புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
ஏராளமான பொருட் செலவில், தாராளமான விளம்பரங்களோடு, பிரமாண்டமான முறையில் பல அரிய கலைப் படைப்புகளை தயாரித்து, கலைக்கும், கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்த “ஜெமினி ஸ்டூடியோ” என்ற கலைப் பெட்டகத்தை நிறுவிய எஸ் எஸ் வாசன் தயாரித்த பல அற்புத திரைக் காவியங்களில் ஒன்றுதான் “ஒளவையார்”. “மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை…” என்று இலக்கியத்தில் எடுத்துரைத்த மதுரையின் வளமையையும், யானை கட்டிப் போரடித்தால் எப்படி இருக்கும்? என்பதனையும் காட்சிப்படுத்திக் காட்டி, கலைக்கு பெருமை சேர்த்த கலைமேதைதான் ஜெமினி எஸ் எஸ் வாசன்.
1953ல் வெளிவந்த தனது “ஒளவையார்” திரைப்படத்தில் யானைகள் போரடிக்கும் காட்சியை காட்டியிருந்ததோடு, திரளான யானைக் கூட்டங்கள் பிரமாண்ட கற்கோட்டையை தகர்க்கின்ற காட்சியையும் காண்பித்து காண்போரை பிரமிக்கச் செய்திருந்தார் எஸ் எஸ் வாசன். ஒளவையின் பிறப்பில் தொடங்கி, சிறுமியாக “பாலும் தெளிதேனும்” என பாடியது முதல், கன்னியான பின் மணவாழ்வை துறப்பதற்கு முதுமையை ஆண்டவனிடம் வேண்டிப் பெறுவது, மன்னர்களிடையே சமாதானத்திற்கு பாடுபட்டது, பாரியின் பெண்களை பாதுகாத்தது என ஒளவையாரை ஒளி ஓவியமாக நம் கண்முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருப்பார் எஸ் எஸ் வாசன்.
எல்லாப் படங்களுக்கும் செய்வதுபோல் பலதரப்பட்ட ரசனைகளைக் கொண்ட தனது ஸ்டூடியோ தொழிலாளர்கள், 'ஆனந்த விகடன்' ஆசிரியர்கள், கம்பாஸிடர்கள் என அனைவரையும் அழைத்து, அவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, படத்தைப் பார்த்துவிட்டு அவரவர் அபிப்ராயத்தை எழுதி பெட்டியில் போட்டுவிட்டு போகுமாறு எஸ் எஸ் வாசன் கூற, அதன்படி எழுதிப் போடப்பட்ட அபிப்ராய கடிதங்களில் ஒன்றில் “பேசாமல் இப்படத்தைக் கடலில் எறிந்து விடலாம்” என்றிருந்ததைப் பார்த்த எஸ் எஸ் வாசன், மறுநாள் அனைவரையும் அழைத்து “ஒளவையார்” படத்தை மீண்டும் பாருங்கள்.
படத்தை ஜனரஞ்சகமாக்க, கடலில் எறியாமல் காப்பாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்று விருப்பு வெறுப்பு ஏதுமின்றி எழுதிக் கொடுத்த பின்னரே நீங்கள் போகலாம். உங்களுக்கு இங்கேயே சாப்பாடு, காபி, டிபன் மற்றும் நீங்கள் கேட்பதெல்லாம் கொடுக்கப்படும் என்றார். காலை பத்தரை மணியிலிருந்து இரவு பத்தரை மணி வரை அனைவரும் அங்கேயே தங்கி ஒவ்வொருவரும் முப்பது நாற்பது பக்கங்கள் கொண்ட தங்களது விமர்சனத்தையும், ஆலோசனைகளையும் எழுதித் தர, அதன் பின் “ஒளவையார்” திரைப்படத்திற்கு புது வடிவம் கிடைக்கப் பெற்றது.
நடிகை பேபி சச்சு குழந்தை ஒளவையாக, குசலகுமாரி குமாரி ஒளவையாக, கே பி சுந்தராம்பாள் முதுமை பெற்ற ஒளவையாக நடித்திருந்தனர். “ஒளவையே அரியது எது? பெரியது எது? என்று கேட்கும் இடையர் குல சிறுவனாக பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கே பாலாஜி நடித்திருந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் கொத்தமங்கலம் சுப்பு. 1953ல் வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது எஸ் எஸ் வாசனுக்கு.