ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
நாடகத் துறையில் ஜாம்பவானாக திகழந்தவர் நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர். இவரின் நாடகங்களில் மேடை அமைப்பு பிரமாண்டமாகவும் மந்திர, தந்திரக் காட்சிகள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். வித்தியாசமாகவும் தத்ரூபமாகவும், செட் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் அவரது நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
சினிமாவில் புகழ்பெற்றாலும் நாடகத்தின் மீது தனி ஈடுபாடு உடையவர். சினிமாவில் இருந்த போதே 1954ல் நேஷனல் தியேட்டர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து பல்வேறு சமூக நாடகங்களை அரங்கேற்றினார். அவற்றின் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமான புராண கதை நாடகங்களை நடத்தினார். இலங்கேஸ்வரன், நரகாசுரன், சூரபத்மன், துரியோதனன் உள்ளிட்ட புராண காலத்து எதிர்மறைக் கதாபாத்திரங்களிடம் உள்ள, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றிய கதைகள் மட்டுமின்றி, சாணக்கியர் சபதம், சிசுபாலன், திருநாவுக்கரசர் போன்றவர்களின் கதைகள் என 30க்கும் மேற்பட்ட கதைகளை, 8000திற்கும் மேற்பட்ட முறை நாடகமாக மேடை ஏற்றியவர் மனோகர்.
மனோகரின் நாடகக் குழுவில் 34 ஆண்டுகளாக, 5000திற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு மேடை நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர் ஆர்.நாகராஜன். அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.மனோகரின் நாடகக்குழுவில் 1974ல் சேர்ந்தேன். மேக்கப், உடை, செட்டிங், மந்திர தந்திரகாட்சி அமைப்பு போன்றவற்றுக்காக 26 பேர் பணியாற்றினர். அவர்களை நிர்வகிக்கும் பணியை செய்தேன். ஒரு நாடகம், அரங்கேற்றத்திற்கு முன்பு, ஒன்றரை மாதம், இரவு பகலாக ஒத்திகை நடக்கும். கடைசி 15 நாள், மேக்கப், உடை, இசை, லைட்டிங், செட், தந்திர காட்சி போன்றவைகளுடன் ஒத்திகை நடக்கும். அப்போது, காட்சிக்கு இடையே துரிதமாக மேடை அமைப்பு, உடை மாற்றுதல் போன்ற பயிற்சிகளை கொடுப்பார்.
மேடை அமைப்பிற்கு நேரம் அதிகமாகும் சமயங்களில், அதற்கேற்ப கதையுடன் கூடிய காமெடி காட்சி வைப்பார். அவரது நாடகங்களில், காமெடி காட்சி வருகிறது என்றால் அடுத்து மிகப்பெரிய செட் அல்லது தந்திர காட்சி வரப்போகிறது என அர்த்தம். நாடகம் போடும் இடங்களுக்கு, மூன்று லாரி நிறைய மேடை அமைப்பு பொருட்கள் எடுத்து செல்வோம். வெளிமாநிலங்களுக்கு ரயிலிலும், வெளி நாடுகளுக்கு கப்பலிலும் மேடை அமைப்பு பொருட்களை எடுத்து செல்வோம்.
மனோகர் சினிமாவில் இருந்த போது, சூப்பர் ஸ்டார்களாக இருந்த எம்.ஜி.ஆர்., -சிவாஜி இருவருமே நாடகத்திலும் ஆர்வமாக இருந்தவர்கள். மனோகரின் நாடகங்களை இருவரும் நேரில் பார்த்து பாராட்டுவதும் வழக்கமானது தான். ஒரு முறை, நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., வந்திருந்த போது, அவருக்கு முன்வரிசையில் பெரிய பிரம்பு நாற்காலி போடப்பட்டிருந்தது.
பின்னால் இருக்கும் பார்வையாளர்களுக்கு, மேடை சரியாக தெரியாது. அதை எடுத்து விடுங்கள் எனக் கூறி, சாதாரண நாற்காலியில் அமர்ந்து நாடகம் பார்த்தார். மனோகரை நம்பி, 60 குடும்பங்கள் உள்ளன என எங்கள் நாடகக்குழு குறித்து, எம்.ஜி.ஆர்., கூறுவது வழக்கம். மனோகரின் நாடகங்களால் கவரப்பட்டு அவருக்கு நாடக காவலர் என்ற பட்டம் கொடுத்து பாராட்டினார். அரசியலுக்கு அப்பாற்பட்டவர் மனோகர்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவருக்கு கலைமாமணி விருது வழங்கினார். ஜெயலலிதா 1991ல் முதல்வரானவுடன், எம்.ஜி.ஆர்., விருது வழங்கியதுடன் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலர் பதவியில் நியமித்தார். இவர்கள் தவிர முன்னாள் ஜனாதிபதிகள், ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், பிரதமர் இந்திரா போன்ற தேசிய தலைவர்களும் மனோகரின் நாடகங்களை பார்க்க வந்துள்ளனர். மனோகர், உடல் நலம் குன்றி, நாடகங்கள் நடத்துவதை நிறுத்திய பின், அவரிடம் இருந்த மேடை அமைப்பு பொருட்கள், உடைகளை என்னிடம் கொடுத்து, இதை வைத்து ஏதாவது தொழில் செய்து கொள் என்றார்.
