Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கமல் 60 - 60 - பிறந்தநாள் ஸ்பெஷல் ஸ்டோரி!!

07 நவ, 2014 - 12:44 IST
எழுத்தின் அளவு:

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி இவருடைய உடன் பிறந்தவர்கள். நான்கு குழந்தைகளில், கமல்தான் கடைக்குட்டி.


2. 1978 ல், வாணி கணபதி என்ற பரதநாட்டியக்கலைஞரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாகரத்துப் பெற்றார். பின்னர், சரிகா என்ற பாலிவுட் நடிகை உடன் சேர்ந்து வாழ்ந்த கமல், குழந்தை பிறந்த பிறகு சிவாஜி முன்னிலையில் தாலி கட்டி சரிகாவை மணமுடித்தார். கமல் - சரிகா தம்பதிக்கு, ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 2002 ல் சரிகாவுடனான விவாகம் ரத்து ஆனது. 2005 ஆம் ஆண்டிலிருந்து நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


3. 1960 ல் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமானபோது, கமலுக்கு வயது ஆறு. அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றார். பின்னர் குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த கமல், இளைஞனான பிறகு, 1970 ல் வெளியான மாணவன் என்ற படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.


4. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973ல் வெளியான கே.பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படம்தான். அதன் பிறகு பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தார். 1974ல் வெளிவந்த, நான் அவன் இல்லை படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசிப் படம். சொல்லத்தான் நினைக்கிறன், குமாஸ்தாவின் மகள் போன்ற படங்களில் நெகட்டிவ்வான வேடங்களில் நடித்தார்.


5. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய அபூர்வ ராகங்கள். இப்படத்திற்காக, அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதும், அபூர்வ ராகங்கள் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.


6. மலையாளத்தில் 1974 ல் வெளியான கன்னியாகுமரி என்ற படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு மலையாள மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை கமலுக்குப் பெற்றுத் தந்தது.


7. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். 16 வயதினிலே, மூன்று முடிச்சு, அவர்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது போன்ற திரைப்படங்கள் இருவரின் கூட்டணியில் சக்கைப்போடு போட்டன.


8. சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, நீயா, கல்யாண ராமன், நினைத்தாலே இனிக்கும், ராஜப்பார்வை, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் கமலுக்குப் வெற்றிப்படங்களாக மட்டுமின்றி, பல விருதுகளையும் அவருக்குத் தேடித்தந்தது.


9. 1980 களில், ஹிந்தித் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கமல். ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக், கிரஃப்தார் ஆகிய படங்கள் அவருக்கு ஹிந்திப்படத்துறையில் பெரும்புகழையும் பெற்றுத்தந்தன.


10. கமலின் திரையுலக வாழ்க்கையில் 1990 கள் மிக முக்கியமான காலகட்டம். 90களில் வெளியான அபூர்வ சகோதர்கள், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், அவ்வை ஷண்முகி போன்ற படங்கள், வெற்றிகரமான படங்களாக அமைந்தது மட்டுமல்ல, கமலுக்கு மாஸ்டர்பீஸாகவும் அமைந்தன.


11. ஒரே வருடத்தில் 5 வெள்ளிவிழா (சில்வர்ஜூப்ளி) படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையை இதுவரை முறியடிக்க முடியவில்லை. இனியும் முறியடிக்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)


12. களத்தூர் கண்ணம்மா படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக தேசிய விருது பெற்ற கமல், பல வருடங்களுக்குப் பிறகு மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதுகளைப் பெற்றார்.


13. 18 முறை ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமைக்குரியவர், இந்தியாவிலேயே கமல்ஹாசன் ஒருவர்தான். (திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.) இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகி இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் கமலே இந்த விருதுகளை இனி புதியவர்களுக்குக் கொடுங்கள். எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார்.


14. இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை அதாவது, 7 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே 7 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் கமல்தான்.


15. களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக நான்கு முறை தேசிய விருது பெற்ற கமல், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்றுள்ளார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டது.


16. 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றவர் கமல்ஹாசன் ஒருவர்தான். இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார்.


17. உலகிலேயே அதிக விருதுகள் அதாவது 200 க்கும் அதிகமாக, பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. இந்த சாதனையை மற்ற நடிகர்கள் எட்ட குறைந்தபட்சம் இருபது வருடங்கள் தேவைப்படும்.


18. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கியது. அதற்கு முன்னரே, தமிழக அரசு கமல்ஹாசனுக்கு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.


19. 2005 ல், ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இதே பல்கலைக்கழகத்தில்தான் கமல் டாக்டராக நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.


20. நடிப்பைத் தவிர, கமல் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார்.


