Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்,Kunguma Poovum Konjum puravum
  • குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
  • ராமகிருஷ்ணன்
  • தர்ஷணா
  • இயக்குனர்: ராஜமோகன்
06 மே, 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்



தினமலர் விமர்சனம்


சாதி, தகுதி எல்லாம் கடந்து தயாய், பிள்ளையாய் பழகும் இரண்டு குடும்பங்களின் இளசுகளிடயே காதல் கண்ணாமூச்சி காட்டினால் என்னாகும்? என்பதை அப்பட்டமாய், ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லியிருக்கும் அழகிய படம்தான் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படம்!

பள்ளி இறுதியாண்டு படிக்கும் கூச்சனுக்கு, குடும்ப சூழலால் வேறு ஊரில் இருந்து, அதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்க வரும் துளசி மீது காதல்! தளசியின் வீடும், கூச்சனின் வீடும் அருகருகே அமைந்து விடுவதால், அந்த  காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வெகு வேகமாக வளருகிறது. ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் கூச்சனின் தாய்க்கு தெரியவருகிறது. அ‌ந்த நேரம் பார்த்து நாயகன் கூச்சன் கல்வி சுற்றுலா போய்விடுகிறார். ஒரு சில காரணங்களால் அந்த சுற்றுலாவிற்கு போகாத நாயகி துளசியை முச்சந்தியில் நிறுத்தி, அடித்து துவைத்து, முடியை அறுக்கிறார் கூச்சனின் அடாவடி தாய். அடக் கொடுமையே... அப்புறம்? ஓடு காலி அம்மா - அப்பாவிற்கு பிறந்ததால் அனாதையான நாயகி துளசி, பஞ்சம் பிழைக்க தன் பாட்டியுடன் வந்‌த இடத்தில் பட்ட அவமானம் போதுமென மூட்டை முடிச்சுகளுடன்சொந்த ஊர் கிளம்ப... கல்விச் சுற்றுலா முடித்து திரும்பும் கூச்சன், துளசியை சந்தித்தானா? இல்லையா? துளசி குடிகார அக்காள் புருஷனின் இச்சைக்கு பலியானாரா... இல்லை என்ன ஆனார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு எதிர்பாராத எண்ணற்ற திருப்பங்களுடன் படம் பார்க்கும் நம்மை திடுக்கிட வைத்து நகர்கிறது மீதிக் கதை!

நாயகன் கூச்சனாக புதுமுகம் ராமகிருஷ்ணன் யதார்த்த நாயகன். நாயகி துளசியாக புதுமுகம் தனன்யா பருவத்து வனப்புகளுடன் பளிச்சிடும் யதார்த்த நாயகி. இருவரும் நடிக்கவும் இல்லை... வாழவும் இல்லை...! இந்த இருவர் மூலமும் படம் பார்க்கும் நாம் நமது பால்ய காலத்து பள்ளி பருவத்திற்கு சென்று விடுகிறோம். குறைந்தபட்சம் மீண்டும் பள்ளி பருவத்து பழைய காதலி - காதலனை சந்திக்க மாட்டோமா? என ஏங்கித் தவிக்கிறோம்! இருவரும் அத்தனை இயல்பான தேர்வு!

மேற்படி இருவர் மாதிரிய நாயகனின் அம்மா அகம்மாவாக வரும் சந்திரா, நாயகியின் பாட்டி நாகம்மா, மாமியார் சிந்தாமணியாக வரும் ஈஸ்வரி, நாயகனின் நண்பர்களில் ஒருவராக ராஜீவ், கணவன் தர்மாவாக தருண் சத்ரியா, வில்லன் சந்திரனாக சரோஜா நாகேந்திரன் உள்ளிட்டவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்றாலும் எல்லோரும் பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு! பிரமாத‌மான நடிப்பு! சபாஷ்!!

சோகமான காதல் கதை! சோகமான முடிவை நோக்கித்தான் போகும்.. என தெரிந்தாலும் இத்தனை சோகம் ஆகாதப்பா... என உச் கொட்ட வைத்து விடும் இயக்குனர் ராஜ்மோகன், தன் முதல் படத்திலேயே நச், டச், இயக்குனர் என்று பெயரெடுத்து விட்டார். பேஷ், பேஷ்! கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கு பொறுப்புகளை ஏற்று, பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகி விட்டிருப்பதுடன், இயல்பான வசனத்தில் செண்டமே வாங்கி விடுவது ராஜ் மோகனின் ஹைலைட்!

