விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் | அமராவதியில் 'கேம் சேஞ்சர்' விழா : பவன் கல்யாண் வருவாரா? |
2024ம் ஆண்டின் அரையாண்டு முடிந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் சுமார் 115 படங்கள் வரை வெளியாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விடவும் சில படங்கள் அதிகம். நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வந்தாலும் அதில் நான்கைந்து படங்கள் தான் ஒட்டு மொத்தமாக லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தன.
தித்திக்காத பொங்கல்
ஜனவரி மாதத்தைப் பொறுத்தவரையில், சுமார் 16 படங்கள் வரை வெளிவந்தன. பொங்கல் தின விடுமுறை நாள் என்பதால் அந்த நாட்களில் படத்தை வெளியிட்டு வசூலைக் குவிக்கலாம் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்கள் வெளியிடப்பட்டன.
'அயலான்' படம் சில வருட தாமதத்திற்குப் பிறகு வெளிவந்தது. வர வேண்டிய நேரத்தில் வந்திருந்தால் நல்ல வசூலைக் குவித்து லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்திருக்கும். இருந்தாலும் சுமார் 75 கோடி வரை அப்படம் வசூலித்ததாகத் தெரிகிறது. 'கேப்டன் மில்லர்' படத்தை பீரியட் படமாக எடுக்கிறேன் என குழப்பியடித்தார்கள். தெளிவில்லாத திரைக்கதை இந்தப் படத்தைப் பேச வைக்காமல் போய்விட்டது. இருந்தாலும் அந்தப் படமும் 75 கோடி வசூலைக் கடந்தது என்றார்கள். ஆனால், இரண்டு படங்களுமே லாபகரமாக அமையவில்லை என்பதுதான் உண்மை.
ரஜினி இருந்தும் கவராத லால் சலாம்
பிப்ரவரி மாதத்தில் சுமார் 21 படங்கள் வரை வெளிவந்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்'. எதிர்பார்த்ததை விடவும் மிகப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதுவரையிலும் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகவில்லை என்பது அதிர்ச்சித் தகவல். அதே பிப்ரவரி மாதத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்த 'சைரன்' படமும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்தது. மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த 'லவ்வர்' படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. 'பைரி, ரணம், அதோ முகம்' போன்ற சிறிய படங்கள் வசூலைப் பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக அமைந்தன.
மார்ச்சில் மட்டும் 26 படங்கள்
மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 26 படங்கள் வெளிவந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் வந்த 'ஜோஷ்வா' படம் அதிரடித் தோல்விப் படமாக அமைந்தது. ஒரு நாளைக் கூட இந்தப் படம் தாண்டவில்லை என்பது அதிர்ச்சியானது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'ரெபெல்' படம் மட்டும்தான் அந்த மாதத்தில் ஓரளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால், அந்தப் படமும் தோல்வியைத்தான் தழுவியது.
'வெப்பம் குளிர் மழை' படம் மட்டும்தான் ஓடவில்லை என்றாலும் விமர்சகர்களால் ஓரளவிற்கு வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது. மார்ச் மாதத்தைப் பொறுத்தவரையில் ஒரு படம் கூட ஓடவில்லை என்பதே உண்மை.
ஏப்ரல் வரை தொடர்ந்த சோகம்
ஏப்ரல் மாதத்தில் சுமார் 20 படங்கள் வெளிவந்தன. தமிழ்ப் புத்தாண்டு மாதம் என்று சொன்னாலும் குறிப்பிடும்படியான படங்கள் அந்த நன்னாளில் வெளியாகவில்லை. ஜிவி பிரகாஷ் நடித்த 'கள்வன், டியர்', விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ', விஷால் நடித்த 'ரத்னம்' ஆகிய படங்கள் அந்த மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள். இதில் 'ரத்னம்' படம் படுதோல்வி அடைந்தது. ஏனைய படங்களும் குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராத ஒரு வருடமாக இந்த வருடம் அமைந்தது.
பேய் வசூல் தந்த அரண்மனை 4
மே மாதம் என்றாலே விடுமுறை மாதம் என்பதால் பலரும் அந்த மாதத்தில் படங்களை வெளியிட முயற்சிப்பார்கள். குடும்பத்தினர், குழந்தைகள் என பலரும் அந்த மாதத்தில் தியேட்டர்கள் பக்கம் செல்வார்கள். ஒரு பக்கம் ஐபிஎல், மறுபக்கம் கோடை வெயில், இன்னொரு பக்கம் தேர்தல் என பல சங்கடங்கள் அந்த மாதத்தில் இருந்தது.
அதையெல்லாம் மீறி மாதத் துவக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படம் யாரும் எதிர்பார்க்காத பெரிய வெற்றியைப் பெற்றது. 100 கோடி வசூலைப் பெற்று இந்த ஆண்டின் முதல் லாபகரமான படம் என்ற பெயரைப் பெற்றது. ஒட்டு மொத்தமாத லாபத்தைக் கொடுத்த படம் என்று இந்தப் படத்தை பாக்ஸ் ஆபீசில் குறிப்பிட்டார்கள். அடுத்து வெளிவந்த 'ஸ்டார்' படம் சுமாரான வெற்றியைப் பெற்று ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்தது. 'பிடி. சார்' படமும் பரவாயில்லாமல் ஓடியது என்றார்கள். மாதக் கடைசியில் வெளிவந்த 'கருடன்' படம் குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெற்றது. சுமார் 50 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் லாபகரமான படமாக அமைந்தது.
