வல்லமை,Vallamai

வல்லமை - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : பேட்லர்ஸ் சினிமா
இயக்கம் : கருப்பையா முருகன்
நடிகர்கள் : பிரேம்ஜி, திவ்யதர்ஷினி, தீபா சங்கர், வழக்கு எண் முத்துராமன், சி. ஆர். ரஞ்சித், சூப்பர் குட் சுப்பிரமணி, சுப்பிரமணியன் மாதவன், திலீபன்.
வெளியான தேதி : 25.04.2025
நேரம் : 2 மணி நேரம்
ரேட்டிங் : 2.5/5

கதைக்களம்
மனைவியை இழந்த பிரேம்ஜி தன் மகளுடன் சொந்த ஊரான அரியலூரில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மூலம் குடியிருக்க வீடும், போஸ்டர் ஒட்டும் வேலையும் கிடைக்கிறது. தன் மகள் திவ்யதர்ஷினியை வீடு அருகே உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்ட போகும்போது மகள் தனியாக இருக்க பயப்படுகிறாள் என்பதற்காக தன் உடனே மகளையும் கூட்டிக்கொண்டு தெருத்தெருவாக சென்று போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் மகள் படிக்கும் அரசு பள்ளிக்கு 50 லட்சம் நிதியை தொழிலதிபர் சி.ஆர்.ரஞ்சித் வழங்க முன் வருகிறார். இதற்காக அவருக்கு ஒரு பாராட்டு விழா நடக்கிறது. அந்த பாராட்டு விழாவில் திவ்யதர்ஷினி பரதநாட்டியம் ஆடுகிறார். அவருடைய நடனத்திற்கு பாராட்டு குவிகிறது. அதன் பிறகு உடை மாற்ற சென்ற திவ்யதர்ஷினி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். அவரிடம் அப்படி நடந்து கொண்டது யார்?, அந்த விஷயம் பிரேம்ஜிக்கு எப்படி தெரிந்தது? அவரை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் நடைபெறுவது குறித்து பல படங்கள் வந்திருந்தாலும் கடந்த ஆண்டு வந்த மகாராஜா படம் ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தது. அந்தப் படத்தின் கருவை வைத்து வல்லமை என்ற இந்தப் படத்தை இயக்குனர் கருப்பையா முருகன் இயக்கியிருக்கிறார் போல. இருப்பினும் திரைக்கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பதாலும், காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதாலும் படத்தை ரசிக்க முடியவில்லை. தந்தை மகள் பாசப் போராட்டத்துடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த பிரேம்ஜி இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோவாக தடம் பதித்துள்ளார். கதைப்படி 12 வயது மகளுக்கு தந்தையாக எமோஷனல் நடிப்பை கொடுத்துள்ளார். இருப்பினும் அவரை காமெடியாக பார்த்துவிட்டு அவர் சீரியஸாக டயலாக் பேசினாலும் நம்மால் ரசிக்க முடியவில்லை.

பிரேம்ஜி மகளாக நடித்துள்ள திவ்யதர்ஷினி அழகான நடிப்பை தந்துள்ளார். பரதநாட்டியம் ஆடும் காட்சிகளில் க்யூட்டாக இருக்கிறார். டாக்டராக வரும் தீபா சங்கர் பேசும் வசனங்கள் மனதில் பதிகின்றன. இன்ஸ்பெக்டராக வரும் வழக்கு எண் முத்துராமன், காவலர் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்களுடன் தொழிலதிபராக வில்லத்தனம் கலந்து சி.ஆர்.ரஞ்சித் நடித்துள்ளார். சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் சென்னை அழகாக தெரிகிறது. ஜிகேவி பின்னணி இசை ஓகே ரகம்.

பிளஸ் & மைனஸ்
குடியிருக்கும் வீட்டில் தொடங்கி படிக்கும் பள்ளிக்கூடம், பாதுகாப்பை தரும் காவல் நிலையம் என அனைத்து இடங்களிலும் பெண் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன என்பதை காட்சி வழியாக எடுத்துக்காட்டி இருப்பது சிறப்பு. இருப்பினும் பல இடங்களில் குழந்தைத்தனமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் படம் நகர்வது சற்று பலவீனம். கரு என்பது ஒரு வரி என்றாலும் அதை ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பது நல்ல இயக்குனரின் திறமையாகும். அதை அடுத்த படத்தில் இயக்குனர் கருப்பையா முருகன் நிரூபிப்பார் என்று நம்புவோம்.

வல்லமை - ரசிகர்களுக்கு வேண்டும் மன வலிமை

 

வல்லமை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வல்லமை

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