போர் தொழில்,Por Thozhil
Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இ4 எக்ஸ்பரிமென்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோஸ்

இயக்கம் - விக்னேஷ் ராஜா
இசை - ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு - அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல்
வெளியான தேதி - 9 ஜுன் 2023
நேரம் - 2 மணிநேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

ஒரு முழுமையான க்ரைம் திரில்லர் படம் தமிழ் சினிமாவில் வருவதும் அபூர்வமானதுதான். ஒரு நாவலைப் படிப்பது போன்ற பரபரப்புடன் நகரும் படங்கள்தான் ரசிகர்களை ஈடுபாட்டுடன் ரசிக்க வைக்கும். அப்படி ஒரு படமாக இந்த 'போர் தொழில்' படம் அமைந்திருக்கிறது. ஒரு அறிமுக இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு நேர்த்தியான படம் வந்திருப்பதும் ஆச்சரியம்தான். படத்திற்கு என்ன தேவையோ, எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே திரைக்கதையில் சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

திருச்சியில் தொடர்ந்து ஒரே மாதிரியான சில இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அதைப் பற்றி விசாரிக்க க்ரைம் பிராஞ்ச் அதிகாரியான சரத்குமார் பணி அமர்த்தப்படுகிறார். அவருக்கு உதவியாக புதிதாக வேலைக்குச் சேரும் அதிகாரியான அசோக் செல்வனும் நியமிக்கப்படுகிறார். டெக்னிக்கல் உதவியாளராக நிகிலா விமல் அவர்களுடன் செல்கிறார். அவர்கள் சென்ற பிறகும் சில கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகளுக்குப் பின்னணி என்ன, யார் கொலை செய்கிறார்கள் என்பதை சரத்குமார், அசோக் செல்வன் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


சீனியர் அதிகாரியான சரத்குமார் எப்போதுமே ஒரு கடுகடுப்புடன் நடந்து கொள்பவர். அவர் எதைச் செய்தாலும் அதில் சிறு கோபம் ஒன்று இருக்கும். யாரிடமும் கொஞ்சம் கூட கனிவாகப் பழகாத சிலர் அப்படி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை தனது அனுபவத்தால் மேலும் சிறப்பாக்கி இருக்கிறார் சரத்குமார். படத்தில் எப்போதும் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை அப்படியே குறைத்திருக்கலாம். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் புகைபிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகங்கள் தவறாமல் வந்துவிடுகிறது.

போலீஸ் வேலையில் புதிதாக வேலைக்குச் சேருபவர்களிடம் ஒரு பதட்டம் இருக்கும். கோல்டு மெடல் வாங்கி டிசிபி அந்தஸ்தில் சேர்ந்தாலும் அசோக் செல்வனிடம் அந்தப் பதட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில்தான் அந்தப் பதட்டத்தைக் குறைத்து தனது பணியில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து பின் அசத்தலாகவும் நடந்து கொள்கிறார். “தெகிடி, ஓ மை கடவுளே” படங்களுக்குப் பிறகு அசோக் செல்வனுக்கு இந்த 'போர் தொழில்' அவரது சினிமா தொழிலில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.


படத்தில் ஒரு பெண் கதாபாத்திரமாவது இருக்க வேண்டும் என நிகிலா விமல் கதாபாத்திரத்தைச் சேர்த்திருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும், ஆரம்பத்திலேயே அசோக் செல்வனுக்கு சிறப்பான ஆலோசனை சொல்லி அவரை உத்வேகப்படுத்தும் ஒரு கதாபாத்திரம். கடைசியில் நிகிலாவையும் கொலைகாரனிடம் சிக்க வைப்பது எதிர்பாராத திருப்பம்.


படத்தின் முக்கிய வில்லனாக மறைந்த நடிகர் சரத்பாபு, மற்றொரு முக்கிய வில்லனாக சுனில் சுகதா இருவருமே நிறையவே பயமுறுத்துகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் தலைமைக் காவலராக நடித்திருக்கும் பிஎல் தேனப்பன், பிளாஷ்பேக்கில் வரும் இன்ஸ்பெக்டரான சந்தோஷ் கீழட்டூர் குறிப்பிடும்படியாக நடித்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை த்ரில்லிங்கான காட்சிகளுக்கு நிறையவே உயிரூட்டியிருக்கிறது. இரவு நேரக் காட்சிகளிலும், மற்ற காட்சிகளிலும் ஒரு த்ரில்லர் படத்திற்குரிய மிரட்டலான ஒளிப்பதிவைச்செய்திருக்கிறார் கலைச்செல்வன் சிவாஜி.

2010ல் நடக்கும் கதை, அந்தக் காலகட்டத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அதைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சீரியல் கில்லர்கள் என்றாலே அவர்கள் சைக்கோவாகத்தான் இருப்பார்கள் என்பது பல படங்களில் பார்த்த ஒன்று. ஒரு சில சினிமாத்தனமான காட்சிகள் ஆங்காங்கே இருப்பது மட்டுமே படத்திற்கு மைனஸ். அவற்றைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். படம் முடிந்துவிட்டது என்று எழுந்த சமயத்தில், ஒரு சிறுவன் சம்பந்தப்பட்ட காட்சியை வைத்து 'டச்சிங்' ஆக முடித்திருப்பது பாராட்டுக்குரியது.

போர் தொழில் - லாபம்

 

போர் தொழில் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

போர் தொழில்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