வாகை சூடிய மகாராஜா
கடந்த ஜூன் மாதத்தில் மிகக் குறைவாக மொத்தமாக ஒன்பதே ஒன்பது படங்கள்தான் வெளியானது. மாதக் கடைசியில் 'கல்கி 2898 ஏடி' படம் வெளிவந்ததால் கடந்த வாரம் ஒரு தமிழ்ப் படம் கூட வெளியாகவில்லை. இருந்தாலும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படம் 100 கோடி வசூலைக் குவித்து வெற்றிப் படமாக அமைந்தது. தொடர் தோல்விகளால் தடுமாறி வந்த விஜய் சேதுபதிக்கு இப்படம் பெரும் திருப்புமுனையைக் கொடுத்துள்ளது.
இந்த ஆறு மாதங்களில் 'அரண்மனை 4, மகாராஜா' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாகவும், 'அயலான், கேப்டன் மில்லர்' ஆகிய படங்கள் 75 கோடி வசூலைக் கடந்த படங்களாகவும், 'கருடன்' படம் 60 கோடி வசூலித்த படமாகவும், ஸ்டார் படம் 25 கோடி வசூலித்த படமாகவும் அமைந்தது.
படங்கள் ஓடிய நாட்களைப் பொறுத்தவரையில், “அரண்மனை 4, லவ்வர், சைரன், வடக்குபட்டி ராமசாமி, அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, பிடி.சார், இங்கு நான்தான் கிங்கு, ஸ்டார்,' ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்த ஓடியது.
115க்கு 4 வெற்றி
2024ன் அரையாண்டில் மொத்தமாக 115 படங்கள் வந்ததில் 4 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. மீதியுள்ள 100 படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அவற்றின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் மட்டுமே 500 கோடி வரை வரும்.
500 கோடி நஷ்டம்
அடுத்த ஆறு மாதங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அந்தப் படங்களில் சில படங்கள் 500 கோடி வசூலைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உள்ளது. கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் சுமார் 240 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் அரையாண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்த அரையாண்டு சமாளித்து லாபத்தைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
2024 - இதுவரையில் வெளியான படங்கள்…
ஜனவரி
ஜனவரி 5 : அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீதான்டி
ஜனவரி 12 : அயலான், கேப்டன் மில்லர், மெர்ரி கிறிஸ்துமஸ், உசுரே நீதான்டி
ஜனவரி 25 : ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை
ஜனவரி 26 : லோக்கல் சரக்கு, நியதி, த நா, தென் தமிழகம்
பிப்ரவரி
பிப்ரவரி 2 : சிக்லெட்ஸ், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குபட்டி ராமசாமி
பிப்ரவரி 9 : ஈ மெயில், இப்படிக்கு காதல், லால் சலாம், லவ்வர்
பிப்ரவரி 16 : ஆந்தை, எப்போதும் ராஜா, எட்டும் வரை எட்டு, கழுமரம், சைரன்
பிப்ரவரி 23 : பர்த்மார்க், பைரி, கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம் அறம் தவறேல், வித்தைக்காரன்
மார்ச்
மார்ச் 1 : அதோ முகம், அய்யய்யோ, ஜோஷுவா, போர், சத்தமின்றி முத்தம் தா
மார்ச் 8 : அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், ஜே பேபி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, சிங்கப்பெண்ணே, உணர்வுகள் தொடர்கதை
மார்ச் 15 : ஆராய்ச்சி, அமிகோ காரேஜ், காடுவெட்டி, யாவரும் வல்லவரே
மார்ச் 22 : சிட்டு 2020, முனியாண்டியின் முனி பாய்ச்சல், ரெபல்
மார்ச் 29 : பூமர் அங்கிள், எப்புரா, ஹாட்ஸ்பாட், இடி மின்னல் காதல், நேற்று இந்த நேரம், த பாய்ஸ், வெப்பம் குளிர் மழை
ஏப்ரல்
ஏப்ரல் 4 : கள்வன்
ஏப்ரல் 5 : ஆலகாலம், டபுள் டக்கர், இரவின் கண்கள், கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள், ஒரு தவறு செய்தால், ஒயிட் ரோஸ்
ஏப்ரல் 11 : டியர், ரோமியோ
ஏப்ரல் 12 : அறிவியில், வா பகண்டையா
ஏப்ரல் 19 : நெவர் எஸ்கேப், வல்லவன் வகுத்ததடா
ஏப்ரல் 20 : பைண்டர், ரூபன், சிறகன்
ஏப்ரல் 26 : இங்கு மிருகங்கள் வாழும் இடம், கொலை தூரம், ஒரு நொடி, ரத்னம்
மே
மே 3 : மாயவன் வேட்டை, ரசவாதி, ஸ்டார், உயிர் தமிழுக்கு
மே 10 : மாயவன் வேட்டை, ரசவாதி, ஸ்டார், உயிர் தமிழுக்கு
மே 17 : எலக்சன், இங்க நான்தான் கிங்கு, கன்னி, படிக்காத பக்கங்கள்
மே 23 : சாமானியன்
மே 24 : கொஞ்சம் பேசினால் என்ன, பகலறியான், பி.டி சார்
மே 31 : புஜ்ஜி, கருடன், ஹிட் லிஸ்ட், குற்றப் பின்னணி, அக்காலி
ஜூன்
ஜூன் 7 : அஞ்சாமை, ஹரா, இனி ஒரு காதல் செய்வோம், காஷ், தண்டுபாளையம், வெப்படன்
ஜூன் 14 : மகாராஜா
ஜூன் 21 : பயமறியா பிரம்மை, லாந்தர், ரயில்