தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருப்பவர் விஜய். 600 கோடி வசூல் படங்கள், 300 கோடி வசூல் படங்கள், 200 கோடி வசூல் படங்கள் என கடந்த சில வருடங்களில் மற்ற நடிகர்களை முந்தி ஆச்சரியப்படுத்தியவர். யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாது தனது 69வது படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்றும் சொன்னார். அது அவரது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது 68வது படமான 'தி கோட்' படம் கடந்த வருடம் உருவாகிக் கொண்டிருக்கம் போதுதான் இந்த அறிவிப்புகள் வெளியானது. அவரது 69வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கடைசியாக எச். வினோத் இயக்க உள்ளார் என்று உறுதிபடுத்தப்பட்டது.
இன்று காலை அப்படத்தைத் தயாரிக்க உள்ள பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இன்று மாலை தங்களது அடுத்த படமான தமிழ்ப் படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது என்று அறிவித்தது. அதனுடன் விஜய் நடித்த சில படங்களின் முகம் தெரியாத குட்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அது 'விஜய் 69' அறிவிப்புதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் என்று சொல்லப்பட்ட நிலையில் ஒரு 5 நிமிட வீடியோவை வெளியிட்டு நாளை மாலை 5 மணிக்கு 'தளபதி 69' பட அறிவிப்பை வெளியிடுகிறோம் என்று அறிவித்துள்ளார்கள். அறிவிப்புக்கு முன்பாக ஒரு அறிவிப்பு.