ஒரே படத்தில் அறிமுகமாகும் சின்னத்திரை நடிகைகள் | மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ |
தமிழ் திரையுலகின் நிரந்தர உச்ச நட்சத்திரமான மக்கள் திலகம் எம்ஜிஆர், 1936ஆம் ஆண்டு வெளிவந்த “சதிலீலாவதி” என்ற திரைப்படத்தில் ஒரு இன்ஸ்பெக்டராக துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலேயே பயணித்து வந்து, பின் “ராஜகுமாரி” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகன் என்ற அந்தஸ்திற்கு உயர்வு பெற்றார்.
பின் அவர் திரையுலகில் உள்ள காலம் வரை ஒரு இளம் நாயகனாகவே நடித்து புரட்சி செய்து புரட்சி நடிகரானார். மேலும் தான் நடிக்கும் படங்களில் தனக்கான கொள்கைகளை வரையறுத்து அதன்படியான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தெரிவு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்தார். நல்லவராக, புகை பிடிக்காதவராக, மது அருந்தாதவராக, பெண்களை மதிப்பவராக, பிற்போக்கு எண்ணம் இல்லாதவராக என தன்னை பின்பற்றும் ரசிகர்களை மனதிற் கொண்டு தனது படங்களின் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்தும் நடித்தார்.
அந்த வகையில் இயக்குநர் டிஆர் ராமண்ணா தனது ஆர்ஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆரை நாயகனாக வைத்து “குலேபகாவலி”, “பாசம்”, “பெரிய இடத்துப் பெண்”, “பணக்கார குடும்பம்”, “பணம் படைத்தவன்”, “பறக்கும் பாவை” என பல படங்களை எடுத்து வெற்றி கண்டவர். மேலும் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவரையும் தனது “கூண்டுக்கிளி” என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்த பெருமைக்கும் உரியவர்.
இவர் தனது ஆர்ஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆரை நாயகனாக வைத்து 1957ல் தயாரிக்க இருந்த திரைப்படம் தான் “காத்தவராயன்”. 1941ம் ஆண்டு பக்ஷிராஜா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பொம்மன் இராணி இயக்கத்தில், பியு சின்னப்பா மற்றும் எம்எஸ் சரோஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “ஆர்யமாலா” என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கமாக இதை எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் டி ஆர் ராமண்ணா.
படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில், எம்ஜிஆர் நடிப்பதற்கு சற்று சுணக்கம் காட்ட, விபரம் ஏதும் அறியாத இயக்குநர் டிஆர் ராமண்ணா காரணத்தை எம்ஜிஆரிடம் கேட்க, அப்போது எம்ஜிஆர் படத்தின் கதைப்படி நான் மந்திர தந்திர காட்சிகளில் நடிக்கும்படியாக இருக்கின்றது. அது என் கொள்கைக்கு மாற்றானதாக உள்ளது. அதனால் அதை சற்று மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற தனது யோசனையை எம்ஜிஆர் முன் வைத்தார். அதற்கு இயக்குநர் டிஆர் ராமண்ணா எம்ஜிஆரிடம் இது ஒரு புராணக்கதை. மேலும் இந்தக் கதையை அப்படியே படமாக்கி வெற்றி பெற்ற ஒரு படத்தைத்தான் நான் மீண்டும் எடுக்கின்றேன். அதில் எப்படி நான் மாற்றம் செய்ய முடியும் என்று எம்ஜிஆரிடம் கேட்டார்.
சரி நாம் இதை மீண்டும் ஒரு முறை நன்றாக யோசித்து அதன் பின் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பின்புதான் சிவாஜி கணேசனை நாயகனாக நடிக்க வைத்து “காத்தவராயன்” படத்தை எடுத்து முடித்து 1958ல் வெளியிட்டார் இயக்குநர் டிஆர் ராமண்ணா.
எம்ஜிஆர் நாயகனாக வெள்ளித்திரையில் தோன்றிய காலம் தொட்டு அவர் கலையுலகை விட்டு விலகும் வரை தன் கொள்கைக்கு மாறான எந்த ஒரு கதையிலும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட வசனங்களை பேசியதும் இல்லை. பாடல்களையும் தெரிவு செய்ததில்லை என்பதுதான் உண்மை.