21. அடிப்படையில் கமல் பரதநாட்டிய கலைஞர் என்பதால், கதாநாயகனாக நடிக்க வருவதற்கு முன் பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார். தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராகப் பணியாற்றிய கமல்ஹாசன், டான்ஸ் மாஸ்டராக வர விரும்பினார். காலம் அவரை நடிகனாக்கிவிட்டது.


22. தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தபோது, எம்.ஜி.ஆருக்கு நான் ஏன் பிறந்தேன் படத்திலும், ஜெயலலிதாவுக்கு அன்பு தங்கை படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார் கமல். அப்போது எம்.ஜி.ஆருக்கு சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைக்க, குறும்புக்காரா... என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்தாராம்.


23. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறமையினாலும் மய்யம் என்ற பத்திரிக்கையை தொடங்கி சில வருடங்கள் நடத்தினார். பின்னர் நேரமின்மை காரணமாக அப்பத்திரிகையை நிறுத்திவிட்டார். தற்போது மய்யம் என்ற பெயரில் இணையதளம் நடத்தி வருகிறார்.


24. காஷ்மீர் பிரச்சனை, போதை மருந்துப் போன்ற பல சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி கமல் எழுதிய படைப்புகள், தேடித் தீர்ப்போம் வா என்ற தலைப்பில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது. இப்புத்தகம் வெளியான சில மாதங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டது. ஏனோ கமல் அதை மறு பிரசுரம் செய்ய முயற்சி செய்யவில்லை.


25. இதயம் பேசுகிறது இதழில் தாயம் என்ற தொடர்கதை எழுதினார் கமல். அக்கதைக்கு திரைக்கதை அமைத்து பல வருடங்கள் கழித்து ஆளவந்தான் படமாக எடுத்தார். தொடர்கதையாக படித்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யம் படத்தில் இல்லை.


26. பொதுவாக நடிகர்களின் ரசிகர் மன்றம் என்பது தியேட்டர்களில் கொடி தோரணம் கட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கமல் மட்டுமே தன் மன்றத்தை நற்பணி இயக்கமாக நடத்தி வருகிறார்.இந்த அமைப்பின் கீழ் தன் ரசிகர்களை பல சமூக சேவையில் ஈடுபடுத்தி வருகிறார் கமல். ஏழைகளுக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினி போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள்.


27. உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான். கமல்ஹாசனும் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோவுக்கும் அதிகமான அரிசியை ஏழை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.


28. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை நடத்திய ஒரே நடிகர் கமல்ஹாசன்தான்.. இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார்.


29. 2010 ஆம் ஆண்டில் ஹ்ருதயராகம் என்ற திட்டத்தின் தூதராக இருந்தார் கமல். அப்போது, எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதியைத் திரட்டி, சென்னை போரூரிலிரக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கினார்.


30. கமல்ஹாசனின் முதல் சொந்தப் பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இப்படநிறுவனத்தின் சார்பில்தான் ராஜபார்வை படத்தை கமல் தயாரித்தார். அதன் பிறகு அந்த பேனரில் படம் தயாரிப்பதை கைவிட்ட கமல் பின்னர் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷ்னல் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் இதுவரை உலக அளவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகைக்கு வர்த்தகம் செய்திருக்கிறது.


31. கமல்ஹாசனின் கனவுப்படைப்பு மருதநாயகம் படம். இங்கிலாந்து மகாராணி எலிஸபெத்-2 அவர்களால் இப்படம் துவக்கி வைக்கப்பட்டது. சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் அப்படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக படத்தை ட்ராப் பண்ணினார் கமல். இப்போது மருதநாயகம் படத்தை கமல் மீண்டும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இன்றைய தேதியில் 100 கோடி பட்ஜெட் தேவை என்கிறார் கமல்.


32. எழுத்தாளர் சுஜாதா, சந்தானபாரதி, அனந்து, ஆர்.சி.சக்தி, ஆகியோர் கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். இவர்களிடம் கதை குறித்த விவாதங்கள், நவீன சினிமாவைப் பற்றிய விமர்சனங்களை காரசாரமாக எடுத்து வைப்பார்.


33. கமலுக்கு திரைப்படங்களைப் பார்ப்பதை விட அதீத ஆர்வம் புத்தகங்களை வாசிப்பதில் உண்டு. இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு வருவார். அதேபோல் திரைப்படத்துறையின் லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்.


34. ஆரம்ப காலத்தில் காதல் இளவரசன் என அழைக்கப்பட்ட கமல் தற்போது உலக நாயகன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்தப் பட்டங்கள் எல்லாம் கமல்ஹாசனுக்கு யார் வழங்கினார்கள்? காதல் இளவரசன்" பட்டத்தை வழங்கியது காதல் மன்னன் ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" என்ற பட்டத்தை வழங்கியது கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" என்ற பட்டத்தைக் கொடுத்தது பஞ்சு அருணாசலம், "கலைஞானி" என்று பட்டம் வழங்கியவர் கலைஞர் மு கருணாநிதி, "உலக நாயகன்" என்ற பட்டத்தை வழங்கியவர் கே.எஸ். ரவிக்குமார்.


35. கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சஃபையர் திரையரங்கில் 600 நாட்கள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு 350 நாள் ஓடியது.


36. சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன். இந்த சாதனையை இதுவரை வேறு நடிகர்களின் படங்களும் செய்யவில்லை.


37. தனது பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதியை விமரிசையாகக் கொண்டாடுவதில் கமலுக்கு விருப்பம் இல்லை. இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார். ரசிகர்களின் சந்தோஷத்துக்காகவே தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.


38. உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன்தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று தான் உடல்தானம் செய்வதாக பதிவு செய்தார்.


39. சினிமா நடிகர்களை அட்டகத்தி என்று மக்கள் கிண்டல் செய்வார்கள். காரணம் ரிஸ்க்கான காட்சிகளில் எல்லாம் டூப் போட்டு நடிப்பவர்கள். கமல் விதிவிலக்கு. எப்பேற்பட்ட ரிஸ்க்கான காட்சியிலும் டூப் போடாமல் தானே நடிப்பார். அதனால் கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது.


40. தமிழ் திரையுலகில் சகாப்தங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன் ஒருவர்தான்.


41. நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டும் பெண் வேடமிட்டு திரையில் தோன்றுவது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், கமல்ஹாசன் ஒருவர்தான், படத்தின் பெரும்பகுதி பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில் தான் குருகுல வாசம் செய்த அவ்வை டி.கே.எஸ்.நாடகக் குழுவின் மேல் கொண்ட பற்றினாலும், குருவின் மேல் கொண்ட பக்தியினாலும், அந்த படத்திற்கு அவ்வை சண்முகி என்று பெயர் வைத்தார். மிஸஸ் டவுட்ஃபயர் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம் இது.


42. காட்ஃபாதர் என்ற ஹாலிவுட் படத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு கமல் நடிப்பில் எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படத்தை, உலக அளவில் பிரபலமான பத்திரிகையான டைம்ஸ் பத்திரிகை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது. இந்தப்பெருமை வேறு எந்த தமிழ்ப்படத்துக்கும் கிடைக்கவில்லை.


43. கொடைக்கானலில் மக்கள் நடமாட்டம் இலலாத மலைப்குதியில் இருந்த ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தினார் கமல். அதன் பிறகு அந்த குகை "குணா குகை" என்ற பெயரில் பிரபலமானது. இன்றுவரை கொடைக்கானலின் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டாக விளங்குகிறது குணா குகை.


44. இந்தியசினிமாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100 வது படமான ராஜபார்வையில்தான். படம் பார்க்கும் எவராலும் இதை கண்டுபிடிக்கவே மடியாது. தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில்தான்.


45. அந்தநாள் (இயக்கம் : வீணை எஸ் பாலசந்தர்) படத்துக்குப் பிறகு பாடல்களே இல்லாத படம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. சத்யராஜ் நடித்த இந்த படம் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் கமல்.


46. அகிராகுரோசாவின் ராஷோமான் என்ற ஜப்பானிய படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ஏவிஎம் தயாரிப்பில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய அந்த நாள். இப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாள் வெளியாகி சரியாக 50 ஆண்டுகள் கழித்து அதே ராஷோமான் படத்தைத் தழுவி விருமாண்டி படத்துக்கு திரைக்கதை அமைத்தார் கமல். இப்படம் வெளியானது 2004ல்.


47. இந்திய சினிமா பேச ஆரம்பித்து ஏறக்குறைய ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, புஷ்பக் என்ற வசனம் இல்லாத படத்தில் நடித்து சாதனை படைத்தார் கமல். இந்தப் படத்தை தமிழில் வெளியிட்டபோது அதற்கு பேசும்படம் என்று குசும்புடன் பெயர் வைத்தார்.!


48. ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று தமிழ்ச் சினிமாவின் ட்ரெண்ட்செட்டரான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமை கமலுக்கு உண்டு. என்ன காரணத்தினாலோ, இயக்குனர் மகேந்திரனுடன் மட்டும் கமல் பணியாற்றவில்லை. அந்த வருத்தம் கமலுக்கு இப்போதும் உண்டு.


49. கமல் மேட்டுக்குடியை சேர்ந்தவர் என்றாலும், மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்குவார். அவர் மெட்ராஸ்பாஷை பேசி நடித்த படங்கள் சட்டம் என் கையில், எல்லாம் இன்பமயம், சவால், அபூர்வ சகோதர்கள், மகாராசன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்கள் மெகா ஹிட். மெட்ராஸ் பாஷை பேசும் விதத்தை லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்து கொண்டாராம்.


