ப்ளூ ஸ்டார்,Blue Star
Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லெமன் லீப் கிரியேஷன், நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஜெயகுமார்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - அசோக் செல்வன், சாந்தனு, பிருத்விராஜன், கீர்த்தி பாண்டியன்
வெளியான தேதி - 25 ஜனவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் - 3/5

கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் முயற்சியைச் சொல்லும் படம். தங்களை விட அதிக வசதிகளைப் பெற்றவர்களை எதிர்த்து நின்று வெற்றி அவர்கள் எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயகுமார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 28' படம் மாநகரப் பின்னணியில் வந்த ஒரு கிரிக்கெட் படம். இந்த 'ப்ளூ ஸ்டார்' ஒரு கிராமத்துப் பின்னணியில் வந்துள்ள ஒரு கிரிக்கெட் படம். இதில் கொஞ்சம் அரசியலும் உண்டு. சென்னையை அடுத்த முக்கிய ரயில்வே ஸ்டேஷன் ஆக இருந்தாலும் அரக்கோணம் நகருக்கென ஒரு தனி அடையாளம் உண்டு.

படத்தின் ரயில்வே ஸ்டேஷன், பிளாட்பார்ம்கள், பின்னணியில் பல காட்சிகளில் வேகமாகச் செல்லும் ரயில்கள் என கதைக்களத்தில் இவையும் ஒரு கதாபாத்திரமாய் இருப்பது போல பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். படம் ஒரு 'லைவ்' ஆன அனுபவத்தைத் தருகிறது.

1998ல் நடக்கும் கதை. அரக்கோணம் அடுத்த பெரும்பச்சை என்ற கிராமத்தில் ஊர் இளைஞர்களின் கிரிக்கெட் அணியான ஆல்பா பாய்ஸ் அணிக்கும், காலனி (படத்தில் குறிப்பிடப்படுவது) இளைஞர்களின் கிரிக்கெட் அணியான ப்ளூ ஸ்டார் அணிக்கும் தீராத பகை உண்டு. அதற்கு முன்பு நடந்த சண்டையில் இரண்டு அணிகளுமே சேர்ந்து கிரிக்கெட் ஆடக்கூடாதென ஊர் சேர்ந்து முடிவெடுத்துள்ளார்கள். இருப்பினும் இரண்டு அணிகளுக்கும் இடையே திருவிழாவின் போது கிரிக்கெட் போட்டி நடக்கிறது.


லீக் போட்டிகளில் ஆடும் சில வீரர்களை அழைத்து வந்து தங்களுடைய ஆல்பா பாய்ஸ் அணியில் விளையாட வைக்கிறார் அந்த அணியின் கேப்டன் சாந்தனு. பின்னர் அவர்களுக்குத் தர வேண்டிய பணத்திற்காக அவர்களது கிளப்புக்குச் செல்கிறார் சாந்தனு. அங்கு அந்த லீக் வீரர்களால் அவமானப்படுகிறார். அங்கு வேறு வேலையாக வந்த ப்ளூ ஸ்டார் அணியின் கேப்டன் அசோக் செல்வன், அதைத் தட்டிக் கேட்கப் போய் தகராறு முற்றுகிறது. ஊரில் பிரிந்து இருக்கும் சாந்தனு, அசோக் செல்வன் இருவரையும் சேர வைத்து அந்த லீக் வீரர்களை எதிர்த்து கிரிக்கெட் ஆடத் தயார்படுத்துகிறார் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான பக்ஸ். தங்கள் ஊர் சண்டையை மறந்து சாந்தனு, அசோக் செல்வன் லீக் வீரர்களை எதிர்த்து வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

90களின் கிராமத்தையும், மக்களையும், அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். பல விஷயங்களை கவனமுடன் செய்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

அசோக் செல்வன், சாந்தனு இருவரும் திரையிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். தொடர்ந்து நல்ல படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் அசோக் செல்வன். சாந்தனுவுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கலாம். இருவருமே அவர்களது கதாபாத்திரங்களில் அப்படியே புகுந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களிருவரையும் மீறி அதிகக் கவனம் பெறுபவராக பிருத்வி நடித்திருக்கிறார். அசோக் செல்வன் தம்பியாக அவரது கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிருத்வியும் பிரமாதமாய் நடித்திருக்கிறார்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நிஜ வாழ்க்கையில் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதற்குக் காரணமாய் இந்தப் படத்தின் காதல் அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு இருவரும் திரையில் நிஜக் காதலர்களாகவே தெரிகிறார்கள். கீர்த்தி பாண்டியன் போன்ற யதார்த்த நடிகையரை தமிழ் சினிமா இத்தனை காலமும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற கேள்வி எழுகிறது.

உள்ளூர் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரராக பக்ஸ். ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு சில அண்ணன்கள் நிச்சயம் இருப்பார்கள். சாந்தனுவின் மாமாவாய் நடித்திருப்பவரும் பொருத்தமாய் நடித்திருக்கிறார். அந்த கிரிக்கெட் கிளப்பின் கோச் அவரது திமிரை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார். அசோக் செல்வன் அம்மா லிஸி ஆண்டனி கதாபாத்திரமும், அப்பா குமரவேல் கதாபாத்திரமும் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிக்க வைக்கின்றன.

கோவிந்த் வசந்தா கதைக்கேற்ற விதத்தில் பாடல்களை மெட்டமைத்திருக்கிறார். பின்னணி இசையில் சில ரிபீட் ஆகும் உணர்வு. தமிழ் அழகனின் ஒளிப்பதிவு பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறது. கதைக்களத்தை, பின்னணிகளை அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார்.

இடைவேளை வரை காதல், கொஞ்சம் கிரிக்கெட் என சுவாரசியமாய் நகர்கிறது படம். இடைவேளைக்குப் பின் அப்படியே மாறிவிடுகிறது. வெறும் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே வைத்து ஓட்டியிருக்கிறார்கள். அண்ணனின் காதலுக்கு முடிவில்லாத முடிவையும், தம்பியின் காதலுக்கு ஒரு ஆரம்பத்தையும் வைத்து முடித்துவிட்டார்கள். முதல் பாதியில் இருந்த சுவாரசியம், ரசனை இரண்டாவது பாதியில் காணாமல் போய்விட்டது. படத்தின் நீளம் மிக அதிகம். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்பதை யூகிக்க முடிவது படத்திற்கு மைனஸ்.

ப்ளூ ஸ்டார் - இணைந்த கைகள்…

 

ப்ளூ ஸ்டார் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ப்ளூ ஸ்டார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