ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் | அமராவதியில் 'கேம் சேஞ்சர்' விழா : பவன் கல்யாண் வருவாரா? | 'சிறகடிக்க ஆசை' கோமதி ப்ரியா க்யூட் கிளிக்ஸ் | ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் பாடப் போகும் சைந்தவி |
பொதுவாகவே திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மற்ற துறைகளில் இது போல இருந்தாலும் கூட சினிமாத்துறை என்பதால் இது பெரிய அளவில் பரபரப்பான பேசு பொருளாகி விட்டது.
அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே மீடூ என்கிற பிரச்சாரம் மூலமாக தென்னிந்திய நடிகைகள் சிலர் தங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளியில் வெளிப்படையாக கூற துவங்கினர். இதில் ஒரு சிலர் மட்டும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு குற்றம் சாட்டினாலும் பெரும்பாலானோர் குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை வெளிப்படையாக கூறாமல் தவிர்த்தனர்.
வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிஷன் அறிக்கை
இந்த நிலையில் தான் மலையாள திரையுலகில் இதுபோன்று வாய்ப்பு தருவதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைக்கும் கலாச்சாரம் அதிகமாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கேரள அரசு இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்தது. 2017ல் அமைக்கப்பட்ட இந்த விசாரணை கமிஷன் தங்களது விசாரணையை முடித்து சமீபத்தில் அந்த அறிக்கையை கேரளா அரசிடம் சமர்ப்பித்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த அறிக்கையும் வெளியானது. ஏற்கனவே கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பது போல மலையாள திரை உலகில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கின்றன என்றும் நடிகர் சங்கத்தை சேர்ந்த முக்கிய நடிகர்கள் ஒரு குரூப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்றும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து கிளம்பிய பாலியல் குற்றச்சாட்டு
இந்த அறிக்கை தந்த தைரியத்தாலோ என்னவோ தற்போது திரை உலகை சேர்ந்த பல பெண்கள் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களையும் தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த பிரபலங்களின் பெயர்களையும் வெளிப்படையாகவே கூறி குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக சீனியர் நடிகர்களான சித்திக், ஜெயசூர்யா, முகேஷ், இயக்குனர் ரஞ்சித், துளசி தாஸ் போன்றவர்கள் மீது வெவ்வேறு நடிகைகள் தனிப்பட்ட முறையில் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் கேரளா திரைப்பட அகாடமியில் சேர்மனாக பொறுப்பு வகித்த இயக்குனர் ரஞ்சித்தும், மலையாள நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருக்கும் சித்திக்கும் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு சூழல் உருவானது
பயமா... வாய்ப்பு கிடைக்காதா...
இப்படி குற்றம் சாட்டும் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் அனைவருமே தாங்கள் இப்படி கசப்பான அனுபவங்களை சந்தித்தது எல்லாமே பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு தான் என்பது அவர்களது பேச்சிலிருந்தும் பேட்டியில் இருந்தும் வெளிப்படுகிறது. பலருக்கும் இந்த விஷயத்தில் பொதுவாக எழும் கேள்வி சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தன்னால் நடிக்க முடியாது என துணிச்சலாக வெளியேறிய இது போன்ற பலரும் இந்தப் பாதிப்புகளை சம்பந்தப்பட்ட அதே காலகட்டத்திலேயே காவல்துறையில் புகார் ஆகவோ அல்லது மீடியாக்களின் மூலம் வெளிப்படையாகவோ வெளிப்படுத்தி இருக்கலாமே என்பது தான். ஆனால் பயம் காரணமாகவோ அல்லது வாய்ப்புகள் பறிபோகலாம் என்பதாலோ அவர்கள் இந்த அனுபவங்களை தயங்கி தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொண்டு விட்டனர் என்பது தான் நிதர்சனம்.
கண்டு கொள்ளாத நடிகர் சங்கம்
அதேசமயம் நடிகை ஸ்ரீதேவிகா என்பவர் 2018ல் இயக்குனர் துளசிதாஸ் இயக்கத்தில் அவரது படத்தில் நடித்தபோது அவர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்கிறபோது அது குறித்து அப்போதே மலையாள நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் நடிகர் சங்கம் அவரது புகாரை கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அதை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளது.
பெயர்கள் வராத அறிக்கை
இதுபோன்று தாங்கள் பாதிக்கப்பட்ட சமயத்திலேயே இப்படி வெளிப்படையாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டினால் தங்களுக்கு திரை உலகில் வாய்ப்புகள் மறுக்கப்படும் என்கிற அச்சத்திலேயே பலரும் அப்போது வாய் மூடி மவுனமாக இருந்து விட்டனர். ஒரு சிலர் சம்பந்தப்பட்ட படக்குழுவினரில் வேறு யாரிடமாவது அல்லது ஏதோ ஒரு சங்கத்திலும் முறையிட்டால் கூட பாதிப்பை உண்டாக்கியவர்கள் தங்களது செல்வாக்கால் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க விடாமல் செய்து விடுகின்றனர் என்று இப்போது சில நடிகைகள் தங்களுக்கு பறிபோன வாய்ப்புகள் குறித்தும் வெளிப்படையாகவே குமுறி வருகின்றனர். ஹேமா கமிஷன் முன்பாக ஆஜராகி தங்களது அனுபவங்களையும் குற்றச்சாட்டுகளையும் பகிர்ந்து கொண்ட பலரும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்றாலும் அறிக்கையில் அவர்களது பெயர்கள் எதுவும் இப்போதைக்கு குறிப்பிடப்பட்டு வெளியாகவில்லை.