50. தமிழ் சினிமாவில் முதன் முதலில் முத்தக் காட்சியில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. சட்டம் என் கையில் படத்தில்தான் இந்த அரிய விஷயத்தை ஆரம்பத்தார். அந்தக் காலத்தில் இதற்கு பயங்கர எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் கமல் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. நாளடைவில் உதட்டைக்கவ்வுகிற அளவுக்கு முன்னேறினார்.


51. கமலுக்கு தான் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டு. அந்த ஏக்கமே அவரை சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களிலும் கை தேர்ந்தவராக உருவாக்கியதாம். இதை அவரே பேட்டிகளிலும், மேடைகளிலும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார்.


52. மூத்த கலைஞர்கள் மீது பேரன்பு கொண்டவர் கமல். குறிப்பாக, நாகேஷ், மனோரமா, வி.கே.ஆர். ஆகியோரிடம் மாறாத பாசம் கொண்டவர். தன்னுடைய தயாரிப்புகளில் தான் நடிக்கும் படங்களில் இவர்கள் இருப்பதை பெரிதும் விரும்புவார் கமல். நாகேஷ் உயிரோடு இருந்தபோது தன் படங்களில் அவருக்காகவே பாத்திரங்களை உருவாக்குவார். தன் தயாரிப்பில் உருவான மகளிர் மட்டும் படத்தில் நாகேஷை பிணமாக நடிக்க வைத்தார் கமல்.


53. கமல் ராஜபார்வை காலத்தில் இருந்தே பழைய ஆட்களை ஞாபகத்தில் வைத்து வாய்ப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் அப்படி மறுவாழ்வு பெற்றவர்கள். தேவர்மகன் படத்துக்குப் பிறகு காகா ராதாகிருஷ்ணன் பல படங்களில் தன் பங்களிப்பைச் செய்துவிட்டு மறைந்தார். தேவர்மகன் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்த கள்ளபார்ட் நடராஜன் சில ஆண்டுகள் மேலும் பல படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவிட்டு காலமானார்.


54. "பல நடிகர்களை நாம் மறந்து வருகிறோம். சில கதாபாத்திரங்களுக்கு அவர்கள் பொருத்தமாய் இருப்பார்கள். ஆனால் நம் நினைவுக்கு அப்போது வராது". எனவே நடிகர் நடிகைகளைப் பற்றிய ஒரு புள்ளிவிவரக்குறிப்பு அதாவது கம்ப்ளீட் டேட்டா பேஸ் தயார் செய்ய வேண்டும். அதில் அவர்களது முக்கிய புகைப்படங்கள், தற்போதைய புகைப்படம் போன்றவற்றை இடம் பெறச் செய்ய வேண்டும். அது நடிகர் சங்கத்தில் இருந்தால் நலம். டைரக்டர்கள் அதை புரட்டிப் பார்த்து நல்ல முறையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சொன்னார் கமல்.


55. ஒரு படத்தில் நடித்த உடனேயே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எண்ணுகிற நடிகர்கள் மத்தியில் அரசியல் ஆசை இல்லாத நடிகர் கமல். சில வருடங்களுக்கு முன்பு, 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி கமலுக்கு ஆசை காட்டியதாம். அதை வாங்கி இருந்தால் மருதநாயகம் படத்தை எடுத்த முடித்திருக்கலாம். ஆனால் கமல் அந்த ஆஃபரை மறுத்துவிட்டார் கமல்ஹாசன்.


56. கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


57. கமலுக்கு மேக்கப்சென்ஸ் அதிகம், மேக்கப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்துள்ளார். அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது. இந்தியன் படத்துக்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து இந்தியன் தாத்தாவாக மேக்கப்பில் உருவம் மாறினார் கமல். பின்னர் அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களில் நடிக்கும்போதும் ஹாலிவுட் மேக்கப் மேன்களை பயன்படுத்தி இருக்கிறார்.


58. நான்கு தேசிய விருதுகளை வென்ற கமல் மட்டுமல்ல அவரது குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும் கூட தேசிய விருது பெற்றவர்கள்தான். 1986 ஆம் ஆண்டில் சிந்து பைரவி படத்துக்காக சுஹாசினியும், அதே 1986 ஆம் ஆண்டு தபரண கதே என்ற கன்னடப் படத்துக்காக சாருஹாசனும் தேசிய விருது பெற்றார்கள்.


59. கமலின் தந்தை சீனிவாசன் மறைந்து, இறுதிச் சடங்குகள் நடந்தபோது, ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் அண்ணா நீங்களும் வாங்க என்று அழைத்த கமல், அவர்களையும் தன் தந்தைக்கு கொள்ளி வைக்கச் சொல்லி இருக்கிறார் கமல். என் தந்தையை நேசித்த நீங்கள் என் சகோதரர்களே என்று சொன்னாராம்.


60. The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் டாடா உட்பட ஐந்து பேர் மட்டுமே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in