பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் |
ஒரு நடிகரோ, நடிகையோ 100 படங்களைக் கடந்து நடிப்பது சாதனைக்குரிய ஒரு விஷயம். ஆனால், இந்தக் காலத்தில் 50 படங்களைக் கடப்பதுதான் பெரிய விஷயமாக உள்ளது. அறிமுகமாகி 25 வருடங்கள் ஆன பின்னும் கூட 50 படங்ளைக் கடக்க முடியாத சில நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள். சினிமா என்பது ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றிப் பாதையாக அமைகிறது, மற்ற சிலருக்கு தடைகள் நிறைந்த பாதையாக அமைகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து சாதனை படைப்பவர்கள் சிலரே. அந்த விதத்தில் தமிழ் சினிமாவின் சில முக்கிய கதாநாயகர்களின் 50வது படங்கள் எப்படி அமைந்தன என்பது பற்றி பார்ப்போம்.
எம்ஜிஆர் - நல்லவன் வாழ்வான் (1961)
தமிழ் சினிமாவின் வசூல் நாயகன், இன்றைய பல கமர்ஷியல் ஹீரோக்களுக்கு முன்னோடி. அவரது 50வது படத்தை ப.நீலகண்டன் தயாரித்து, இயக்க, டிஆர் பாப்பா இசையமைத்திருந்தார். எம்ஜிஆர் ஜோடியாக ராஜசுலோச்சனா நடித்திருந்தார். இப்படத்திற்குத் திரைக்கதை எழுதியவர் அண்ணாதுரை. எம்ஜிஆர் படத்திற்கென வாலி எழுதிய முதல் பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது. 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடல் அது. அப்போதைய சினிமாவில் சரித்திரக் கதைகள் ஒரு முடிவுக்கு வந்து சமூகக் கதைகளுக்கு மாறிய காலகட்டம் அது. அப்படியான சமூகக் கதைகள் எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் சரியாக அமையவில்லை. அப்போது வந்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது.
சிவாஜி கணேசன் - சாரங்கதாரா (1958)
விஎஸ் ராகவன் இயக்கத்தில், ஜி ராமநாதன் இசையமைப்பில் 1958ல் வெளிவந்த படம். சிவாஜியுடன் எம்என் நம்பியார், எஸ்வி ரங்காராவ், பானுமதி, ராஜசுலோச்சனா மற்றும் பலர் நடித்தனர். 'வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே' என்ற சூப்பர் ஹிட்டான பாடல் அமைந்த படம். பிற்காலத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய விஎஸ் ராகவன் இயக்கிய படம். அவரது இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம். இப்படத்திற்குப் பிறகு அவர் படங்களை இயக்கவில்லை. நடிகராக மட்டுமே தனது திரையுலகப் பயணத்தைத் தொடர்ந்தார். குரஜடா அப்பாராவ் எழுதிய நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது தமிழ்த் திரைப்படம் 'சாரங்கதாரா. 1935ல் 'சாரங்கதாரா' என்ற படமும், 1936ல் 'நவீன சாரங்கதாரா' படமும் அதே நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள். அப்போதைய முன்னணி வார இதழ் இத்திரைப்படத்தைத் ஒரு 'நாடகம்' என்றே விமர்சித்தது. படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
ரஜினிகாந்த் - டைகர் (தெலுங்கு 1979)
தமிழில் நடிகராக அறிமுகமானாலும் தனது ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். வில்லன், குணச்சித்திரம் எனத் தொடர்ந்து கதாநாயகனாக மாறி இன்று வரை அந்தப் பயணம் கதாநாயகனாக வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினியின் 50வது படம் தெலுங்கில் வெளிவந்த 'டைகர்'. நந்தமூரி ரமேஷ் இயக்கத்தில் சத்யம் இசையமைப்பில், என்டிஆர், ரஜினிகாந்த், ராதா சலூஜா, சுபாஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெளிவந்த 'கூன் பசினா' என்ற படத்தின் ரீமேக்காக வெளிவந்த படம். எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியைத் தழுவிய படம்.
கமல்ஹாசன் - மோகம் முப்பது வருஷம் (1976)
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இளம் வயதில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின் நாயகனாக உயர்ந்தவர் கமல்ஹாசன். கதாநாயகனாக, அவரது ஆரம்ப காலப் படங்களில் இந்தப் படமும் ஒன்று. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில், விஜயபாஸ்கர் இசையமைப்பில் கமல்ஹாசன், சுமித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். அப்போதைய பிரபல எழுத்தாளர் மணியன் எழுதிய 'மோகம் முப்பது வருஷம்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இயக்குனர் மகேந்திரன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். கணவன், மனைவி இடையேயான வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதைச் சொன்ன படம். விஜய பாஸ்கர் இசையில் கேஜே யேசுதாஸ் பாடிய 'எனது வாழ்க்கைப் பாதையில்' பாடல் அப்போது சூப்பர் ஹிட்டான ஒரு பாடல். விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய படம்.
