இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு என்று பரவலாக பேசப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். "வெள்ளிக்கிழமை நாயகன்" என்று புகழப்படும் அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரின் புதுப்படம் வெளியாகும்.
சம்பளக் கொடுக்கல் வாங்கலில் நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொண்ட ஜெய்சங்கரால் பயனடைந்தோர் ஏராளம். அவரை வைத்துப் படம் எடுத்தவர்களில் இழப்புக்குள்ளானோர் மிகவும் சொற்பம்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது "குட் மார்னிங்" என்றும், 'வணக்கம்' எனவும் கூறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவர்தான் முதன் முதலில் 'ஹாய்' என்று கை உயர்த்தி மரியாதை செலுத்தும் பழக்கத்தை உருவாக்கித் தந்தார். மேடை நாடகத்திலிருந்து திரைத்துறைக்கு முன்னேறியவர் ஜெய்சங்கர். தெரிந்தும் தெரியாமலும் ஏராளமானோருக்கு பல்வேறு வகையில் அவர் உதவிகள் புரிந்து வந்தார்.
அத்தகு வித்தகர் அடியேனிடம் உதவி கேட்டு வந்தார் என்பது வினோதமான வினையாடல். எடுத்த எடுப்பிலேயே முடக்கிப் போடும் அளவுக்கான பதிலை நான் கூறியதும் அவர் என்னை வெறுத்து ஒதுக்கவில்லை. பொறுத்திருந்து பேசினார்.
அரசியலில் கோலோச்ச ஆசைப்பட்டு, அதல பாதாளத்தில் விழுந்த நடிகர்களில் ஜெய்சங்கருக்கும் ஒரு இடம் உண்டு. இதை தமிழக வரலாறு மறந்தோ மறைந்தோ விட்டு இருக்கலாம்.
தமிழ்ப் பத்திரிகை உலகில் எம்பி மணி என்ற செய்தியாளர் இருந்தார். குற்றவியல் செய்திகள் எழுதுவதில் அவர் வல்லவர். பக்க வடிவமைப்புகளை வனப்போடு வார்த்தெடுப்பதில் அவர் சமர்த்தர். அவரின் தொழில் சார்ந்த தொடர்புகள் திரைத்தறையைத் தொட்டு விட்டன. அதிலும் அவர் மிச்சம் ஏதும் வைக்காமல் உச்சத்தை தொட்டவர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வசித்து வரும் அடியேனுக்கு அவர் அண்டை வீட்டுக்காரர். "அண்டை வீட்டாருடன் சண்டையிடக்கூடாது., தொண்டையிட வேண்டும்" என்பது எனது வாழ்வியல் வழிகாட்டுக் குறிக்கோள்களில் ஒன்று. அதன்படியும், என் தொழிலில் மூத்தவர் என்பதாலும் அவரின் மீது அளப்பரிய மதிப்பும் மரியாதையும் செலுத்தி வந்தேன். அவர் நலிந்திருந்த காலத்தில் அவரை தினமலர் அந்துமணியிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அப்போதில் இருந்து அவரின் வறுமை விலகியது.
இதனைச் சுட்டிய வாசகங்களைக் கடிதமாக எழுதி, என் இல்லம் வந்து தந்தார். அடுத்த சில மாதங்களில் அவர் மறைந்து விட்டார். அவர் தந்த கடித நகலைச் சமீபத்தில் அவரின் மகன் முருகனிடம் வழங்கினேன்.
அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் திடீரென்று என் இல்லத்திற்கு வந்தார். “நடிகர் ஜெய்சங்கருக்கு ஒரு சின்ன வேலை இருக்கிறது. அதனை நீங்கள் தான் செய்து கொடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
என்னை அவர் அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகம் அருகே உள்ள நடிகர் ஜெய்சங்கரின் வீட்டிற்குச் சென்றார். தகவல் கிடைத்ததும் மாடியில் இருந்து தனக்கே உரித்தான தனித்துவமாக 'ஹாய்' என்று சிரித்தபடியே கை அசைத்துக் கொண்டே கீழே இறங்கி வந்தார் ஜெய்சங்கர்.
