இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கடின உழைப்பு, கச்சிதமான திட்டமிடல், கடுகளவும் தளர்வு கொள்ளா மனம், இம்மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற ஏ வி மெய்யப்ப செட்டியாரால் உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம்தான் ஏ வி எம். இந்த மூன்றெழுத்து கலையுலகக் கனவுக்கூடம் நமக்களித்துச் சென்ற கற்பனைக்கெட்டா கலையுலகக் காவியப் படைப்புகள் ஏராளம்! ஏராளம்!! அவற்றில் ஒன்றுதான் 1945ல் வெளிவந்த “ஸ்ரீவள்ளி” என்ற திரைக்காவியம்.
தனது “பிரகதி ஸ்டூடியோஸ்” பேனரில் இந்தத் திரைக் காவியத்தை தயாரிக்க முற்பட்டவுடனே, ஏ வி மெய்யப்ப செட்டியார் அனைத்து முருகன் திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்டு, அதன் பின்புதான் படப்பிடிப்பையே துவக்கினார். “ஸ்ரீவள்ளி” உட்பட தொடர்ந்து தனது மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், நடிகை லக்ஷ்மியின் தாயாரும், நடிகையுமான குமாரி ருக்மணியை நாயகியாக வள்ளி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஏ வி மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தமும் செய்துவிட்டார்.
நாயகன் வேலனாக நடிக்க பேராவல் கொண்டிருந்த நடிகர் டி ஆர் மகாலிங்கத்தையும், இந்தப் படம் முடியும் வரை வேறு எந்தப் படங்களிலோ அல்லது நாடகங்களிலோ நடிக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தோடு, அவரையும் படத்தின் நாயகனாக்கி, படத்தை இயக்கியும் இருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். மறைந்த பிரபல பாடகரான எஸ் ஜி கிட்டப்பாவின் குரல் போலவே டி ஆர் மகாலிங்கத்தின் குரலும் இருந்ததால் அதை நன்றாக பயன்படுத்தி படத்தின் வெற்றிக்கு துணை நிற்க முற்பட்டார் படத்தின் ஒலிப்பதிவாளரான சீனிவாச ராகவன்.
படப்பிடிப்பு முடிந்து, படத்தை தனது “பிரகதி ஸ்டூடியோஸ்” தியேட்டரில் போட்டுப் பார்த்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். டி ஆர் மகாலிங்கம் பாடிய பாட்டுகள் கணீரென ஒலிக்க, படத்தின் நாயகியான குமாரி ருக்மணி பாடிய பாட்டுகள் கரகரப்பாக, இனிமையின்றி ஒலிப்பதைக் கண்டு, படத்தின் ஒலிப்பதிவாளர் சீனிவாச ராகவனுடன் கலந்து பேசி, நாயகி வள்ளி பாடும் பாடல்களை மட்டும் பிரபல பின்னணிப் பாடகி பி ஏ பெரியநாயகியை வைத்து பாட வைத்து, ஒலிப்பதிவு செய்து “போஸ்ட் சின்கரனைசேஷன்” செய்து விடலாம் என முடிவும் செய்யப்பட்டது.
தனது குரலுக்குப் பதிலாக வேறு ஒரு பின்னணிப் பாடகியின் குரலைப் பயன்படுத்துவதை விரும்பாத படத்தின் நாயகி குமாரி ருக்மணி, மூன்று படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நீங்கள் எனக்கிட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தால், பிறர் குரலைப் பயன்படுத்திக் கொள்ள நானும் சம்மதிக்கின்றேன் என்ற நிபந்தனையை விதிக்க, வேறு வழியின்றி படத்தின் வெற்றியை மனதிற் கொண்டு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். அதன் பின் குமாரி ருக்மணியின் பாடல்களுக்குப் பதிலாக பி ஏ பெரியநாயகியின் குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டது.
ஒரு படம் எடுத்த பின்பு அதில் ஏற்கனவே பதிவு செய்திருந்த குரலை அழித்துவிட்டு, “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒரு புதிய குரலை பதிவு செய்து வெளியிட்டு வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவந்ததுதான் இந்த “ஸ்ரீவள்ளி”. மேலும் கிராமபோன் இசைத்தட்டுகளில் படத்தின் வசனங்கள் வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமைக்கும் உரிய திரைப்படமாக இருந்ததும் இந்த “ஸ்ரீவள்ளி” திரைப்படமே. 1945ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு டி ஆர் மகாலிங்கம் மற்றும் பி ஏ பெரியநாயகியின் குரலில் வந்த பாடல்களும் முக்கிய பங்கு வகித்திருந்தன என்றால் அது மிகையன்று.