ஓடிடி வெளியீடுகளால் தமிழ் சினிமாவின் எல்லை விரிகிறதா?
31 ஜூலை, 2021 - 11:40 IST
கொரோனா முதல் அலை கடந்த வருடம் தாக்கிய போது ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை வெளியிடும் முறை பரபரப்பாக ஆரம்பமானது. தியேட்டர்காரர்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், அனுஷ்கா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா உள்ளிட்ட சில பிரபலங்களின் படங்கள் அப்படி வெளியானது. கடந்த வருடம் ஓடிடி தளங்களில் நேரடியாக 24 படங்கள் வெளியான நிலையில் நான்கைந்து படங்களுக்கு மட்டும்தான் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
இந்த வருடம் தனுஷ், மாதவன், ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடித்த படங்கள் வெளியாகின. இவற்றில் ஆர்யா நடித்த டெடி, சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக சார்பட்டா பரம்பரை படத்திற்கு தமிழகத்தைத் தாண்டியும் எதிர்பாராத அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வட இந்தியாவில் யு டியூப் மூலம் சினிமா விமர்சனம் செய்யும் நிறைய விமர்சகர்கள் இந்தப் படத்தைப் பற்றி பாசிட்டிவ்வான விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர். சார்பட்டா அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு அதே பாக்சிங்கை மையமாக வைத்த தூபான் என்ற படம் அதே ஓடிடி தளத்தில் வெளியானது. தூபான் படத்தைப் பார்த்து நொந்து போன விமர்சகர்கள் சார்பட்டா படத்தைப் பார்த்து மொழி தெரியாமல் சப்டைட்டிலைப் பார்த்தே பாராட்டித் தள்ளியுள்ளார்கள். அப்படியான விமர்சனங்களுக்கே லட்சக்கணக்கில் பார்வைகள் கிடைத்துள்ளன.
தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரைத் தவிர மற்ற நடிகர்கள் ஹிந்தி ரசிகர்களுக்கு அதிகமாகத் தெரியாமல் இருந்தார்கள். ஆனால், யு டியூபில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்களின் படங்கள் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான பிறகு அந்தப் படங்களுக்கும் கோடிக்கணக்கில் பார்வைகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன் காரணமாக தற்போது சில முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களுக்கான ஹிந்தி டப்பிங் விலை பல கோடி ரூபாய் வரை ஏறிவிட்டன.
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள விக்ரம், சூர்யா தற்போது நடிக்கும் படங்கள் ஆகியவற்றிற்கான ஹிந்தி டப்பிங் விலை பற்றி கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழில் வெளியாகும் படங்களின் டீசர், டிரைலர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற நடிகர்களின் படங்களையும் ஹிந்தியில் டப் செய்து வெளியிட பெரிய தொகை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
அதற்காகத்தான் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் நடிகைகளை தங்களது படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க இங்குள்ள ஹீரோக்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக அந்த நடிகைகளுக்கு சில பல கோடிகளை சம்பளமாகத் தரவும் தயாராக இருக்கிறார்களாம்.
அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. சார்பட்டா பரம்பரை படம் போல அந்தப் படங்களும் ஹிந்தி ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருந்தால் அப்படங்களுக்குமான வரவேற்பும் சிறப்பாகவே அமையும். அதன் காரணமாக ஓடிடி தளங்களுக்கான உரிமை விலைகளும், யு-டியூப் தளங்களுக்கான உரிமை விலைகளும் புது உச்சத்தைத் தொடும் என தயாரிப்பாளர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு இரண்டு ஓடிடி தளங்களுக்கு இடையேதான் போட்டி இருந்தது. இந்த ஆண்டு அது ஐந்து ஓடிடி தளங்களாக மாறிவிட்டது. மேலும், சில ஓடிடி தளங்களும் அடுத்த சில வாரங்களில் தமிழில் அறிமுகமாக உள்ளன.
ஒரு காலத்தில் சாட்டிலைட் டிவிக்கள் வந்த போது தியேட்டர்களைத் தவிர்த்து புதிய வியாபாரம் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியது. இப்போது கூடுதலாக ஓடிடி தளங்களும் தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளதாக கோலிவுட்டிலேயே தெரிவிக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தியேட்டர்காரர்கள் சில பல சலுகைகளை, விலைக் குறைப்புகளை அறிமுகப்படுத்தினால் மட்டுமே, எத்தனை ஓடிடி தளங்கள் வந்தாலும் தியேட்டர்களில் தான் படத்தை ஈடுபாட்டுடன் ரசிப்போம் என்ற ரசிகர்களைத் தொடர்ந்து வரவழைக்க முடியும்.