பரஸ்பரம் நல விசாரிப்பதற்குப் பிறகு உரிய உபசரிப்புகள் நிகழ்ந்தன. உறவுப் பரிமாற்றத்திற்கு உருவம் கொடுத்தால் முந்தி வந்து நிற்பது உணவு தானே! பின்னர் அவர் தனது வேண்டுகோளை என் முன் வைத்தார்.
அது சாத்தியமில்லை என்பதற்கான அனுபவப் பிழிவுகளை அள்ளித் தெளித்தேன்."அரசியலுக்கு வந்தால் ஜெய்சங்கரே பொய் சங்கர் ஆகிவிடுவார்" என்றேன். ஆனால் அவரோ, "இதை நான் செய்தே தீருவேன். நீங்கள் உதவி செய்யுங்கள். "என்று கேட்டார்.
வேறு வழி இல்லாமல் நான் அந்த உதவியை அவருக்குச் செய்து கொடுத்தேன். அதன்படி செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன். "ஜெய்சங்கர் அரசியலில் குதிக்கிறார். தேர்தலில் போட்டியிடுகிறார். சட்டசபையில் சதிராட ஆயத்தமாகிறார்." என்றெல்லாம் நான் பரப்பி விட்டேன்.
இதனால் ஜெய்சங்கரின் நிருபர் கூட்டத்திற்குப் பெரும்பாலான செய்தியாளர்கள் வந்து குவிந்து விட்டனர். நிருபர்கள் கூட்டம் தொடங்கியதும், "நான் அரசியலில் குதிக்கிறேன். மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன். திமுகவில் சேர இருக்கிறேன். கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்தியவாறு களமாடத் திட்டமிட்டு விட்டேன்...." என்றெல்லாம் ஜெய்சங்கர் வெளுத்து வாங்கிவிட்டார்.
செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் பரபரப்பாக வெளிவந்து விட்டன. ஜெய்சங்கர் என்னை அழைத்தார். அவரின் இல்லத்திற்குச் சென்றேன். "ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. வரவேற்பு பிரம்மாண்டமாக இருக்கும் போல் தெரிகிறது." என்றெல்லாம் அவர் உற்சாக மிகுதியால் கற்கண்டுச் சொற் கொண்டுப் பேசினார்.
நான் அவரிடம் மீண்டும் திட்டவட்டமாக இவ்வாறு தெரிவித்தேன்:
"அரசியல் உங்களுக்குச் சரிப்பட்டு வராது. திமுகவில் நீங்கள் சேர இயலாது. சேர்ந்தாலும் உங்களுக்குச் சீட்டு கிடைக்காது. மயிலாப்பூரில் நீங்கள் போட்டியிடுவதும் சாத்தியமில்லை. இருக்கின்ற நல்ல பேரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்." என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் திகட்டத் திகட்டத் தெரிவித்துவிட்டேன்.
அவரோ, "கருணாநிதியின், 'வண்டிக்காரன் மகன்' படத்தில் நான் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். நிச்சயமாக எனக்கு மயிலாப்பூரில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பார்" என்று மிகுந்த நம்பிக்கையோடு பேசினார்.
சடங்கு பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு நான் விடைபெற்று வந்து விட்டேன். சங்கரின் அரசியல் பிரவேசம் என்றவாறு ஒவ்வொரு பத்திரிகையும் அதனதன் பாணியில் அலசல் கட்டுரைகளைத் தீட்டி தீர்த்தன.
ஆனாலும் அந்தோ...! அவரின் அனைத்து முயற்சிகளும் அயற்சியைத் தந்தன. முன்னுரை எழுதும்போதே முற்றுப்புள்ளி வைத்தது போல், முனைப்புகள் அனைத்தையும் அடுத்தடுத்தச் சந்தர்ப்பப் சூழ்நிலைகள் முடக்கிப் போட்டன.
"அரசியலுக்கு வரவேண்டும்" என்ற ஜெய்சங்கரின் ஆசை கருவிலேயே கருகிப்போன கதையானது.
-ஆர் நூருல்லா
செய்தியாளன்
9655578786