விஜய் - சுறா (2010)
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே கதாநாயகனாக நடித்தவர் விஜய். கமர்ஷியல் படங்களில் அதிகமாக நடித்து தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக உயர்ந்து வந்த நிலையில் அவரது 50வது படத்திற்கான இயக்குனரை அவர் தேர்வு செய்தது ஆச்சரியமளித்தது. சில காமெடிப் படங்களை வெற்றிகரமாக இயக்கிய எஸ்பி ராஜ்குமார் தான் விஜய்யின் 50வது பட இயக்குனராக என திரையுலகில் ஆச்சரியப்பட்டார்கள். கமர்ஷியல் படமாக வந்தாலும் 'சுறா' படம் படுதோல்வியைத் தழுவியது. இன்று வரையிலும் விஜய்யின் படங்களை யாராவது கிண்டலடிக்க வேண்டுமென்றால் அவரிடன் இந்த 50வது படம்தான் முதலில் இடம் பெறும். எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில், தமன்னா, வடிவேலு, மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
அஜித் - மங்காத்தா (2011)
சினிமாவில் யாருடைய பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் நேரடியாக வந்து வெற்றி பெற்றவர் அஜித். இடையில் சில தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும், ஓபனிங்கையும் வைத்திருக்கும் ஒரு நடிகர். அவரது 50வது படத்தை வெங்கட்பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, அர்ஜூன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். நடிகராக இருந்து 'சென்னை 28' மூலம் இயக்குனராக அறிமகமானவர் வெங்கட் பிரபு. அடுத்து 'சரோஜா, கோவா' என்ற இரண்டு சுமாரான படங்களையே தந்தார். அஜித் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார் என்றதும் ஆச்சரியப்பட்டது திரையுலகம். அவர்களை அதிர்ச்சியடைய வைக்கும் விதத்தில் ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து, அஜித்திற்கும் ஒரு திருப்புமுனையைத் தந்தார்.
விக்ரம் - ஐ (2014)
தனது சொந்த முயற்சியால் சினிமாவில் வந்த மற்றுமொரு நடிகர் விக்ரம். கதாநாயகனாக அறிமுகமானாலும் தொடர்ந்து வெற்றி கிடைக்கவில்லை. அதன்பின் டப்பிங் கலைஞராக மாறி சில நடிகர்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார். 'சேது' படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறினார். கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்திக் கொள்ளும் ஒரு நடிகர். அப்படி அவர் நடித்த ஒரு படம்தான் 'ஐ'.அப்படத்திற்காக தனது இயல்பான உடல் எடையிலிருந்து 40 கிலோ எடைக்கு தன்னை மாற்றிக் கொண்டவர். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்தனர். குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம்.
விஜய் சேதுபதி - மகாராஜா (2024)
சினிமாவில் நடிக்க முயற்சித்து அதற்கான தேடலில் இறங்கி, துணை நடிகராக சில பல படங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. விக்ரமிற்குப் பிறகு தங்களது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்களில் விஜய் சேதுபதி இடம் பெற்றார். தொடர்ந்து சில தோல்விகளைச் சந்தித்தவருக்கு இந்த வருடம் வெளிவந்த அவருடைய 50வது படமான 'மகாராஜா' பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதோடு 100 கோடி வசூலையும் கடந்துள்ளது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் மற்றும் பலர் நடித்த படம்.
தனுஷ் - ராயன் (2024)
'துள்ளுவதோ இளமை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான போது, இவரெல்லாம் எப்படி நடிக்க வருகிறார் என்ற விமர்சனங்களும் அதிகம் எழுந்தன. ஆனால், போகப் போக தனது திறமை என்ன என்பதை வெளிக்காட்டிய நடிகர். சிறந்த நடிப்பிற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று தன்னைக் கிண்டலடித்தவர்களை ஆச்சரியப்படுத்தியவர். நடிப்பு மட்டுமல்லாமல், பாடல் எழுதுவது, பாடுவது, படங்களை இயக்குவது என தனது பன்முகத் திறமையைக் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் வந்த 50வது படத்தை அவரே இயக்கியிருக்கிறார். கடந்த வாரம் வெளிவந்த இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இயக்குனராக அவரது 50வது படம் குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். ஆனால், நடிகராக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இப்படம் வணிக ரீதியாக வெற்றியா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
சினிமாவில் அறிமுகமாகி 20 வருடங்களைக் கடந்தாலும் சில நடிகர்கள் இன்னும் 50 படங்களைக் கடக்கவில்லை. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். சூர்யா, சிலம்பரசன் ஆகியோர் அடுத்த ஓரிரு வருடங்களில் 50 பட சாதனைகளைப் புரிய வாய்ப்புள்ளது. அதற்கு மிக பக்கமாக இருக்கிறார்கள்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரைத் தவிர்த்து மேலே குறிப்பிட்டுள்ள மற்ற நடிகர்கள் 50 படங்களைக் கடக்கவே 25 ஆண்டுகளாவது ஆகியுள்ளது. அவர்கள் 100 படங்களைக் கடக்க இன்னும் 25 ஆண்டுகளாவது ஆகும். வரும் காலங்களில் 100 பட சாதனை, 50 பட சாதனை போய் 25 படங்களில் நடிப்பது கூட ஒரு சாதனையாக மாறலாம்.