முன்னணி நடிகைகள் மவுனம்
அதேசமயம் எந்த ஆதாரமும் இல்லாமல் தாங்கள் இப்படி குற்றம் சாட்டப்படுவதாக புகாருக்கு ஆளானவர்கள் கூறும்போது உண்மையில் நடந்தது என்ன என்கிற சந்தேகத்தின் பலன் இருவருக்குமே சரிசமமாக செல்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மலையாள திரையுலகில் மட்டுமல்ல தென்னிந்திய திரை உலகில் என மொத்தமாக எடுத்துக் கொண்டாலும் பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகைகள் யாரும் இதுபோன்று பெரிய அளவில் நாங்கள் பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தது இல்லை. ஒருவேளை அவர்கள் கசப்பான அனுபவங்களை சந்தித்து இருந்தாலும் தங்களது திரையுலக பயணத்தில் ஒரு முட்டுக்கட்டை விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றை மறைத்து விட்டோ அல்லது ஒதுக்கி விட்டோ முன்னேறி சென்று விட்டார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி கேட்க யாருமில்லை
மலையாள நடிகர் சங்க நிர்வாகிகளை பொறுத்தவரை அவர்களை எதிர்த்து கேட்க பலமான எதிரணி என யாருமில்லை. இங்கே தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தில் எப்போதுமே இரண்டு அணிகள் எதிரும் புதிருமாக உருமிக் கொண்டு சண்டைக்கு இருக்கும். ஒரு தரப்பு தவறு செய்தால் இன்னொருவர் கேள்வி கேட்பார்கள் என்கிற பயம் இருக்கும்.. ஆனால் மலையாளத்தில் ஒரே ஒரு குரூப் மட்டுமே நடிகர் சங்க பதவிகளில் தொடர்ந்து இடம் பிடிப்பார்கள்.. தலைவர்கள் பதவி மாறினாலும் அவர்களுக்குள் ஒரே அணி என்கிற நட்பு ரீதியான மாற்றம் மட்டுமே இருக்கும். இதனால் யாரவது புகார் அளிக்க சென்று அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அங்கே எதிர் தரப்பாக இருந்து பாதிக்கப்பட்டவர் சார்பில் குரல் எழுப்ப ஆளே இல்லை.
புது நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பார்களா
இப்போது கூட இந்த பாலியல் புகார்கள் எதிரொலி காரணமாக நடிகர் சங்க தலைவரான மோகன்லால் உள்ளிட்ட 16 பேர் மொத்தமாக ராஜினமா செய்துள்ளனர். இதில் பெண் நிர்வாகிகளும் அடக்கம். அடுத்து புதிய நிர்வாக குழு இரண்டு மாதத்திற்குள் பொறுப்பேற்கும் என்றும் அறிவித்துள்ளனர். இரண்டு மாதம் கழித்து முறைப்படி தேர்தல் நடத்தினாலும் இதே அணியினர் தான் மீண்டும் பொறுப்புக்கு வர வாய்ப்பு இருக்கிறது. பலமான இன்னொரு எதிரணி அங்கே இல்லை. ஒருவேளை குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகள் சிலர் வேண்டுமானால் மீண்டும் போட்டியிடாமல் இருப்பார்கள். அவ்வளவுதான் நடக்கும். ஆனால் மீண்டும் இதே அணி வரும்போது இந்த தவறுகள் நடக்காமலோ அல்லது நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ வழி செய்யும் முயற்சிகளை புதிய குழுவினர் எடுக்க வேண்டும். அதைத்தான் ஹேமா கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
மறைமுக தடை
ஹேமா கமிஷன் அறிக்கை பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடு இருந்தாலும் மலையாள திரையுலகை பொருத்தவரை நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கைகளில் தான் சினிமா இருக்கிறது என்பதால் அவர்களின் பலர் தங்களுக்குள்ளான கூட்டு முயற்சியால் இதுபோன்ற புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் பிசுபிசுக்க வைத்து விடுவார்கள் என்பதே உண்மை. வெளிப்படையாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையை எடுக்கிறோம் என பேச்சுக்கு கூறினாலும் புகார் கொடுத்தவர்கள் மீதான மறைமுக தடை என்பது இன்னும் தீவிரமாகவே செய்யும் என்பதையும் மறுக்க முடியாது.
என்னதான் தீர்வு
இனிவரும் காலங்களில் இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் இதுபோன்ற செயல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தினால் மட்டுமே இது போன்ற பாலியல் சீண்டல்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வரும். காலம் கடந்து பல வருடங்களுக்குப் பிறகு நாங்களும் பாதிக்கப்பட்டோம் என வெளியில் சொல்லும்போது அந்த குற்றச்சாட்டுகளின் மீதான நம்பகத்தன்மை ரொம்பவே குறைய வாய்ப்பு உள்ளது என்பது தான் யதார்த்தமான உண்மை. ஆகவே வாய்ப்புக்காக சமரசம் செய்து கொண்டு செல்ல மாட்டேன் என துணிச்சலாக முடிவு எடுக்கும் பெண்கள் அப்படிப்பட்ட நபர்களின் முகமூடியையும் உடனுக்குடன் கிழித்து எறிந்தால் மட்டுமே அடுத்தவர்களுக்கு இப்படி செய்ய பயம் ஏற்படும்.