Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காக்கி சட்டை

காக்கி சட்டை,Kakki sattai
04 மார், 2015 - 14:22 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காக்கி சட்டை

மான் கராத்தே படத்தில் மல்லாக்க விழுந்ததற்கு அப்புறம் சிவகார்த்திகேயன் சிக்ஸர் அடிக்க முயன்றிருக்கும் திரைப்படம், கமல் நடித்த காக்கிசட்டை டைட்டிலேயே கொண்டு வௌிவந்திருக்கும் திரைப்படம்., வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் படம், எதிர்நீச்சல் வெற்றிப்பட இயக்குநர் உள்ளிட்ட டீம் மீண்டும் இணைந்திருக்கும் படம், எல்லாவற்றுக்கும் மேலாக இப்பட தயாரிப்பாளர் நடிகர் தனுஷே, இப்படத்திற்கு எதிர்ப்பு! என வதந்தியை கிளப்பிய படம்... என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் காக்கி சட்டை.


கமலின், காக்கி சட்டைக்கும், கார்த்திகேயனின் காக்கி சட்டைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அதில், கமலின் அப்பா போலீஸ், இதிலும் சிவகார்த்திகேயனின் அப்பா போலீஸ்... பழைய காக்கிசட்டையில், கமல் எல்லா தகுதிகளும் இருந்தும் போலீஸ் வேலை கிடைக்காமல் போலீஸ் போன்று செயல்பட்டு, சமூக விரோதிகளை களையெடுப்பார். இதில் கான்ஸ்டபிளாக காக்கி சட்டை மாட்டிக்கொண்ட(பல சீன்களில் ரகசிய போலீசாக கலர் சட்டையிலேயே...) சிவகார்த்திகேயன், பெரிய போலீஸ் ஆபிஸராக வரும் ஆசையில், இன்டர்நேஷனல் லெவல் உடல் உறுப்பு திருட்டு கூட்டத்தை அடையாளம் கண்டு, அந்த கூட்டத்தை கூண்டோடு கைலாசம் அனுப்பி, தான் நினைத்த மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறுவதும், அதற்கு கதாநாயகி ஸ்ரீதிவ்யா எவ்வாறு உதவுகிறார்.?, போலீஸ் வேலை என்றால் வேண்டாம் என சொல்லும் ஸ்ரீதிவ்யா குடும்பம், அதன்பின் எப்படி சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் காதலுக்கு சம்மதம் தருகிறது...? என்பதும் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை கலந்து கட்டி காக்கி சட்டை-யை கலர்புல் சட்டையாக தந்திருக்கிறார்கள்! லாஜிக் பார்க்காமல் போனால் கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயன் செய்யும் கமர்ஷியல் மேஜிக்குகளை ரசித்துவிட்டு திரும்பலாம்.


சிவகார்த்திகேயன்-மதிமாறனாக கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் கான்ஸ்டபிளாக இருந்து கொண்டு செய்யும் காரியங்கள், போலீஸ் கமிஷனர் லெவலுக்கு இருப்பது தான் நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனாலும் முன்பாதியில் சிவா, ஸ்ரீதிவ்யாவின் காதலுக்காக தான் போலீஸே இல்லை... என்று என்பது உள்ளிட்ட காதல் கலாட்டாக்கள் சுவாரஸ்யம். வில்லனிடம் சிவகார்த்திகேயன், ஒருத்தன், பெற்ற அம்மா-அப்பா, நல்ல நண்பன், நேர்மையான போலீஸ் அதிகாரி உள்ளிட்டவர்களை பணத்தால் வாங்க முடியாது..., நீ சொல்ற மாதிரி நான் சாமி எறும்பு தான், சாமி எறும் பு கடிக்காது ஆனா காதில் புகுந்து கொல்லும்... என பேசும் பன்ச் டயலாக்குகள் ஆகட்டும், இன்னும் பல போலீஸே போலீஸ்கிட்ட கேட்கலாமா.?, போலீசே போலீஸ்க்கு தரலேன்னா எப்படி...?, என்னம்மா இப்படி பண்றீங்களேமா.?! என்பன உள்ளிட்ட காமெடி பன்ச்கள் ஆகட்டும் அனைத்திலும் சிவகார்த்தி, மிடுக்காகவும், துடுக்காகவும் மிளிர்கிறார். ஸ்ரீதிவ்யாவை காபந்து செய்ய வில்லன்களுடன் பைக்கில் துரத்தி வந்து மோதும் மழை சண்டை காட்சி மிரட்டலாக இருக்கிறது.


