ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து வெளிந்த படம் 'ஆதிபுருஷ்'. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த ஜுன் மாதம் 16ம் தேதி வெளியானது.
ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குனர் ஓம் ராவத் அவரது இஷ்டத்துக்கு கதாபாத்திரங்களின் உருவங்களை மாற்றி, கதையை மாற்றி என்னென்னமோ செய்து எடுத்து வைத்திருந்தார். கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் படம் 350 கோடிக்கு மேல் வசூலித்தாலும் 225 கோடி ரூபாய் வரை நஷ்டமடைந்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அந்த வரிசையில் 'ஆதி புருஷ்' படமும் சேர்ந்தது. பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சலார்' படம் அந்த தோல்வியை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் அப்படத்தை இயக்குவதே அதற்குக் காரணம்.