தினமலர் விமர்சனம்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பட்டறையில் உதவி இயக்குநராக பட்டை தீட்டப்பட்டு, குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும், கோரிப்பாளையம், உள்ளிட்ட படங்களின் மூலம் எதிர்பாராத விதமாக கதாநாயகராகவும் ஆன ராமகிருஷ்ணன் நாயகனாக நடித்திருப்பதுடன் எழுதி, இயக்கவும் செய்திருக்கும் திரைப்படம் தான் போங்கடி நீங்களும் உங்க காதலும்!
பக்கா லோக்கல் வழிப்பறி உதார் பேர்வழி ராமகிருஷ்ணனின் திருட்டுத்தனம் ஒன்றால் பாதிக்கப்படும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த ஆத்மியா, அந்த ஒரு காரணத்திற்காகவே ராம்கியை துரத்தி துரத்தி காதலித்து, பழிவாங்க துடிக்கிறார். பெண்களின் நெஞ்சாங்கூட்டிற்கு மேல் கிடக்கும் தங்கச்சங்கிலியை களவாடும் வழக்கமுடைய ராமகிருஷ்ணனுக்கு, ஆத்மியின் நெஞ்சமும், காதலும் புரியாத புதிராக இருக்கிறது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்... என்பதற்கேற்ப ஒருக்கட்டத்தில் ராம்கி அதாங்க, ராமகிருஷ்ணனும் ஆத்மியை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கும் தருணத்தில், ஹீரோவுக்கு ஆத்மியின் அகாசுகா திட்டம் தெரிய வருகிறது. ஆனாலும், காதலுக்காக கசிந்துருகிறார் ராம்கி., அவரை சட்டை செய்ய மறுக்கிறார் ஆத்மியா. இந்நிலையில் செம டுவிட்ஸ்ட்டாக ராம்கியின் திருட்டுத்தனத்தால், ஆத்மியாவுக்கு அன்று நல்லது தான் நடந்திருக்கிறது எனும் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. சுற்றமும், நட்பும் இதை ஆத்மியாவிற்கு சொல்ல, அம்மணி ராம்கியை தேடி ஓடி வருகிறார். ராம்கி, போங்கடி நீங்களும் உங்க காதலும் எனத் தெறித்து ஓடுகிறார். இதுதான் இப்படத்தின் காமெடி, களவாடி, காதலாகிய கருத்துள்ள கதை, களம் எல்லாம்!
நாயகராக ராமகிருஷ்ணன் டவுசர் தெரிய தூக்கிகட்டிய லுங்கியும், ராப்பரி, வழிப்பறி என பக்கா லோக்கலாகும் முயற்சியில் ஆரம்ப காட்சிகளில் சற்றே ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில், டவுசர் தெரிய லுங்கி கட்டினா நாங்க லோக்கலு, ஜட்டி தெரிய பேண்ட் போட்டா அது பேஷனா...? என கேட்கும் இடங்களில் கவனிக்க வைக்கிறார். சகாபுள்ளி சென்ராயனுடன் அவர் அடிக்கும் லூட்டிகள் சற்றே ஓவர் என்றாலும் கதைக்கும், அந்த களத்திற்கும் அந்த கலாய்ப்புகள் நியாயமாகவே படுகிறது. மொத்தத்தில் ராமகிருஷ்ணன் தனது முந்தைய படங்களைக்காட்டிலும் முத்தாய்ப்பாகவே நடித்திருக்கிறார். கீப் இட்அப்!
திவ்யாவாக வரும் ஆத்மியா, மனம் கொத்தி பறவையில் கவர்ந்த அளவிற்கு நம் மனம் கவரவில்லை என்றாலும், வில்லானிக் ஹீரோயினாக மிரட்டியிருக்கிறார் மிரட்டி!
காருண்யா, ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சென்ராயன், சாமிநாதன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது!
எம்.வி.பன்னீர் செல்வத்தின் எழில் கொஞ்சும் ஒளிப்பதிவு, கண்ணனின் காருண்ய இசை, காதலே காதலே... என பின்னணியில் கதறிடும் தஞ்சை செல்வியின் நெஞ்சை அள்ளும் குரல் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும், பேஸ்புக், டுவிட்டருன்னு உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் கொடுத்தா... அதமனசை சுருக்குற மட்டமான காரியத்துக்கு பயன்படுத்துறீங்களேடா... உள்ளிட்ட கரண்ட் டயலாக்குகளும், எம்.ஏ.ராமகிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சிலகுறைகள் இருந்தாலும், அவற்றை பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தவிடாமல் தடுத்து விடுகின்றன!
ஆகமொத்தத்தில், போங்கடி நீங்களும் உங்க காதலும் - போங்க(டா) நீங்களும் உங்க திரைப்படமும் எனும் அளவில் இல்லாமல் இருப்பது ஆறுதல்!