ஸ்ரீதிவ்யா, எங்க வீட்டுக்குத்தான் உங்க போலீஸ் வேலை பிடிக்கல, எனக்கு பிடிக்கலேன்னு சொன்னேனா...?! என பேசும் காதல் மொழிகள், சிவகார்த்திகேயனை மட்டுமல்ல ரசிகர்களின் இதயங்களிலும் லவ் பல்ஸை எகிற வைக்கிறது. பாடல் காட்சிகளில், ஸ்ரீதிவ்யா-சிவகார்த்திகேயனின் நெருக்கம், இவர்களது முந்தைய படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை காட்டிலும் கூடுதலாக இருப்பது இப்படத்திற்கு இன்னமும் வலு சேர்த்திருக்கிறது. அதில்(வ.வ.சங்கம்) படத்தில் பொறுக்கியாக இருந்து ஸ்ரீதிவ்யாவை டாவடித்த சிவகார்த்தி, இதில் போலீஸாக சட்டத்தை, தன் சட்டை பாக்கெட்டிற்குள் வைத்திருப்பதால் நெருக்கம் சற்றே கூடுதலாக்கும்.?!


போலீஸ் இன்ஸ்ஸாக வந்து பாதியிலே உயிரை விடும் பிரபு, தன் கொடூர செய்கைகளால் விரட்டி விரட்டி மிரட்டும் ஆள்கடத்தல் பேர்வழி வில்லன் துரை எனும் விஜய்ராய், ஜெயம் ரவிக்கு உண்டாகட்டும்! என்றபடி திருடன் ப்ளஸ் போலி சாமியராக வரும் மயில்சாமி, சிவகார்த்திகேயனின் யதார்த்த அம்மாவாக வந்து என் புள்ள 3 வயசுலேயே சொன்னத செய்தவன்... அவுங்க அப்பா விட்ட இடத்திலிருந்து ஒரு போலீசா, நேர்மையா தன் கடமையை செய்கிறான், அதனால நீங்க பயப்படுற மாதிரி எதுவும் ஆகிடாது, அவனுக்கு உங்க பெண்ணை கொடுங்க அவ ஜம்முன்னு இருப்பா... என்றபடி உருக்கமாக வசனம் பேசும் கல்பனா, சம்பத்ராம், திலீப், ரயில் ரவி, ஈ.ராம்தாஸ்... உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


மாமா மனோபாலாவின் எபிசோடு, அவரது எம்.எல்.ஏ. ஆசை மாதிரியே படத்திற்கு இன்னும் நீளம் வேண்டி சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தேவைதானா.?! அப்புறம் சிவகார்த்திகேயனின் மிரட்டலுக்கு பயந்து வில்லன் துரைக்கு கேரவனில் ஒரு பெண்ணை செட் பண்ணி கொடுத்து துரையின் செல்போன் இத்யாதி, இத்யாதிகளை நோ டிஸ்டர்பன்ஸ் என்று தன் வசம் வைத்து கொள்ளும் மனோபாலா எதற்காக அந்த கேரவேனின் படியிலேயே அமர்ந்து கொண்டு, சிவகார்த்தி கோஷ்டி வில்லன் துரை வீட்டில் லேப்டாப்பில் கை வைத்ததும் துரையின் செல்லில் அடிக்கும் அலர்ட் சவுண்ட்டை அவர் காதில் விழ விட வேண்டும்.?, அந்த சவுண்ட் கேட்டதும் வில்லன் ஏன்? காரை எடுத்து கொண்டு உடனடியாக ஓட வேண்டும்...?, அதுதான் துரை வீட்டிற்குள்ளேயே வலம் வரும் செக்யூரிட்டிகள் இருக்கிறார்களே...?! அவர்களுக்கு துரை ஒரு போன் போட்டிருக்கலாமே! இவர் வீட்டிற்கு போவதற்குள் சிவகார்த்தி லேப்டாப்பில் இருக்கும் ரகசியங்கைள டவுண்லோடு செய்து விடுகிறாரே! வில்லன்களின் மூளை அவ்வளவு லேசுபட்டதா என்ன.?!


பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், தங்கள் பட நாயகர்களுக்கு தங்களது பெயரை சூட்டி அழகு பார்ப்பார்கள், ஆனால் இப்பட இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார், கொடூர வில்லனுக்கு துரை என தன் பெயர் சூட்டியிருப்பது ஏனோ.?


அனிருத்தின் இசையில், பாடல்கள் ஒவ்வொன்றும் புது ர(ரா)கம். எம்.சுகுமாரின் ஔிப்பதிவில் உள்நாட்டு லொகேஷன்களும், அயல்நாட்டு லொகேஷன்களும் அழகு ஓவியமாக தெரிகிறது. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம், காக்கி சட்டைக்கு கவசமாக இருக்கிறது.


சமீபமாக வௌிவந்த அஜீத்தின், என்னை அறிந்தால் ஆங்காங்கே துரைசெந்தில் குமாரின் இயக்கத்தில் தெரிவது, சென்னையில் எத்தனையோ ஏரியாக்கள், எத்தனையோ போலீஸ் ஸ்டேஷன்கள்... இருந்தும், அத்தனை ஏரியாக்களிலும் நடக்கும் தப்பு தண்டாக்களில், விருகம்பாக்கம் போலீஸே எஸ்.சார் என்றபடி ஆஜராவது..., ஒரு கான்ஸ்டபிளால் சில இடங்களில், கமிஷனரையும் தாண்டி இத்தனையும் செய்ய முடியுமா...? என அடிக்கடி கேள்வி எழுவது உள்ளிட்ட குறைகளை தவிர்த்துவிட்டு, காக்கி சட்டையை பார்த்துவிட்டு வந்தால் சமூக விரோதிகளை தண்டிக்கும் சாட்டையான காக்கி சட்டை - கமர்ஷியல் சட்டை என்பது புரியும்!குமுதம் சினி விமர்சனம்


காக்கி சட்டை!


ஆட்களை 'கோமா' நிலைக்குக் கொண்டு சென்று உறுப்புகளை அகற்றி பிசினஸ் செய்பவர்களை போலீஸ் கண்டுபிடிக்கும் இன்னொரு படம்!

சிவகார்த்திகேயன் எpfட்ரியே அவரது மாஸ் அவதாரத்தைச் சொல்கிறது. காமெடி கொஞ்சம்தான் என்றாலும் டான்ஸிலும் ஃபைட்டிலும் பட்டை கிளப்புகிறார். காதலியை டென்ஷனாக்க ஐட்டத்தை அழைத்துக் கொண்டு போகும் காட்சியில் சிரிக்கிறார்கள்!

ஸ்ரீதிவ்யா தோன்றும் முதல் காட்சியில் கைதட்டல், ஊதா கலர் எஃபெக்ட் போல!

வழக்கம்போல பிரபு. நல்லவராக வந்து, செத்துப் போகிறார்.

இமான் அண்ணாச்சி அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார்.

'பொய் சொன்னதுக்காக ஒருத்தன் மேல கோபப்படணும்னா அவன் மேல நமக்கு உரிமை இருக்கணும்' - வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர்.

யாரோ ஒரு பேர் தெரியாத சிறுவனுக்குப் பதிலாக, கமிஷனரின் மகனையே மாற்றி அனுப்புவது நல்ல டிவிஸ்ட். இயக்கம் துரை. செந்தில்குமார்.

ரகுவரன் ஸ்டைலில் அந்த வில்லன். அட!

குற்றவாளியின் லேப்டாப்பையே தூக்கிச் செல்லாமல் பொறுமையாக காப்பி பண்ணுவது, ஆம்புலன்ஸ் ஆசாமியை சாலையில் யதேச்சையாகப் பார்ப்பது, தந்தையையே கொன்ற கொடூர வில்லன் முன்னால் போய் எப்போதும் நிற்பது போன்றவை எல்லாம் காது, மூக்கு, கண்ணுல புய்ப்பம்!


காக்கி சட்டை - இன்னும் கொஞ்சம் அயர்ன் பண்ணியிருக்கலாம்!
குமுதல் ரேட்டிங் - ஓகேவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

காக்கி சட்டை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in