‛‛பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் சொல்லாதீர்கள்; சங்கத்தில் சொல்லுங்கள்'': நடிகை ரோகிணி வலியுறுத்தல்
08 செப், 2024 - 03:45 IST
சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஹேமா கமிஷன் போன்று ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் விசாரணை கமிஷன் வேண்டும் என அந்தந்த மொழி நடிகைகள் உள்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்.,8) நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொரிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.
5 ஆண்டுகள் தடைபொதுக்குழு கூட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசாகா கமிட்டிகூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ‛‛பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும். புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்ல மாட்டோம்; புகார் மீது நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும். பாலியல் தொந்தரவு சினிமா துறையில் மட்டுமல்ல. மீ டூ சர்ச்சையின்போதே விசாகா கமிட்டி அமைத்தோம். நாங்கள் எங்கள் உரிமையை கேட்போம்'' என்றார்.
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி கூறியதாவது: பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. எங்களுக்கு புகாரளிப்பதற்காக 2019ம் ஆண்டே நடிகர் சங்க விசாகா கமிட்டி உருவாக்கப்பட்டது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர்.
தைரியமாக இருங்கள்புகார் கொடுப்பவர்கள் யார் என்பதை வெளியே தெரியப்படுத்த மாட்டோம். பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள்; அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை. திரையுலகம் பற்றி அவதூறு பேசப்படுகிறது. சில புகார்கள் வந்தது; அந்த விவகாரம் வெளியே தெரியகூடாது என்பதற்காக அதனை வெளியே சொல்லவில்லை. எங்கு இருந்தாலும் நம் உறுப்பினர்களுக்கு பாலியல் பிரச்னை நடந்தால் தைரியமாக இருங்கள்; புகாரளிக்க முன்வாருங்கள். திரைத்துறையில் பாலியல் புகார்களை அளிக்க பிரத்யேக எண் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கலைநிகழ்ச்சிகூட்டத்தில் பொருளாளர் கார்த்தி பேசுகையில், ‛‛நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவது நின்ற நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சேர்ந்து பங்கேற்பதாக உறுதியளித்தனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்'' என்றார்.