இயக்குனருக்கு யுவன் சங்கர்ராஜாவின் இசை, சித்தார்த்தின் ஒளிப்பதிவு, பாரவின் கே.எல்., மற்றும் ஸ்ரீகாந்தின் எடிட்டிங், அஜய் ராஜ், சரவண ராஜனின் நடனம், வித்தேஷின் கலை, எஸ்.பி.சரணின் தயாரிப்பு எல்லாம் பக்கபலமாக இருந்து பலம் தந்துள்ளது சிறப்பு! அடிக்கடி தண்ணி, சிகரெட் என பள்ளி மாணவர்கள் குடிப்பதையும், கூத்தடிப்பதையும் கூடுமானவரை தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாய் இருந்திருக்கும் இந்த படம்.

நாகர்கோயில், முட்டம், தூத்துக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மீண்டும் ஒரு கடலோர கவிதைகள் என்றால் மிகையல்ல!

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - திரை உலக(ம்) வசூலில் மிஞ்சும் பாரும்!


 


 


------------------


 


விகடன் விமர்சனம்




அலையோடு விளையாடி அழகாக வளரும் இளம் பருவம் காதல். சூழல், புயலால் சுனாமி ஆகிக் கொந்தளிப்பதே குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்.


 


முட்டத்தின் விடலை மாணவன் கூச்சனுக்கு (அறிமுகம் ராமகிருஷ்ணன்) அம்மாவே உலகம். அந்த ஊருக்கு புதிதாக வரும் துளசிக்கு (அறிமுகம் தனன்யா) அவரது பாட்டி தான் ஒரே சொந்தம். கூச்சனின் தாய் துளசிக்கு அடைக்கலமும் ஆறுதலும் தருகிறார். காதல் துளிர்க்கிறது. விஷயம் தெரிந்து வில்லியாகும் கூச்சனின் அம்மா (அறிமுகம் தான்... ஆனால், நடிப்பில் அசத்தும் முகம்!) துளசியை அவமானப்படுத்தி ஊரை விட்டு துரத்துகிறார். திரும்பி வரும் காதலனோ காத்திருக்கும் காதலியை சந்திக்க முடியாமல் போக... விதியின் விளையாட்டு அந்த பெண்ணை அடுக்கடுக்காக அலைக்கழித்து மறுபடி கொண்டு வந்து அந்த கிராமத்திலேயே ஒரு சக்கையாக துப்புகிறது.


 


பழைய காதலர்கள் புதிய சோகங்களுக்கு நடுவே என்ன ஆகிறார்கள் என்பதை சோகம் பிழிய பிழிய சொல்லிக்கொண்டே போகிறது கதை! கூட்டம் கூட்டமாக அத்தனை புதிய முகங்களை வைத்துக்கொண்டு, முட்டம் கடலோரத்தை நம் காலடியில் அலையாட விட்டிருப்பது ஒரு புதுமுக இயக்குநர் (இராஜமோகன்) என்றால், நம்பத்தான் முடியவில்லை. ரத்தச்சுவடுகள் காயாத தெருப்பாதையும், எல்லாத் திசைகளிலும் அடர்த்தியாக கவிழந்திருக்கும் மௌனமும், அத்தனை பேர் முகத்தில் அப்பியிருக்கும் சோகமுகமாக துவங்கும் ஆரம்ப காட்சி எதிர்பார்ப்பை கூட்டுகிறது.


 


அதற்கேற்ப, சடாரென்று கலகலப்பாகும் ப்ளாஷ்பேக் காட்சிகள் கள்ளமில்லாத கிராமத்து காதலையும், வெள்ளந்தியான நண்பர்களையும் முன்னால் நிறுத்தி விறுவிறுப்பை கூட்டுகிறது. ஆனால், பின்பாதி, ஐயையோ என்ற அடித்தொண்டை அலறலும், டேஏஏஏஏய் என்ற செவி கிழிக்கும் சவாலுமாக மென்மை முழுக்க தொலைந்து, எதிர்பார்ப்பு ஏவுகணையை தரை தட்ட வைத்துவிடுகிறது.


 


அசட்டு சிரிப்பு முகம்... அதுவே பிறகு அத்தனை சீரியஸ் என்று ஆச்சர்யப்படுத்துகிறார் ராமகிருஷ்ணன். இயக்குநர் சேரனின் உதவியாளராமே சில எக்ஸ்பிரஷன்கள் கூட அதை ஞாபகப்படுத்துகிறது.


 


சட்டை மாட்டிய மாணவியில் தொடங்கி, வாழ்ந்து கெட்ட மனைவி வரைக்குமாக நாயகி தனன்யாவும் தான் அசத்தியிருக்கிறார். முகச் சுருக்கங்களையும் தாண்டி கையேந்தி நின்று பரிதாப பார்வை பார்க்கும் இடங்களில் பாட்டி நாகம்மாள் நம் இதயத்தில் நச்சென்று நங்கூரம் பாய்ச்சுகிறார்.


