அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
சென்னை : சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. 400க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் அதிகமான சினிமா பாடல்களையும், 5000 பக்தி பாடல்களையும் இவர் எழுதி உள்ளார். சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமாக திகழ்ந்த இவர் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி பிறந்தவர் பிறைசூடன். தனது பள்ளிப் பருவத்திலேயே கவியரங்கம், பட்டி மன்றம் என்று தனது பேச்சு திறமையை இயல்பாகவே வளர்த்துக் கொண்டவர். தனக்குள் உள்ள கவிதை புனையும் திறமையைக் கொண்டு சினிமாவில் நுழைய முற்பட்டு பல போராட்டங்களுக்குப் பின், ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1984ல் வெளிவந்த "சிறை" என்ற படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். "ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்" என்ற பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல்.
"குரோதம்-2", மற்றும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளிவந்த படங்களான "சத்திரிய தர்மம்", "சங்கர்", "ஸ்ரீராம ராஜ்ஜியம்" போன்ற படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்திருக்கின்றார். சதுரங்க வேட்டை, "புகழ்" ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் காட்டிக் கொண்டவர் பிறைசூடன்.
பன்முகத் தன்மை வாய்ந்த கவிஞர் பிறைசூடன் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியிருக்கின்றார். இதுதவிர 5000 பக்திப் பாடல்களும் எழுதியுள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் பிறைசூடன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தார். தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ் சமூகத்துக்கு இவர் வழங்கியுள்ளார். தமிழக அரசின் கபிலர் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெள்ளியன்று மாலை 3மணியளவில் இவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.