கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது | இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி | வினோத நோய் : கரண் ஜோகர் விளக்கம் | அமேசான் ஓடிடி தளத்திலும் இனி விளம்பரங்கள் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம் |
பி யு சின்னப்பா, ஜெமினி கணேசன் போன்ற ஆகச் சிறந்த திரைக்கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கிய புதுக்கோட்டை மாநகரம், மேலும் ஓர் கலையுலக நாயகனை தமிழ் திரையுலகிற்கு வழங்கி சிறப்பித்திருக்கிறது. கல்லூரி காலங்களில் நாடகங்களில் நடித்து பரிசு பெற்ற அந்த புதுக்கோட்டை இளைஞன், தானும் பி யு சின்னப்பா, ஜெமினி கணேசன் போல் சிறந்த நடிகனாக வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார்.
இளங்கலை பட்டப் படிப்பினை முடித்து, சென்னையில் இயங்கி வந்த 'சினிமா டைஜஸ்ட்' என்ற ஆங்கில சினிமா பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து, அதன் பின் கிண்டியிலுள்ள ராஜபவனத்தில் குமாஸ்தா பணி கிடைத்து, பணிபுரிந்து கொண்டே ஒவ்வொரு சினிமா கம்பெனியின் படியேறி இறங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் சண்முகசுந்தரம்.
இவ்வாறு சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து கொண்டிருந்த அந்த இளைஞருக்கு, நடிகர் டி எஸ் துரைராஜ் தனது சொந்தப் படமான “ஆயிரம் காலத்துப் பயிர்” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை வழங்கினார். தயாரிப்பாளர் எம் ஏ வேணு அவரது படமான “துளசி மாடம்” திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பினை வழங்கியிருந்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிவரும் முன்பே, ஏ வி எம் தயாரிப்பில், இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் இவர் நடித்திருந்த “நானும் ஒரு பெண்” திரைப்படம் வெளிவந்தது. படம் வெளிவந்து வெற்றிப் படமாக அமைந்து புகழ் சேர்த்ததால், படத்தில் நடித்திருந்த அந்த புதுக்கோட்டை இளைஞர் சண்முகசுந்தரம் தனது பெயரை ஏ வி எம் ராஜன் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
தமிழ் திரையுலகில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே அவர்களின் பெயருக்கு முன் அவர்கள் நடிகர்கள் ஆவதற்கு காரணமான தயாரிப்பு நிறுவனங்களின் பெயரையோ, அல்லது அவர்கள் நடித்த முதல் படத்தின் பெயரையோ இணைக்கச் செய்து, அதன் மூலம் ஒரு தனிச் சிறப்பினையும், அங்கீகாரத்தையும் பெற்று வந்தனர். அந்த வகையில் 'ஜெமினி' கணேசன்,
'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'வெண்ணிற ஆடை' மூர்த்தி போன்ற நடிகர்களின் வரிசையில் இவரும் தனது கலையுலகப் பயணத்திற்கு வித்திட்ட ஏ வி எம் நிறுவனத்தின் பெயரை தனது பெயரோடு இணைத்து ஒரு தனித்தன்மை வாய்ந்த திரைக்கலைஞராக வலம் வந்தார். நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி, எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, எம் ஆர் ராதா, புஷ்பலதா, நாகேஷ், மனோரமா ஆகியோரது நடிப்பில் 1963ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாகவும், ஏ வி எம் ராஜனின் முதல் திரைப்படமாகவும் வெளிவந்து, அவரது வெள்ளித்திரைப் பயணத்தின் வெற்றிக் கணக்கையும் துவக்கி வைத்தது.