். வில்லன் புசனி கிருஷ்ணா முரளி தனது நடிப்பில் முத்திரை பதித்து உள்ளார். இந்த படத்தின் ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. எதிர்பாரா திருப்பங்களை தந்து படத்தின் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை.
படத்தின் முதல் 30 நிமிடங்கள் மிகவும் மெல்ல ஊர்ந்து செல்வது போல விறுவிறுப்பு இல்லாமல் செல்கிறது. பாடல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நம்ப முடியாத வகையில் சில காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு உள்துறை அமைச்சரின் பி ஏ வை மிரட்டும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை.
இயக்குனர் சுதீர் வர்மாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு கிரைம் கதைக்களத்தில் காமெடியை சரியாக கலந்து நல்ல பொழுது போக்கு படத்தை தந்து இருக்கிறார். வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும். பிரபல இசை அமைப்பாளரான சன்னி எம் ஆரின் இசை ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரபல தயாரிப்பாளரான பி வி எஸ் என் பிரசாத் தயாரித்திருக்கிறார்.
இந்த படம் ஹீரோ நாக சைதன்யாவின் வெற்றி பட லிஸ்டில் சேர அனைத்து வாய்ப்பையும் பெற்றுள்ளது என்றே கூறவேண்டும்.
மொத்தத்தில் இந்த படம் கோடையில் இடி, மின்னலுடன் பெய்த மழை போல ரசிகர்களை மகிழ்விக்கிறது.