தினமலர் விமர்சனம் » மரியாதை
தினமலர் விமர்சனம்
கெடுவான் கேடு நினைப்பான், உழைப்பவரே உயருவார்... என்பதை எல்லாம் வலியுறுத்தி வெளிவந்திருக்கும் வழக்கமான விக்ரமன் படம்தான். அதுவும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க வேண்டி படம்.
கதைப்படி அப்பா - மகன் என இரட்டை விஜயகாந்துகள். ஊரே போற்றும் பெரிய மனிதரான அப்பா விஜயகாந்துக்கு தப்பாமல் பிறந்திருக்கும் பிள்ளை விஜயகாந்த். விவசாய பட்ட படிப்பு படித்து விட்டு ஊரில் உள்ள விளை நிலங்களில் தன்னிடம் உள்ள டிராக்டரால் உழுது கட்டு கட்டாக பணம் சம்பாதிக்கிறார். ஊருக்கே நல்ல பிள்ளையாக இருக்கும் அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வரும் அப்பா விஜயகாந்தின் நண்பர் மகள் மீராஜாஸ்மினிடம் முகம் கொடுத்தும் பேச மறுக்கிறார். இதற்கான காரணம் என்ன? என ஹீரோவின்... அதாங்க கேப்டனின் தங்கையிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் மீரா, அதன் பின் விஜயகாந்தை விரட்டி விரட்டி காதலிக்கிறார். மீராவிடம் முகம் கொடுத்து பேச மறுத்து மகன் விஜயகாந்த் ஓட காரணம் என்ன? ஊர் பெரிய மனிதரின் பிள்ளை உழைத்து, உழைத்து ஓடாய் தேய்வதின் ரகசியம் ஏது? மீராவின் காதல் என்ன ஆனது? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மரியாதை படத்தின் கதை.
அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் விஜயகாந்த், அப்பாவின் பெரிய மீசையை எடுத்து சின்ன மீசை ஆக்கி விட்டால் இரண்டு விஜயகாந்தும் ஒன்றுதான் என்று சொல்லத் தூண்டும் அளவு அப்பா - மகன் பாத்திரங்களில் வித்தியாசம் இல்லாமல் நடித்திருக்கிறார் விஜயகாந்த்.
அப்பா விஜயகாந்தின் சமைக்க தெரியாத ஜோடியாக அம்பிகா, மகன் விஜயகாந்தின் ஏமாற்றும் ஜோடியாக மீனா, ஏமாந்த(?) ஜோடியாக மீரா ஜாஸ்மீன் மூவரின் மீரா - மீனா இருவரும் ஓ.கே!. அதிலும் வில்லி மீனா படு கில்லி!
விஜயகாந்த் வீட்டு வேலை ஆளாக ரமேஷ் கண்ணா செய்வதெல்லாம் காமெடியாம்! நம்புவோம்!!
மேற்கண்டவர்கள் தவிர அம்மு, நாசர், நிழல்கள் ரவி, சம்பத், தலைவாசல் விஜய், சண்முகராஜன், அரி ராஜ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே மரியாதையில் மரியாதையாக நடித்துள்ளனர். எல்லோருமே அளவிற்கு மீறி நடித்திருப்பதால் இது திரைப்படமா? நாடகமா? எனும் சந்தேகம் எழுகிறது ஆரம்ப கட்டத்திலேயே!
ஊர் பெரிய மனிதர் விஜயகாந்த், யார் எதை கொடுத்தாலும் நிவாரணமாக கை நீட்டி வாங்கிக் கொள்வதும், பெண்ணுக்கு சம்பந்தம் பேசிய இடத்திலேயே அவர்கள் ஊருக்கு தெரியாமல் தரும் டவுரிக்கு டபுள் ஓ.கே. சொல்வதும் இவர் பெரிய மனிதர்தானா? எனும் சந்தேகத்தை கிளப்புவதை தவிர்த்திருக்கலாம். அதே மாதிரி பி.எஸ்சி., அக்ரிகல்சர் படித்த புத்திசாலி மகன் விஜயகாந்த். காதலி மீனாவின் கடனுக்காக... அதுவும் எட்டு லட்சம் கடனுக்காக ரிஜிஸ்தர் ஆபிஸ் சென்று 150 ஏக்கர் சொத்தையும் எழுதி கொடுப்பதுகூட தெரியாமல் எழுதி கொடுப்பதும் ஹைலைட் காமெடி.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லா விஷயங்களிலும் விக்ரமன் தனது முந்தைய படங்களையே காப்பி அடித்து தனக்கு கிடைத்த ரீ-ரவுண்ட் வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வேதனை! சரி... கதை, இயக்கம் இத்யாதி இத்யாதிகளில்தான் கோட்ைட விட்டிருக்கிறார், இசைக்கு ஆண்டனியை ஒப்பந்தம் செய்திருக்கிறாரே எனப் பார்த்தால், விஜய் ஆண்டனியும் விக்ரமனுடன் சேர்ந்ததால் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகி லாலி லா..ல..,ல.. லாலா... பாடியிருக்கிறார். ரீ-மேக் எம்.ஜி.,யார் பாடலான இன்பமே உந்தன் பேர் பெண்மையோ மட்டும் இசையிலும், காட்சிப்படுத்தலிலும் ஜொலிக்கிறது.
இந்த படத்தின் ஆடியோ ரீலிஸ் விழாவில், விஜயகாந்த், விக்ரமன், விஜய் ஆண்டனி ஆகிய மூன்று வி,க்கள் சேர்ந்திருப்பதாக கூறினார்கள். ஆனாலும் விஜயகாந்தின் ரசிகர்கள் மனது வைத்தால்தான் வெற்றி எனும் வி இவர்களுக்கு கிட்டும்.
மரியாதை : விக்ரமனின் வழக்கமான ஹீரோக்கள் சுயசரிதை.