டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
தமிழ் திரைப்படங்களில் கதையோடு ஒட்டிய, கதைக்குத் தேவையான இடங்களில் இடம்பெறும் பாடல்களில், தமிழ் பாடல்கள் தவிர்த்து, அங்கே ஹிந்திப் பாடல்களை இடம் பெறச் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என நாம் நினைத்தாலும், அதை சாத்தியமாக்கி காட்டியிருக்கின்றனர் நமது தமிழ் திரைப்பட இயக்குனர்கள். கதைக்குத் தேவை எனும் பட்சத்தில் அதை ரசிகர்களும் ரசிக்கத்தான் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சில திரைப்படங்களைப் பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் காண இருக்கின்றோம்.
1977ம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்து, இயக்குநர் ஏ பி நாகராஜன் இயக்கத்தில், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் வெளிவந்த திரைப்படம்தான் “நவரத்தினம்”. போலீஸாரால் தேடப்பட்டு வரும் பெரும் செல்வந்தரான எம் ஜி ஆர், அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு நாடக அரங்கிற்குள் தஞ்சம் புக, அங்கு அரங்கேற இருக்கும் ஹிந்தி நாடகத்தின் நாயகன் மது போதையால் நடிக்க இயலாத நிலை ஏற்பட, நாடகத்தின் நாயகியான ஹிந்தி நடிகை ஜரீனா வஹாப் எம் ஜி ஆரை நாயகனாக நடிக்கும்படி வேண்டுகோள் விடுக்க, போலீஸாரின் கண்களிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி அந்நாடகத்தில் எம் ஜி ஆர் நாயகனாக நடிப்பதாக வரும் காட்சியில் இடம்பெற்ற பாடல் ஒரு ஹிந்திப் பாடல். “லட்கே ஸே மிலி லட்கி” என்று ஆரம்பமாகும் இந்தப் பாடலை, ஹிந்தி பாடலாசியரான பி எல் சந்தோஷி எழுத, கே ஜே ஏசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் பாடியிருந்தனர்.
அதன் பின்னர் 1980லும் கூட, நம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் இதுபோன்ற புதிய அணுகுமுறையை செய்யத் தவறியதில்லை. டில்லியில் கதை பயணிப்பதால் “வறுமையின் நிறம் சிவப்பு” திரைப்படத்தில் இயக்குநர் கே பாலசந்தரும், லக்னோவில் கதை தொடங்குவதால் “நண்டு” திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரனும் ஹிந்திப் பாடல்களை தங்களது படங்களில் இடம்பெறச் செய்திருந்தனர். இந்த இரண்டு திரைப்படங்களின் ஹிந்திப் பாடல்களுக்கான வரிகளை எழுதித் தந்தது மறைந்த பின்னணிப் பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ். அன்றைய காலகட்டத்தில் இது ஒரு புதுமை என பாராட்டியும் மகிழ்ந்தனர் ரசிகர்கள். ஆனால் இப்படி ஒரு புதுமையை 1953லேயே செய்து காட்டியவர் மறைந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான வி நாகையா.
ஹிந்தி எதிர்ப்பு உணர்வினை மேலோங்கச் செய்து கொண்டிருந்த திராவிட கழகமும், தி மு கழகமும் தீவிரம் காட்டிவந்த அந்த நாட்களிலேயே நடிகர் வி நாகையா தனது “என் வீடு” என்ற திரைப்படத்தில் இரண்டு முழு ஹிந்திப் பாடல்களை இடம்பெறச் செய்திருந்தார். படத்தின் கதை மும்பையிலும் பயணப்படுவதால், மும்பை காட்சிகளின் இடையே கதையோடு பொருந்திப் போகும் வண்ணம் ஹிந்திப் பாடல்களை இணைத்திருந்தார் நடிகர் வி நாகையா. இந்தப் படத்தின் ஹிந்திப் பாடல்களுக்கான வரிகளைத் தந்தவர் மும்பையைச் சேர்ந்த மீனாகபூர் என்பவர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்த நடிகர் வி நாகையா, சிவராம் என்ற நாயகன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். சாண்டில்யன் வசனம் எழுத, டி ஆர் ராஜகுமாரி, டி எஸ் பாலையா, கிரிஜா, வித்யாவதி ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் 1953ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்தது.