''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
முத்தான பாடல்களால் தென்னிந்திய திரையிசை ரசிகர்களின் சித்தம் குளிர, நித்தம் இசை பாடி மகிழ்வித்த இசையரசி பி சுசீலாவின் 88வது பிறந்த தினம் இன்று. அவரைப்பற்றிய சிறு தொகுப்பு…
* ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் 1935ல் நவம்பர் 13 அன்று, முகுந்தராவ் மற்றும் சேஷாவதாரம் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் பி சுசீலா.
* பி சுசீலாவிற்கு சிறு வயதிலேயே இசை ஆர்வம் இருந்ததைக் கண்டுகொண்ட அவரது பெற்றோர், முறைப்படி அவருக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். பின்னர் விஜயநகர இசைக்கல்லூரியில் டிப்ளமா படிப்பையும் படித்து அதில் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றார்.
* வானொலி நிகழ்ச்சிகளில் பாடிக் கொண்டிருந்த பி சுசீலாவிற்கு அதே வானொலி நிலையத்தின் மூலம் சினிமாவில் பாடவும் வாய்ப்பு வந்தது.
* அந்நாளில் மிகப் பெரிய இசையமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வரராவ், தான் இசையமைக்கப் போகும் புதிய படத்திற்கு, புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்த வேளையில், வானொலி நிலையத்தில் பாடிக் கொண்டிருப்பவர்களில் சிலரை அனுப்பி வைக்குமாறு நிலையத்தாரிடம் அவர் கூற, நிலையத்தார் அனுப்பிய ஐந்து பேரில் ஒருவராக இருந்தார் பி சுசீலா.
* 1953ம் ஆண்டு ஏ நாகேஸ்வரராவ், ஜி வரலக்ஷ்மி நடிப்பில், பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான “பெற்ற தாய்” என்ற திரைப்படம்தான் பி சுசீலாவின் திரையிசைப் பயணத்தின் ஆணிவேராக அமைந்தது.
* படத்தில் இவர் பாடிய “ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு” என்ற பாடல்தான் இவரது முதல் திரைப்படப் பாடலாகும். உடன் பாடியவர் மறைந்த பின்னணிப் பாடகர் ஏஎம் ராஜா. இதன் பின் ஏவிஎம் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக இருந்தார் பி சுசீலா.
* 1955ம் ஆண்டு வெளிவந்த “கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற திரைப்படம் பி சுசீலாவின் திரையிசைப் பயணத்தில் திருப்பத்தை தந்த படமாக மாறியது.
* இத்திரைப்படத்தில் பி சுசீலா பாடிய அத்தனைப் பாடல்களும் தேனில் விழுந்த பலாவாக இனிமையாக இருந்தன. “எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ”, “உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே”, “அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா” போன்ற பாடல்கள் இன்றும் இசைப்பிரியர்களால் பெரிதும் ஆராதிக்கப்படும் பாடல்கள்.
* பி சுசீலாவின் திரையிசை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல் பதித்த திரைப்படம் “உத்தமபுத்திரன்”. 1957ல் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி ராமனாதன். பி லீலா, ஜிக்கி, ஏபி கோமளா, ஜமுனாராணி என பலர் இப்படத்தில் பாடியிருந்தாலும், பி சுசீலாவிற்கு கிடைத்த பாடல்கள் தனி முத்திரை பதித்திருந்தன.
* “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே”, “அன்பே அமுதே அருங்கனியே”, “உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே” போன்ற பாடல்களினால் நிலை உயரப் பெற்றிருந்தார் பி சுசீலா.
* தொடர்ந்து 1959ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில், பின்னணிப் பாடகர் ஏஎம் ராஜாவின் இசையில் வெளிவந்த “கல்யாணப்பரிசு” படத்தின் பாடல்கள் எட்டில் ஐந்து பி சுசீலா பாடியவை. அத்தனையும் முத்தானவை.
* 1960களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர்களின் விஸ்வரூப இசை வீச்சில், இயக்குநர் ஏ பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த “பாவமன்னிப்பு”, “பாசமலர்”, “பாலும் பழமும்”, “பார்த்தால் பசி தீரும்”, “பார் மகளே பார்” என்று 'ப' வரிசைப் படங்களில் பி சுசீலாவின் குரலில் வந்த அத்தனைப் பாடல்களும் சாகாவரம் பெற்ற பாடல்களாக அமைந்தன.
* “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல”, “யார் யார் யார் அவள் யாரோ?”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “அத்தான் என்னத்தான்”, “பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”, “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்”, “காதல் சிறகை காற்றினில் விரித்து”, “பார்த்தால் பசிதீரும்”, “கொடி அசைந்ததும் காற்று வந்ததா” என 60களில் பி சுசீலாவின் குரலில் வந்த தேவகானங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
* 1968ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த “உயர்ந்த மனிதன்” திரைப்படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில் உருவான “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா” என்ற பாடலை பாடியதற்காக, அந்த ஆண்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதினை வென்றெடுத்தார்.
* 1970களின் பிற்பகுதியில் குறிப்பாக இளையராஜாவின் வருகைக்குப் பின், பி சுசீலாவின் பாடல்களின் எண்ணிக்கை முன்பிருந்த அளவு இல்லை என்றாலும், இளையராஜாவின் இசையிலும் ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடி பதிவு செய்திருக்கிறார் பி சுசீலா.
* இளையராஜாவின் முதல் படமான “அன்னக்கிளி”யில் “சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை” என்ற பாடலை பாட ஆரம்பித்து, தொடர்ந்து அவரது இசையில் “கண்ணன் ஒரு கைக்குழந்தை”, “டார்லிங் டார்லிங் டார்லிங்”, “சுகமோ ஆயிரம்”, “ராசாவே ஒன்ன காணாத நெஞ்சு”, “காலை தென்றல் பாடி வரும்”, “நிலவு நேரம் இரவு காயும்”, “கற்பூர பொம்மை ஒன்று”, “ராசாத்தி மனசுல”, “முத்துமணி மால” என்று இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்கள் நெங்சங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.
* “கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு”, “கப்பலேறி போயாச்சு” என்று ஏஆர் ரஹ்மானின் இசையிலும் பாடி, தன் குரலுக்கு என்றுமே முதுமையில்லை என்பதை நிரூபித்தவர்தான் பி சுசீலா.
* “பத்மபூஷண் விருது” உட்பட, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது, இரண்டு முறை கேரள அரசு விருது, ஏழு முறை ஆந்திர அரசு விருது என இன்னும்பிற விருதுகளும், பட்டங்களும் கிடைக்கப் பெற்ற பி சுசீலா, பன் மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.
* “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்” என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி, அந்த தாய் தமிழையே தாலாட்டி, சீராட்டி தரணி எங்கும் பெருமை சேர்த்த “இசையரசி” பி சுசீலாவின் பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொண்டு, அவரை வாழ்த்தி வணங்குவதில் நாம் பெருமை கொள்வோம்.
நீங்களும் பி.சுசீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவரது பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களை கமென்ட்டில் தெரிவிக்கலாம்...!