இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் திரையுலகின் தலைசிறந்த பத்துப் படங்களை பட்டியலிடச் சொன்னால் அதில் “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படத்திற்கென ஒரு தனி இடம் எப்போதும் உண்டு. தொடராக வந்த கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஜெமினி ஸ்டூடியோ அதிபரான மறைந்த எஸ்எஸ்வாசனிடம் இருந்த இந்தக் கதையின் உரிமத்தை வாங்கி திரைப்படமாக எடுக்க முயற்சித்து, இயக்குநர் ஏபி நாகராஜன் அவரிடம் உரிமத்தைக் கேட்க, அவர் தானே இந்தப் படத்தை எடுக்கப் போகும் எண்ணம் கொண்டிருந்ததால் அதனை தர மறுக்க, இரண்டு முறை முயற்சித்தும் ஏமாற்றம் ஒன்றே கிடைக்கப் பெற்ற ஏபி நாகராஜனுக்கு, மூன்றாவது முறை எஸ்எஸ் வாசனே அவரை அழைத்து இக்கதையின் உரிமத்தை தர சம்மதம் தெரிவித்தார். அதன்பின் இயக்குநர் ஏபி நாகராஜன் தனது “ஸ்ரீ விஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்து, இயக்கியது தான் இந்த “தில்லானா மோகனாம்பாள்”.
நம் பாரம்பரிய கலாச்சாரத்தின் அடையாளமான நாதத்தையும், பரதத்தையும் மய்யப் பொருளாக்கி, நாதம் பெரிதா? பரதம் பெரிதா? என்ற மோதலில் உருவாகி, அதன்மூலம் ஒரு மெல்லிய, இலக்கியத்தரமான காதலைச் சொல்லி, அந்தக் காதல் வெற்றியில் முடிகிறதா? தோல்வியில் முடிகிறதா? என்பதைச் சொல்வதே இந்த “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படத்தின் கதை.
ஒரு நாவலை திரைப்படமாக்குவது என்பது ஒரு இயக்குநருக்கு மிகச் சவாலான ஒன்று. கதையில் சொல்லப்பட்ட காலம், கதாபாத்திரங்களின் நடை, உடை, பாவனை, கதை பயணப்படும் பகுதியின் வட்டார மொழி என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி, ஆராய்ந்து, நாவலாசிரியர் தனது கதையில் சொன்னவற்றை தத்ரூபமாக திரையில் கொண்டு வரும் சாமர்த்தியம் என்பது சாதாரணமானதல்ல. அதை திறம்பட செய்து வெற்றியும் பெற்றார் இயக்குநர் ஏபி நாகராஜன்.
கதையின் நாயகன் நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கல் சண்முக சுந்தரமாக, நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நாட்டியத் தாரகை மோகனாம்பாளாக, நாட்டியப் போரொளி நடிகை பத்மினியும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடிக்க, 1968ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
சென்னை 'சாந்தி' திரையரங்கிலும், மதுரை 'சிந்தாமணி' திரையரங்கிலும் 132 நாட்கள் ஓடி ஒரு மகத்தான சாதனையை படைத்தது. பொதுவாகவே நடிகர்களுக்கு அப்சர்வேஷன் என்பது அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. சிவாஜி கணேசனுக்கு அது ரத்தத்திலேயே ஊறிப்போன ஒன்று. நாதஸ்வர வித்வான்களான எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி அவர்களை அழைத்து, நாதஸ்வரத்தை வாசிக்கச் செய்து, அவர்கள் எவ்வாறு அந்த நாதஸ்வர இசைக்கருவியை அதன் உறையிலிருந்து எடுத்து, பின் வாசிக்கத் தொடங்குகின்றனர் என்பதிலிருந்து உன்னிப்பாக கவனித்து, அதன்பிறகுதான் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று நடித்திருக்கிறார் சிவாஜி.
படத்தைப் பார்க்கும் நம் கண்களுக்கு இன்று வரை உயிரைக் கொடுத்து வாசித்த மதுரை சகோதரர்களான எம்பிஎன் சேதுராமனும், எம்பிஎன் பொன்னுசாமியும் தெரிவதே இல்லை. சிவாஜி ஒருவர் மட்டுமே வியாபித்திருப்பார் ஒட்டுமொத்த ரசிகர்களின் கண்களிலும். நாதஸ்வர இசைக்கருவியை கையில் எடுத்து, வாய் வைத்து ஊதும் பகுதியை சுத்தம் செய்வதிலிருந்து, நாதஸ்வரத்தின் துளைகளின் மீது தனது இரு கைவிரல்களையும் வைத்து வாசிப்பது போல அசைவினைக் காட்டி, மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளின் துடிப்பினை தந்து, பின் கழுத்து நரம்புகளின் புடைப்பு தெரியும் வண்ணம் வாசிக்கும் லாவகம் என ஒரு நாதஸ்வர வித்வானாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். தவில் வித்துவானாக டிஎஸ் பாலையா, கே.சாரங்கபாணி, நட்டுவனாராக கேஏ தங்கவேலு, சவடால் வைத்தியாக நாகேஷ், ஜில் ஜில் ரமாமணியாக நடிகை மனோரமா என படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
படப்பிடிப்பு ஒத்திகையின் போதே, சண்முகசுந்தரம் குழு, மோகனாம்பாள் குழு என இரு குழுக்களாக பிரிந்து, ஒரு ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையோடு கலைஞர்கள் செயல்பட்டு நடித்துக் கொடுத்த ஒரு முழுமையான கலைநயமிக்க காவியத் திரைப்படம்தான் இந்த “தில்லானா மோகனாம்பாள்”.
ஒரு நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான திரைப்படமாக இத்திரைப்படம் இருந்ததால்தான் சர்வதேச திரைப்பட விழாவின் போது, இதனை முதன் முதலில் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்த்து அங்கும் பார்த்து ரசித்திருக்கின்றனர். இன்றும் கூட வெளிநாட்டினருக்கு நம் கலாச்சாரம், பண்பாட்டை சொல்ல வேண்டும் என்றால் “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படத்தைத்தான் போட்டுக் காட்ட வேண்டியிருக்கின்றது.
சிறந்த திரைப்படத்திற்கான “தேசிய விருது”, “தமிழ்நாடு அரசு சினிமா விருது” என விருதுகளை வென்றெடுத்த இத்திரைப்படம்தான் பின்னாளில் வந்த “கரகாட்டக்காரன்”, “சங்கமம்”, “காவியத்தலைவன்” ஆகிய திரைப்படங்களுக்குக் கூட ஒரு காரணியாக அமைந்திருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகின் சிறப்பினை தரணி எங்கும் கொண்டு சேர்த்த தமிழ் திரையுலகின் தரமான படைப்பான “தில்லான மோகனாம்பாள்” ஒரு தனிச்சிறப்புக்குரிய செல்லுலாய்டு சிற்பம் என்பதில் எந்த ஐயமுமில்லை.