'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
உலகத்தில் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சண்டை, சச்சரவுகள், மோதல் இல்லாத நாளைப் பார்க்கவே முடியாது. கருத்து வேறுபாடுகள்தான் அவற்றிற்கான மூல காரணமாக இருக்கும். அது அப்படியே வேறு வேறு ரூபத்தில் வளர்ந்து எங்கயோ போய் உச்சத்தில் நின்றுவிடும்.
திரையுலகில் மோதல் போக்கு
சினிமாத் துறை, ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருந்தாலும் அங்கும் அடிக்கடி பிரச்னை, மோதல் போக்கு இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு பிரச்னை தலை தூக்கும். பின்னர் பேச்சுவார்த்தை நடக்கும். முடிவுக்கு வருகிறதோ இல்லையோ கொஞ்ச நாட்கள் கழித்து அது காணாமல் போய்விடும்.
2020ம் ஆண்டு கொரோனா காலகட்டம் வந்த பின் சினிமாத் துறையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தியேட்டர்கள் சில மாதங்கள் மூடப்பட்டன, ஓடிடி தளங்கள் திடீரென அசுர வளர்ச்சி கண்டன. புதிய திரைப்படங்கள் நேரடியாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின. தியேட்டர்களில், வருடத்திற்கு 200 படங்கள் வந்தால் அதில் 10 படங்கள் மட்டுமே லாபம் தரும் படங்களாக அமைகின்றன.
சினிமா உலகில் என்ன நடந்தாலும் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்கள் அவர்களது சம்பளத்தைக் குறைக்க மாட்டார்கள். ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் உடனேயே அவர்களது சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்கள் என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த நான்கு வருடங்களாக கொஞ்சம் அமைதியாக இருந்த தமிழ்த் திரையுலகத்தில் தற்போது மோதல் போக்கு ஆரம்பமாகி உள்ளது.
நடிகர்களுக்கு ரெட் கார்டா...
கடந்த சில வாரங்களாகவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. விஷால், தனுஷ், சிலம்பரசன், கமல்ஹாசன், யோகிபாபு ஆகியோர் மீது சில புகார்கள் வந்ததையடுத்து அவர்களை புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக் கூடாது என முடிவெடுக்க உள்ளார்கள் என்றும் தகவல் வெளியானது.
ஸ்டிரைக் அறிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியானது. அதில், “1.முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எட்டு வாரங்களுக்குப் பிறகு மட்டுமே ஓடிடி வெளியீடு2.அட்வான்ஸ் வாங்கியதன் அடிப்படையில் நடிகர்கள், நடிகைள் படங்களில் நடிக்க வேண்டும்.
3.புதிய விதிமுறைகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்திய பிறகு புதிய படங்களை ஆரம்பிக்க வேண்டும், அதனால், 16 ஆகஸ்ட் 24 முதல் புதிய படங்களை ஆரம்பிப்பது தற்காலிக நிறுத்தம்.4.தற்போது நடந்து வரும் புதிய படங்களின் படப்பிடிப்புகளை அக்டோபர் 30க்குள் முடிக்க வேண்டும்.5.சம்பளம், செலவுகள், முறைப்படுத்துதல், மறுசீரமைப்பு ஆகியவற்றிற்காக, நவம்பர் 1, 2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் நிறுத்த வேண்டும். 6.தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைப்பு ஆகியவை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என குறிப்பிட்டிருந்தார்கள்.
நடிகர் சங்கம் அதிருப்தி
அதோடு, நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ள சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களைத் துவங்குவதற்கு முன்பாக தயாரிப்பாளர் சங்கத்தினை கேட்டு ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய இந்த அறிக்கை திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டது குறித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இது குறித்து பேசினார்கள்.
சவால் விட்ட விஷால்
கடந்த வாரம் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் மீது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியினை விஷால் தவறாகப் பயன்படுத்தி 12 கோடி வரை இழப்பு ஏற்பட வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார்கள். அதோடு அவரை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஆலோசித்த பின்பே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு பதிலளித்த விஷால் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான், தற்போது உங்கள் நிர்வாகத்தில் உள்ள தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் தெரியும். வயதான, தடுமாறி வரும் உறுப்பினர்களுக்காக செய்யப்பட்ட நலன் அது, முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள் என்றும் சவால் விட்டார்.
விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆகவும் இருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. முதலில் விஷால், அடுத்து தனுஷ், இதற்கடுத்து யார், யார் என்ற கேள்வி திரையுலகத்தில் எழுந்துள்ளது. எந்த ஒரு தனி நபரையும் தொழில் செய்யக் கூடாது என்று சொல்லவோ, தடை விதிக்கவோ எந்த ஒரு சங்கத்திற்கும் அதிகாரம் கிடையாது என்பதும் சட்டப்படி அனைவருக்கும் தெரிந்ததே.
தியேட்டர் கட்டணம்
முந்தைய காலங்களை விட கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் சினிமா கடும் சவால்களை சந்தித்து வருகிறது. பெரிய நடிகர்களின் படங்களைப் பார்க்க மட்டுமே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருகிறார்கள். தியேட்டர்களில் அதிகபட்சமாக 200 ரூபாய் டிக்கெட் கட்டணம், சாதாரண பாப்கார்ன் பாக்கெட் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 200 ரூபாய், ஒரு காபி 100 ரூபாய் என அந்த அதிகப்படியான விலை பற்றி யாரும் பேசுவதேயில்லை.
பெரிய படங்களாக இருந்தாலும் அதே கட்டணம், சிறிய படங்களாக இருந்தாலும் அதே கட்டணம். அவ்வளவு கொடுத்து எதற்குப் பார்க்க வேண்டும் என மக்கள் வீட்டிலேயே அமர்ந்து ஓடிடியில் படங்களைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் மற்ற மொழிகளில் வெளியாகும் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்படுவதால் அவர்களால் விதவிதமான படங்களைப் பார்க்க முடிகிறது. மோசமான படங்களைப் பார்க்க தியேட்டர்கள் பக்கம் போக அவர்கள் தயாராக இருப்பதேயில்லை.
நடிகர்கள் சம்பளம்
பெரிய நடிகர்களின் படங்களே தோல்வியும், படுதோல்வியும் அடைகிறது. சமீபத்தில் வந்த சில பெரிய நடிகர்களின் படங்கள் அதற்கு உதாரணம். இது குறித்து திரையுலக வட்டாரங்களில் விசாரித்தால், ஒரு நடிகரின் படம் ஓடினால், உடனே அவரைத் தேடிச் சென்று அதிக சம்பளம் கொடுத்து அவர்களை ஒப்பந்தம் செய்வதும் அதே தயாரிப்பாளர்கள்தானே என்கிறார்கள். அப்படி செய்யப்படும் ஒப்பந்தம் பற்றி தயாரிப்பாளர் சங்கத்திடம் முன்கூட்டியே தெரிவிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பிரச்சனை என்று வந்த பின்புதான் சங்கத்தையே தொடர்பு கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
திணறும் தயாரிப்பாளர்கள்
சினிமா பற்றி எந்தப் புரிதலும் இல்லாத பலர் தற்போது திரைப்படம் தயாரிக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை சிலர் எளிதில் ஏமாற்றும் சம்பவங்களும் நடக்கிறது. படம் முடிந்த பின் அதற்கான விளம்பரங்களைக் கூட செய்ய முடியாமல் பல தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். படம் வந்தது கூடத் தெரியாமல் ஒரே காட்சியில் ஓடிப் போன படங்கள் பல இருக்கின்றன. இதையெல்லாம் எப்போது சரி செய்யப் போகிறார்கள், மாற்றப் போகிறார்கள் என்று கேட்கிறார்கள்.
என்ன செய்யலாம்
தயாரிப்பாளர் சங்கம் சில திரைப்பட சங்கங்களை மட்டும் அழைத்துப் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். முக்கியமாக நடிகர் சங்கம், 24 தொழிலாளர் சங்கங்கள் அடங்கிய பெப்ஸி நிர்வாகம் ஆகியவற்றுடன் ஆலோசிக்கவேயில்லை. அவர்களையும் அழைத்துப் பேசி தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டு அதைப் பற்றி ஒவ்வொன்றாகப் பேசித் தீர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில, மத்திய அரசுகளின் உதவியையும் நாட வேண்டும்.
பல கோடி ரூபாய் புழங்கும் இடம், நேரடியாக, மறைமுகமாக பல லட்சம் பேர் சினிமாவால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அறிக்கைப் போர் நடத்துவதை விட்டுவிட்டு ஆற அமர உட்கார்ந்து பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் சினிமா நலம் விரும்பிகள்.
சம்பந்தப்பட்ட சங்கங்கள் அதைச் செய்யுமா என்பதே இப்போதைய கேள்வி?.