 


சட்டமிட்ட வண்ண ஓவியத்தில் இருப்பது போல் முட்டத்தை காட்டியிருக்கும் கேமராமேன் சித்தார்த்ததின் கைகளை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். ராசாத்தி கிளியே, சின்னஞ்சிறுசுக... பாடல்களில் யுவன் இசை கடற்கரை மென்காற்று.


 


குழந்தைத்தனமான வார்த்தைகள், விடலைத்தனமான குறும்புகளை ரசித்துலயித்து கொண்டு இருக்கும்போதே.. தடலாடியாக எட்டி பார்க்கிறது. அறிவுஜீவித்தனமான நிலா தத்துவம்! அதன் பிறகு வரும் பல காட்சிகளிலும் பார்முலா எட்டிபார்க்க ஆரம்பித்து, முன் பாதியின் பிளாஸ்களையும் தட்டி பறித்து விடுகிறது.


 


விகடன் மார்க் : 41/100


 


 


------------------


 


குமுதம் விமர்சனம்


 


 


வழக்கமான காதல் கதைதான். பெரியவர்கள் சுயநலச் சோழி உருட்டியதில் பிரிய நேர்கிற ஒரு ஜோடி, அவர்கள் ஆசைப்பட்டதற்கு நேர் எதிரான வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிற வேதனையை காட்டியிருப்பது கொஞ்சம் புதுசு. இதையெல்லாம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற யதார்த்தத்துடன் அறிமுக இயக்குனர் ராஜமோகன் காட்சிப்படுத்திய விதம் தியேட்டரில் உட்கார வைக்கிறது.


 


பள்ளி நாட்களில் நமக்கு அறிமுகமான தோழிகளின் சாயலில் இருக்கிற புதுமுகம் தனன்யா படத்தின் ஜீவநாடி. வாழ்க்கை புரியாத  நாட்களில் சின்னச்சின்ன பிரச்னைக்குக் கூட பாட்டிக்குப் பின்னால் பதுங்குவதும் அதே வாழ்க்கை தடம் புரண்ட பிறகு சண்டைக்கோழியாக எகிறுவதுமாக துளசி கேரக்டரில் ஜொலிக்கிறார். ஊரிலுள்ள பல பாசக்காரப் பயல்களை ஞாபகப்படுத்தும் ஹீரோ ராமகிருஷ்ணஷனும்  கவனிக்க  வைக்கிற இன்னொரு அறிமுகம். வயதுக்கு வந்த தனன்யாவிடம் "நானும் பெரிய மனுஷன் ஆகிட்டேன்' என்று இவர் நடத்தும் அடலஸண்ட் பட்டிமன்றம் ஜாலி கலாட்டா.


 


தனன்யா ஒரு பொறுக்கி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, பரிதவிக்கிற தூத்துக்குடி எபிசோடுதான் படத்தின் மிக சுவாரஸ்யமான பகுதி.  முகத்தில் கிரிமினல் களை தாண்டவமாடுகிற தர்மன் கேரக்டருக்கு புதுமுகம் சரண் சத்ரியன் செம பொருத்தம். "எங்க அக்கா தேவடியாதாண்டா. ஆனா அதை நீ சொல்லக்கூடாது' என்று தெருச் சண்டையில் லும்பன்களுக்கே உரிய நியாயத்தை அவர் எடுத்து வைக்கிற வசனம் சுள்ளெவன உறைக்கிற காரம்.


 


மகளின் இலையிலிருந்த கோழிக்கறியை கொழுந்தியாளுக்கு கொடுத்து மடக்கப் பார்க்கிற மாமன், சில "அட்ஜஸ்ட்மெண்ட்'களுடன் வாழச் சொல்லும் விவகாரமான அக்கா உட்பட சில கேரக்டர்களை சுலபத்தில் மறக்க முடியாது.


 


இயக்குனர் சொல்ல நினைத்த கடலோரக் காதல் கதையை அப்படியே பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் சித்தார்த்துக்கு அழுத்தமாய் ஒரு  சபாஷ். பின்னணி இசையில் யுவன் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். தனன்யாவுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் இடையே காதல் வளரும் ஆரம்பக் காட்சிகள் நம் கையில் வற்புறுத்தித் திணிக்கப்பட்ட அடுத்த வீட்டு ஃபோட்டோ ஆல்பம். வழவழ காதலைச் சற்று கத்திரிக்கலாம்.  தனன்யாவைத் தேடி வருகிற ராமகிருஷ்ணன் அவரது கழுத்தில் ஏறுவதைப் பார்த்து தூரத்தில் கதறுவதும், உண்மைக் காதலை  நிரூபிக்கும் விதத்தில் க்ளைமாக்ஸில் இருவரும் ஒரே நேரத்தில் இறப்பதும் தமிழ் சினிமா பல முறை பார்த்து விட்ட நாடகத்தனம்.


 


குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் : ஜெயிக்கிற கூட்டணி.


குமுதம் ரேட்டிங் : ஓகே.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in