அவர் 7965 முறை நாடகங்களை நடத்தி இருந்தார். 2006ல் அவரது மறைவிற்கு பின், அவரது மனைவியின் ஒப்புதலுடன், வி.என்.எஸ்., மனோகர் தியேட்டர் என்ற பெயரில், ஒரு நிறுவனத்தை தொடங்கி, அவரது நாடகங்களை, 50 முறை நடத்தினேன். மனோகரின் மேடை நாடகம், 8000 முறை அரங்கேறிய போது, விழா எடுத்தேன். தற்போது பொருளாதார நிலையால், அவரது நாடகங்களை நடத்த முடியவில்லை.
மனோகர் நாடகத்துக்கு பயன்பட்ட பொருட்களை, இப்போது, டிவி தொடர்கள், நாடகங்கள், பள்ளி, கல்லுாரி கலை விழாக்களுக்கு வாடகைக்கு வழங்கி வருகிறேன். அவருக்கு குழந்தைகள் கிடையாது பத்மநாபன் என்ற வளர்ப்பு மகன் மட்டுமே உள்ளார். நாடகத் துறை வளர்ச்சியில், 50 ஆண்டுகளுக்கு மேல், அவரின் பங்கு உள்ளது. மத்திய அரசின் பத்மஸ்ரீ போன்ற விருதுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது. அது அவரது நிறைவேறாத ஆசையும் கூட. அவர் மட்டுமின்றி என்னை போன்ற கலைஞர்கள், ரசிகர்களுக்கும் அந்த ஏக்கம் உள்ளது.
மந்திர, தந்திர காட்சிகள்
நாகராஜன் கூறியதாவது: தந்திர காட்சிகள், ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தின் சிறப்பு. கதாபாத்திரங்கள், வானத்தில் பறப்பது, அம்புகள் பறந்து வந்து மோதி தீ பற்றி எரிவது போன்ற காட்சிகள் அதிசயமாக இருக்கும். பாறை, வான்மண்டலங்கள், சூரியன் வெடிப்பது, யானை துதிக்கையை ஆட்டியவாறு நடந்து வந்து மாலை இடுவது, பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்றவை எந்த வித எலக்ட்ரானிக்ஸ் கருவிகளும் பயன்படுத்தாமல் செய்தோம்.
நாடகங்களில், மேடைக்கு பின்புறம் உள்ள திரைச்சீலை, 22 அடி அகலம், 13 அடி உயரம் தான் இருக்கும். நாங்கள் இரு பக்கவாட்டிலும், 5 அடி அளவு என துாண்களுக்கு இடைவெளி விட்டு, திரைச்சீலை அமைப்போம். அது, 30 அடி அகலத்திற்கு, செட் அமைத்தது போல் பார்வையாளர்களுக்கு பிரமாண்டமாக தெரியும். டிராமாஸ்கோப் என்ற இந்த தொழில்நுட்பத்தை மனோகர் மட்டும் தான் பயன்படுத்தினார். அதே போல் மேடையில் மைக் வைத்திருப்பதே தெரியாத அளவிற்கு, ஸ்டிரியோபோனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்.
மேடையின் தரையில், பார்வைக்கு தென்படாத வகையில் குறைந்த உயரத்திலும், மேடைக்கு மேலே தொங்கும் வகையிலும், மைக் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் வசனங்கள் தெளிவாக கேட்கும். நரகாசுரன் நாடகத்தில் வான்மண்டலத்தில் பறப்பது போன்ற காட்சியில், ஆர்.எஸ்.மனோகர் நடித்து கொண்டிருந்த போது மேலே இருந்து கிழே விழுந்து கழுத்தில் அடிபட்டு விபத்து ஏற்பட்டது.
அதே போல், திருப்பூரில் நாடகம் தொடங்கும் முன் காற்று, மழையால் மேடை முற்றிலும் சரிந்து விபத்து ஏற்பட்டது. பொருட்கள் எடுத்து செல்லும் போது, இரு முறை விபத்தில் லாரி கவிழ்ந்து, பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
வெற்றி பெற்ற இலங்கேஸ்வரன்
இலங்கேஸ்வரன் நாடகத்தில் சீதையை ராவணன் மகள் என கதையில் வைத்திருந்தார், மனோகர். முதலில் அந்த நாடகம் சரியாக போகவில்லை. ஆனால், இலங்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த கதையை காஞ்சி பெரியவரிடம் சென்று காட்டினார். அவர், இதில் தவறு ஏதும் இல்லை என கூறியதுடன் ஆசிர்வாதம் செய்தார். அதன் பின் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு இடங்களிலும் அந்த நாடகம் மிகப் பெரிய வெற்றி பெற்று அதிக முறை நடந்த நாடகம் என்ற பெயர் பெற்றது.
இவ்வாறு நாகராஜன் கூறினார்.