ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி ஒருவர் சில தினங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவர் வாய்க்கால் ஒன்றில் மூட்டையால் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர செயல் தமிழகம், புதுச்சேரியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எங்கே போகிறோம்? - கமல்
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
எங்கே போகிறோம்?
புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?
குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.
போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.
#SayNoToDrugs
என்று குறிப்பிட்டுள்ளார்.
நெஞ்சம் பதறுகிறது : விஜய்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.