தினமலர் விமர்சனம் » ரம்மி
தினமலர் விமர்சனம்
ஒரு பழைய காதல் கதையை, நவீன உத்திகளோடு சொல்ல முயற்சித்திருக்கிறது, ரம்மி ஆனால்... இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யம் கம்மி. கடந்த, 1987களின் மதுரையும், அதைச் சார்ந்த கிராமங்களும். வடகாடு கிராமத்திலிருந்து, சக்தி (இனிகோ பிரபாகர்) முதல் முறையாக, சிவகங்கை கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறான். அங்கே, அவன் கண்களில் படும் மீனாட்சி (காயத்ரி), பூலாங்குறிச்சியை சேர்ந்தவள். கண்டவுடன் காதல் வயப்படும் சக்தி, அவன் பால், மெல்ல ஈர்க்கப்படும் மீனாட்சி என, ஒரு பாதி படம் போகிறது.
சக்தியின் அறை நண்பனாக வரும் ஜோசப்பின் (விஜய் சேதுபதி), அம்மாவும் இறந்து விட்ட நிலையில், ஆதரவில்லாமல் அனாதை ஆகிவிட, அவனை, தன் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறது, சக்தியின் குடும்பம். மீனாட்சியின், பெரியப்பா மகள் சொர்ணம் (ஐஸ்வர்யா ராஜேஷ்), ஜோசப்பின் மேல் மையலாகிறாள். அதை விரும்பாத, அவளது குடும்பம், ஜோசப்பை போட்டுத் தள்ளிவிட, தன் தந்தையை வெட்டிச் சாய்த்து, சிறை செல்கிறாள் சொர்ணம்.
பாரதிராஜா காலத்து கதை. ஆனால், ராஜா முகமதின் எடிட்டிங்கும், பாலாவின் இயக்கமும் ஓரளவு விறுவிறுப்பை தக்க வைக்கின்றன. இனிகோ பிரபாகர், தன் பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார். விஜய் சேதுபதி, நட்புக்காக செய்த படம் போல, வழக்கமான, அவரது அலப்பறைகள் ஏதுமில்லை. அருணாச்சலமாக வரும் சூரி, சுவடு பதியாமல் மறைந்து போகிறார். காயத்ரிக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனால், ஐஸ்வர்யா கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பள பளக்கிறார்.
இமான், வரம் கிடைத்த அசுரன் போல, இசைஞானியை ஞாபகப்படுத்தும் விதமாக, அட்டகாசமான பாடல்களையும், பின்னணி இசையையும் சேர்த்து, படத்தை ரம்மியமாக்கி இருக்கிறார். பாறைகள், கோவில் மண்டபத் தூண்கள், இடையில் பாயும் வெயில் என, அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். கூட மேலே கூடை வச்சு கூடலூறு போறவளே, எதுக்காக என்னை நீ பாத்தே என்ற பாடல்களில், தேனிசையை அள்ளித் தந்திருக்கிறார் இமான்.
தினம் ரெண்டு பல்லு பூண்டு காலையிலே சாப்பிடு. கேசுக்கும் நல்லது நம்ம கிளாசுக்கும் நல்லது என்பது போன்ற வசனங்கள், சிரிப்பலைகளை விசிறுகிறது.
மொத்தத்தில், 'ரம்மி - டம்மி'
ரசிகன் குரல் - ரேவதி விட்ட இடத்தை இந்த ஐஸ்வர்யா பொண்ணு பிடிச்சிரும் மச்சான்!
