ஜவான்,Jawan
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - அட்லீ
இசை - அனிருத்
நடிப்பு - ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி
வெளியான தேதி - 7 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 49 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தேசப்பற்று வேணுமா இருக்கு, அப்பா, மகன் பிரியணுமா இருக்கு, கணவன், மனைவி பிரியணுமா இருக்கு, மகள் சென்டிமென்ட் வேணுமா இருக்கு, மகன் சென்டிமென்ட் வேணுமா இருக்கு, அம்மா சென்டிமென்ட் வேணுமா இருக்கு, பிளாஷ்பேக்ல ஒரு கதை வேணுமா இருக்கு, ஆக்ஷன் படமா வேணுமா இருக்கு, விவசாயிங்க பிரச்சினை வேணுமா இருக்கு, ஊழலை எதிர்க்கிற கதை வேணுமா இருக்கு, வாக்கு அரசியல் பேசணுமா இருக்கு, மிலிட்டரி கதை வேணுமா இருக்கு….ஏன், விக்ரம், ஜெயிலர் மாதிரியும் வேணுமா அதுவும் இருக்கு… என ஒரே படத்தில் 20, 23 கதைகள் வைத்திருந்தாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்தப் படம் பல படங்களின் கதை போலத் தெரியலாம், ஆனால், ஹிந்தி ரசிகர்களுக்கு இப்படி ஒரு படம் என்பதே புதிதாகத்தான் இருக்கும்.

விக்ரம் ரத்தோர் என்ற பெயரில் மெட்ரோ ரயிலைக் கடத்தி, ஏழு லட்சம் விவசாயிகளின் கடன்களை அடைக்கிறார் ஷாரூக்கான். அடுத்து சுகாதார மந்திரியைக் கடத்தி 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கிறார். அந்தக் கடத்தல்கள் எதனால் நடக்கிறது என்பதை விசாரிக்கும் அதிகாரி நயன்தாரா. தனது மகளுக்கு ஒரு அப்பா வேண்டுமென்பதற்காக ஷாரூக்கைத் திருமணம் செய்து கொள்கிறார். விக்ரம் ரத்தோர் என்ற பெயரில் கடத்தல்களில் ஈடுபட்ட ஷாரூக்கைத்தான் தான் திருமணம் செய்து கொண்டோம் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் நயன்தாராவுக்குத் தெரிகிறது. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போதுதான் யார் விக்ரம் ரத்தோர், எதற்காக இப்படிச் செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறார். அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விவசாயிகளுக்கு உதவும், ஏழை மக்களுக்கு உதவும் பல தமிழ்ப் படங்களைப் பார்த்துள்ளோம். ஆனால், அந்தப் படங்கள் சொல்லாத பின்னணி அரசியலை இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. இதற்கு முன்பு அவர் இயக்கிய தமிழ்ப் படங்கள் சந்தித்த விமர்சனத்தையே இந்தப் படமும் சந்திக்கும். அதே போல அந்தப் படங்கள் பெற்ற வெற்றி, வசூலை விடவும் இந்தப் படம் அதிகம் வசூலித்தால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழ் நடிகர்கள், நடிகைகளும் படத்தில் இருப்பதால் ஒரு டப்பிங் படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை.

விக்ரம் ரத்தோர், ஆசாத் என இரண்டு கதாபாத்திரங்கள் ஷாரூக்கான். அப்பா, மகன் இருவருமே அதிரடியில் கலக்கியிருக்கிறார்கள். ஷாரூக்கானுக்கே உரிய ஒரு ஸ்டைல் படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. அவருக்குப் போட்டியாக நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்றவர்கள் நடித்திருந்தாலும் இது ஒரு ஷாரூக் படம் என காட்சிக்குக் காட்சி பேச வைக்கிறார்.

மத்திய விசாரணை அதிகாரியாக நயன்தாரா. ஏற்கெனவே இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை 'இமைக்கா நொடிகள்' படத்தில் அவர் செய்திருந்தாலும், இந்தப் படத்தில் இன்னும் ஸ்பெஷலாகத் தெரிகிறார். அவருக்கும் ஷாரூக்கிற்கும் இடையில் காதல் காட்சிகள் இல்லையென்றாலும் இருவரும் இடம் பெறும் காட்சிகளில் காதல் வழிகிறது.

ஆயுதக் கடத்தல், தொழிற்சாலைகளை நடத்தும் பெரிய பிசினஸ்மேன், இந்திய அரசியலை பின்னாலிருந்து ஆட்டுவிப்பவர் என கார்ப்பரேட் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. கதாபாத்திரம் புதிதாக இல்லையென்றாலும் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் புதிது.

பிளாஷ்பேக்கில் அப்பா ஷாரூக்கின் ஜோடியாக தீபிகா படுகோனே. சிறப்புத் தோற்றம் என்றாலும் அவருக்கு ஏற்படும் முடிவு கண்களில் கண்ணீரை வரவழைக்கும். யோகி பாபு ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். ஷாரூக்கின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'களாக பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சஞ்சிதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக், லெஹர் கான், ஆலியா குரேஷி அதிரடியில் அசத்துகிறார்கள்.

அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பெரும் பலம். ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம். படம் இரண்டே முக்கால் மணி நேரம் என்றாலும் விறுவிறுப்பாகத் தொகுத்திருக்கிறார் ரூபன்.

படத்தின் முதல் அரை மணி நேர மெட்ரோ ரயில் காட்சிகள் மிகவும் நீளம். பல விஷயங்களை ஒரே படத்தில் சொல்லியிருப்பதும் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அடுத்து இப்படித்தான் காட்சிகள் போகும் என யூகிக்க முடிவதும் மைனஸ். மற்றபடி ஆக்ஷன் சினிமா பிரியர்களுக்கு பிடிக்கும்.

ஜவான் - பதக்கத்துடன்…

 

ஜவான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஜவான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