ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சமூக வலைத்தளங்கள் வளர்ந்த பிறகு அதில் சினிமா பற்றிய தகவல்களை சிலர் கொடுக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் கிடைத்தார்கள். அப்படி தகவல்களைப் பதிவிடுபவர்களை 'இன்புளூயன்சர்கள்' என அழைக்க ஆரம்பித்தார்கள். தங்களுக்குக் கிடைத்த பாலோயர்களை வைத்து அவர்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். வெளியாகும் புதிய படங்களைப் பற்றி ஏதாவது ஒரு கருத்து சொல்லி அந்தப் படங்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்தார்கள். லட்சக்கணக்கில் பாலோயர்களை வைத்திருப்பவர்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தேடிப் போய் விளம்பரங்களைக் கொடுத்து அவர்களது படங்களைப் பற்றி பரப்புரை செய்ய வைத்தனர்.
சுமாரான படங்களைக் கூட சூப்பரான படங்கள் என அந்தப் படங்களுக்கு 5/5 மதிப்பீடு அல்லது 4/5மதிப்பீடு என கொடுத்தார்கள். அவர்களால்தான் படங்களும் ஓடுவதாக நினைத்து பலரும் அவர்களைத் தேடிப் போனார்கள். அவர்கள் கொடுக்கும் மதிப்பீடுகள், அவர்கள் சொல்லும் விமர்சனங்களை தங்களது படங்களின் விளம்பரங்களுக்குத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் அப்படி செய்வதனால் விளம்பரத்திற்குப் பணமில்லாத சில தயாரிப்பாளர்களின் நல்ல படங்களும் மக்களைச் சென்றடையாமல் போனதுண்டு. நல்ல படங்களாக இருந்தாலும் அவர்கள் விளம்பரத்திற்கு பணம் தரவில்லை என்றால் அந்தப் படங்களை 'இன்புளூயன்சர்கள்' கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால், சமீபகாலமாக இந்த 'இன்புளூயன்சர்கள்' எதிர் விளம்பரங்களை செய்ய ஆரம்பித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த நடிகர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களது எதிர் தரப்பு நடிகர்களும் அவர்களுக்கு பணம் கொடுத்து அந்தப் படங்களைப் பற்றி மோசனமான எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஒரு உச்ச நடிகரின் படத்திற்கு இப்படியான எதிர் விளம்பரங்கள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு பரவி வருகிறது. இதற்காக ஒரு குறிப்பிட்ட நடிகர் சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில இன்புளூயன்சர்கள், யு டியூப் மூலம் சர்ச்சை கருத்துக்களை மட்டுமே பேசி வரும் சிலர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு லட்சக் கணக்கில் பணம் தரப்பட்டுள்ளதாம். அவர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு நாளைக்கு இத்தனை 'டுவீட்கள், பதிவுகள்' என போட்டுள்ளார்களாம்.
மேலும், தியேட்டர்களில் ரசிகர்கள் கருத்து என வீடியோ எடுக்கும் சில யு டியூப் சேனல்களிடம் அந்தப் படத்தைப் பற்றி தாறுமாறாக கிண்டலடித்து, டிரோல் செய்து பேசுபவர்களின் வீடியோக்களை மட்டும் போடச் சொல்லி இருக்கிறார்களாம். உச்ச நடிகர் மட்டுமல்லாது மேலும் சில நடிகர்களும் இப்படியான பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது.
இந்த இன்புளூயன்சர்களை சில தயாரிப்பாளர்கள்தான் வளர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். சமீபத்தில் உச்ச நடிகரின் படம் பற்றி யு டியூப் சேனல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மீது பலரும் கடும் கோபத்தில் உள்ளார்களாம். அந்த உச்ச நடிகரின் பிஆர்ஓ அந்தத் தயாரிப்பாளரை எதிர்த்து வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார். அதன்பிறகு இந்த விவகாரம் மேலும் பரபரப்புக்கு ஆளாகி இருக்கிறது.
அதோடு, படங்களை கடுமையாக விமர்சிக்கும் சில விமர்சகர்களுக்கு சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விளம்பரங்களைக் கொடுத்து வருவதும் தற்போது சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. அவர்களுக்கு மற்ற தயாரிப்பாளர்கள் விளம்பரங்களைக் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
சினிமாவை எதிர்மறையாக விமர்சித்து மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று அதன் மூலம் லட்சங்களை சம்பாதிக்கும் அந்த விமர்சகர்கள் நடுநிலையான விமர்சனங்களைத் தருவதில்லை. ஒரு சார்பு விமர்சனங்களையே தருகிறார்கள் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஒரு காலத்தில் பத்திரிகைகள், டிவி சேனல்கள் நடுநிலையான விமர்சனங்களைக் கொடுத்து வந்தன. அவை தரமானதாகவும் இருந்தன. அதை வைத்து ரசிகர்களும் தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் சென்றனர். தற்போது இன்புளூயன்சர்கள், யு டியூப் சேனல்கள் என பலரும் பெருகிவிட்டார்கள். அவற்றில் நடுநிலையாக இருக்கும் விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பல நடிகர்களின் ரசிகர்கள் பத்திரிகையாளர்களாகவும், இன்புளூயன்சர்களாகவும் மாறிவிட்டார்கள். அதனால், அவர்களது நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓட வேண்டும், மற்றவர்களின் படங்கள் ஓடக் கூடாது என்ற மனநிலையில் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் என தயாரிப்பாளர்கள் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில் இந்த விமர்சனங்கள் படங்களின் வெற்றி, தோல்வியை பாதிக்கிறதா என்பது ஆயிரம் கேள்விக்குரிய ஒரு விஷயம். ஒரு படம் நல்ல படமாக இருந்தால் அது மக்களைத் தானாகவே சென்றடையும். மோசமான படமாக இருந்தாலும் யார் அதைப் பற்றிப் பாசிட்டிவ்வாக சொன்னாலும் அந்தப் படம் ஓடிவிடாது.
சமீபத்தில் முன்னணி இயக்குனர், முன்னணி நடிகர், இசையமைப்பாளர் என கூட்டணி சேர்ந்த ஒரு படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்திற்காக இன்புளூயன்சர்களை அழைத்து பல லட்சம் செலவு செய்தார்கள். ஆனால் யாராலும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அதுவும் ஒரு சிறந்த உதாரணம் தான்.
சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இப்படியான தவறான இன்புளூயன்ர்கள், யு டியூப் சேனல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, பாரம்பரியமான நாளிதழ்கள், டிவி சேனல்கள் ஆகியவற்றிற்கு பழையபடி முக்கியத்துவம் கொடுத்து ஆதரவளித்தால் இந்த நிலை மாறும் என்கிறார்கள் மூத்த தயாரிப்பாளர்கள்.
ஒரு சினிமா ரசிகர்களை 'இன்புளுயன்ஸ்' செய்தால் போதும், அது ஓடிவிடும். அந்த படத்தை 'இன்புளூயன்சர்கள்' வைத்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள். அதுதான் உண்மையும் கூட.