--------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
கதை நடக்கும் கால கட்டம் 1987. கதைக்களம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள். ஒரு கிராமம் 3 நண்பர்கள் காலேஜ்க்குப்போறாங்க . அதுல ஹீரோ தன் கிளாஸ் மேட் பொண்ணை லவ்வுறார். ஆனா பொண்ணொட அப்பா காதலுக்கு எதிரி, ஜாதி மதம் எல்லாம் பார்ப்பவர். ஹீரோவோட நண்பர் கிறிஸ்டியன். அவர் ஒரு இந்துப்பொண்ணை லவ்வுறார். ஒரு இக்கட்டான நிலைமைல அந்த இந்துப்பொண்ணு சூட்கேஸ் எடுத்துட்டு கிறிஸ்டியன் நண்பர் வீட்டுக்கே வந்து ஊரை விட்டு ஓடிடலாம்குது. வேற வழி இல்லாம அவரும் அவளைக்கூட்டிட்டு கிளம்பறாரு. உடனே வில்லன் கோஷ்டிங்க அந்த ஜோடியைத்தேடி சல்லடைப்போட்டுத்தேடுறாங்க , என்ன நடந்தது என்பதுதான் 144 நிமிசம் ஓடக்கூடிய ரம்மி படக்கதை.
ஹீரோவா இனிகோ பிரபாகர். இயல்பான கிராமத்து இளைஞனைக் கண் முன் நிறுத்துறார். இவரது உயரமும், நிறமும் இவருக்கு பிளஸ். பாடல் காட்சிகளில் மட்டும் பாடி லாங்குவேஜில் இயல்புத்தன்மை தேவை, மற்றபடி ஓக்கே.
இன்னொரு ஹீரோவாக விஜய் சேதுபதி. பாடி லாங்குவேஜை எந்த எந்த காட்சியில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை மூளை செல்கள் கட்டளையிடும் முன்பே அனிச்சையாக மாற்றும் பிரமாதமான நடிகர். அசால்ட்டாக இருக்கும் அவர் முகம் காட்சிக்கு ஏற்றவாறு டக் என மாறும் போது சபாஷ் பெறுகிறார்.
நாயகியாக காயத்ரி. சூரிய காந்திப்பூவை செடியில் இருந்து பறிக்காமலேயே காலை எட்டு மணிக்கு அதன் மேல் தண்ணீர் தெளித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு புத்துணர்ச்சியுடன் மலர்ந்த முகத்துடன் இருக்கிறார். அவர் மீது அவருக்குப்பிடிக்காத ஆள் நெருங்கும்போது முகத்தில் காட்டும் வன்மம் அபாரம், தாவணியில் வலம் வரும் தாமரைப்பூ போல் படம் முழுக்க இவர் ராஜ்ஜியமே.
இன்னொரு நாயகி ஐஸ்வர்யா. தமிழனின் தேசிய நிறமான மாநிற கோதுமை அழகி. கிராமத்து வாசம் கமழும் முகம். கிணற்றடியில் மஞ்சள் தேய்ச்சுக்குளிக்கும் காட்சியும், விஜய் சேதுபதியுடன் கட்டிலில் கொஞ்சும் காட்சியும் சபாஷ். க்ளைமாக்ஸ் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
காமெடியனாக புரோட்டா சூரி. வழக்கம் போல் வடிவேலுவின் காதலன் பட பாடி லேங்குவேஜ். பஞ்ச் வசனங்கள். ஒன் லைனர்கள் இல்லாமல் தடுமாறினாலும் திரைக்கதையால் சாமார்த்தியமாக தப்பிக்கிறார்.
வில்லன்கள் இருவர் நடிப்பும் கன கச்சிதம், காலேஜ் லைஃபில் வரும் வில்லன் களவாணி வில்லன் சாயலில் இருக்கார். பாடல் காட்சிகள் அச்சு அசல் விக்ரமன் பட சாயல் . பூவே உனக்காக பட பாடல்களை நடன அமைப்பை பிரதி எடுத்ததுபோல் இருக்கு.
சி.பி.கமெண்ட் - ரம்மி - எம் சசிகுமார் பார்முலாவில் வில்லேஜ் லவ் த்ரில்லர் - பி, சி சென்ட்டர்களில் மீடியமா ஹிட் ஆகிடும்.