புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
கலையுலக மூவேந்தர்கள் என தமிழ் திரையுலகமும், ரசிகப் பெருமக்களும் கொண்டாடி மகிழ்ந்தது மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய இந்த மூவரையும்தான். 1950களிலிருந்தே இவர்கள் கவனிக்கப்படத்தக்க திரை நட்சத்திரங்களாக அறியப்பட்டனர். இந்த மூவரின் திரைப்பயணமும் மூன்று வித்தியாசமான பாதைகளில் பயணித்து ரசிகர்களின் ஏகோபித்த நன்மதிப்பையும், நற்பெயரையும் சம்பாதித்திருந்தன.
முதலாமவரான மக்கள் திலகம் எம் ஜி ஆர் புரட்சிகரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததோடு, நாயகன் என்பவன் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு நல்லவனாகவும், தீயவர்களை அழிக்கும் வல்லவனாகவும், ஏழை எளியோருக்கு உதவும் கொடையாளியாகவும் இருப்பதாக தனது கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்தது மட்டுமின்றி, வாள் வீச்சு, சிலம்பம் போன்ற ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சண்டைக் காட்சிகளும், நல்ல கருத்தாழமிக்க பாடல் காட்சிகளும் இருப்பதில் கவனம் கொண்டு தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வந்தார்.
இரண்டாமவரான நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நடிப்பிற்கு தீனி போடும் வகையில் உள்ள குடும்ப உறவுகளை மேம்படுத்தும், உணர்த்தும் விதமான கதாபாத்திரங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மன், வ உ சிதம்பரம்பிள்ளை போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை கதையின் நாயகனாகவும், புராண இதிகாச திரைப்படங்களில் பரம்பொருளாகவும் தோன்றி, நடிப்பின் எல்லையை நிர்ணயிக்கும் வண்ணம், நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும், கதாபாத்திரங்களையும் தெரிவு செய்து நடித்து, ஒரு நடிப்பின் இலக்கணமாய் தனது கலையுலகப் பயணத்தை தொடர்ந்தார்.
மூன்றாமவரான காதல் மன்னன் ஜெமினிகணேசன், தன்னுடைய வசீகரமான முகத் தோற்றத்தாலும், இயல்பான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, முன்னிருவரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவை ஆட்சி செய்த அற்புதமான திரைக்கலைஞர் இவர். காதல், குடும்பம், சமூகம், சரித்திரம் என அனைத்து விதமான திரைப்படங்களிலும் தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி, இயக்குனர்களின் நாயகனாகவும், கதாநாயகியரின் நாயகனாகவும், ரசிகர்களின் நாயகனாகவும் தமிழ் திரையுலகில் ஒரு காதல் மன்னனாக தனது திரைப்பயணத்தைத் தொடர்ந்தார்.
இவ்வாறு தமிழ் சினிமாவின் முடிசூடா மூவேந்தர்களாக அறியப்பட்ட இந்த மூவரில் முதலாமவரான எம் ஜி ஆர் நடித்து, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து, டி ஆர் சுந்தரம் இயக்கி 1956ல் வெளிவந்த “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்ற திரைப்படம்தான் தமிழ் திரையுலகம் கண்ட முதல் வண்ணத்திரைப்படம்.
1959ம் ஆண்டு தயாரிப்பாளரும், இயக்குநருமான பி ஆர் பந்துலு தனது “பத்மினி பிக்சர்ஸ்” சார்பில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நாயகனாக நடிக்க வைத்து எடுத்த திரைப்படம்தான் “வீரபாண்டிய கட்டபொம்மன்”. ஆப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி சிறந்த நடிகருக்கான விருதினையும், சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினையும் பெற்றுத் தந்த இத்திரைப்படம்தான் தமிழ் திரையுலகின் இரண்டாவது வண்ணத்திரைப்படம்.
கலையையும், நாதஸ்வர இசையையும் முக்கிய பங்காற்றச் செய்து, இயக்குநர் எம் வி ராமன் தயாரித்து இயக்கி, காதல் மன்னன் ஜெமினிகணேசன், சாவித்திரி, குமாரி கமலா, ஆர் எஸ் மனோகர் ஆகியோரது நடிப்பில்; 1962ல் வெளிவந்த “கொஞ்சும் சலங்கை” திரைப்படம்தான் தமிழ் திரையுலகின் மூன்றாவது வண்ணத்திரைப்படமாக அறியப்பட்டது. காருக்குரிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசையோடு இணைந்து எஸ் ஜானகி பாடியிருந்த “சிங்கார வேலனே தேவா” என்ற சிறப்புமிக்க பாடலைத் தந்த திரைப்படமாகவும் இத்திரைப்படத்தை நாம் அறியலாம்.
இவ்வாறு தமிழ் திரையுலகின் மூவேந்தர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகிய இந்த மூவரும்தான் தமிழ் திரையுலகின் முதல் மூன்று வண்ணத்திரைக் காவியங்களை அலங்கரித்திருந்தனர் என்பது அவர்களின் கலையுலகப் பயணத்திற்கு மேலும் மகுடம் சூட்டிய ஒன்று என்றால் அது மிகையன்று.