Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஐந்து ஐந்து ஐந்து

ஐந்து ஐந்து ஐந்து,Ainthu Ainthu Ainthu
 • ஐந்து ஐந்து ஐந்து
 • பரத்
 • மிருத்திகா
 • இயக்குனர்: சசி
19 ஆக, 2013 - 14:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஐந்து ஐந்து ஐந்து

   

தினமலர் விமர்சனம்


‘சொல்லாமலே’ சசியின் இயக்கத்தில், ‘காதல்’ பரத் ‘6’ பேக் உடற்கட்டு உடன் நடித்திருக்கும் ஆக்ஷ்ன், லவ் சென்டிமெண்ட் திரைப்படம் தான் ஐந்து ஐந்து ஐந்து!

‘சொல்லா‌மலே’ திரைப்படத்திற்குப்பின் சசி, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பூ’ என இன்னும் சில படங்களை இயக்கி இருந்தும், ‘காதல் படத்திற்குப்பின் ‘வெயில்’, ‘எம்மகன்’, ‘நேபாளி’, ‘திருத்தணி’, ‘யுவன் யுவதி’ உள்ளிட்ட எத்தனையோ படங்களில் பரத் நடித்திருந்தும், இன்னமும் அவர்களது அடையாளங்கள் ‘சொல்லாமலே ’ சசி, ‘காதல்’ பரத் என்றே இருப்பது போன்று ‘‘ஐந்து ஐந்து ஐந்து’’ படத்திற்குப் பின்னும் இந்த இருவரது அடையாளங்களிலும் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை... என்றாலும் இப்படத்திற்காக இயக்குநர் சசியும், நடிகர் பரத்தும் நிறையவே உழைத்திருக்கிறார்கள் என்பது பிரேம் டு பிரேம் படத்தில் தெரியும் பிரமாண்டத்தில் புரிகிறது! இருந்தும் என்ன பயன்? ‘சொல்லா‌மலே’ சசியிடமும், ‘காதல்’ பரத்திடமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு ‘பூ’, ஒரு ‘வெயில்’ மாதிரி படங்களைத்தான் என்பதை அவர்கள் இருவருமே புரிந்து கொள்ளாதது இப்படத்திற்கு பலத்தை விட, பலவீனத்தையே கூட்டுகிறது. பாவம்!

கதைப்படி அரவிந்த எனும் பரத்திற்கு லியானா எனும் மிருத்திகா மீது காதல். ஆனால் ஒரு விபத்துக்குபின் அப்படி ஒரு காதலோ, காதலியோ அல்ல, அந்த விபத்தில் சிக்கிய பரத்துக்கு மனநிலை சரியில்லை... அதன் விளைவு தான் இப்படி என்று பரத்தின் உடன்பிறந்த அண்ணன் கோபால் எனும் காமெடி சந்தானமும்(!), அவர்களது மனநல மருத்துவரும் அடித்துக்கூற குழம்புகின்றார் பரத். நம்மையும் குழப்புகிறார்! ஒரு வழியாக இதற்கெல்லாம் காரணம் லியானா எனும் மிருத்திகாவை தன் இறந்து போன காதலி சாயலில் இருப்பதால் ஒருதலையாக காதலிக்கும் ஐம்பது வயது பெரும் தொழில் அதிபர் தான் என்பதை கண்டுபிடிக்கும் பரத், அவரிடம் சிக்கித் தவிக்கும் காதலியை மீட்டு கரம்பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்.?!, எதையெல்லாம் இழந்தார்?!, இறுதியில் காதலியை கரம்பிடித்து ஜெயித்தாரா? தோற்றாரா? என்பது தான் ‘‘ஐந்து ஐந்து ஐந்து’’ திரைப்படத்தின் மொத்த கதையும்!

இப்படி ஒரு வித்தியாசமான கதையை விறுவிறுப்பாக, சஸ்பென்சாக சொல்கிறேன் பேர்வழி... என்றும் திரைக்கதையில் நிறைய ‘திடுக்‘ திருப்பங்களை ஏற்படுத்துகிறேன் என்றும்... நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார் இயக்குநர் சசி! சசி சார் உங்களுக்கு சுவாரஸ்யமான காதல் போதாதா...?! எதற்கு சஸ்பென்ஸ், த்ரில்லர் எல்லாம்?!

பரத், 6 பேக் உடம்பை காட்டி போடும் சண்டைக்காட்சிகளிலும், மிருத்திகாவுடனான ப்ளாஷ்பேக் காதல் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். சந்தானம், ஒருசில காட்சிகளில் வந்து காமெடி பண்ணி அதன்பின் தம்பி பரத்துக்காக உயிரை விடுவது ‘டிராஜிட்டி!’

லியானாவாக வரும் மிருத்திகா டூயல் ரோலிலும் தூள் பரத்துகிறார் என்றால், பரத்துக்காக 50 வயது தொழில் அதிபரால் செட்டப் செய்யப்படும் மஞ்சரி எனும் எரிக்கா பெர்ணான்டஸூம் தானும், மிருத்திகாவுக்கு சளைத்தவரில்லை... என பரத்துடன் படுபாந்தமாக டூயட்பாடி ஆடுவது படத்திற்கு ப்ளஸ் சேர்க்கிறது!

சைமனின் இசையில் அவர் எழுதிபாடும் ‘எழவு’ பாடல் தவிர மற்ற நான்கு முத்துக்குமாரின் பாடல்களும் நல்முத்துக்கள்! சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவும், ரவி ஸ்ரீசந்திரனின் சண்டைப்பயிற்சி உள்ளிட்டவைகள் சசியின் ‘டிரிபிள் பைவ்’வை ‘சேட்டிஸ்பை’ ஆக்கியுள்ளன!

ஆகமொத்தத்தில், 5 5 5(‘‘ஐந்து ஐந்து ஐந்து’’) - 35 ‘‘(ஜஸ்ட்பாஸ்!)’’


-------------------------------------------------------------------------------குமுதம் விமர்சனம்


வழக்கமான ‘பூ’ பாதையிலிருந்து கொஞ்சம் ‘சமர்’சம் செய்துகொண்டு, சொல்லாமலே ஆயுதம் ஏந்தியிருக்கிறார் சசி.

பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பரத். 8 பேக் உடம்பைக் காட்டுவதோடு தனக்கு நடிக்கவும் வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். காதலி பற்றிய நினைவு உந்தித் தள்ளும்போதெல்லாம் குரல் உதற, உடல் பதற அவர் நடுங்கும் காட்சிகள் பிரமிப்பு. கதை?

ஒரு விபத்தில் காதலியைப் பிரிகிறார் பரத். காதலியின் நினைவாகவே இருக்கும் அவர் ஒருவித மனநோயாளி என்றும், காதலியே அவருக்கு கிடையாது எனவும் மனநல மருத்துவரும், சொந்த அண்ணன் சந்தானமும் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வது எல்லாம் டூப் என்பது அவருக்கு தெரியவருகிறது. தன்னை நம்பவைக்க யார் இப்படி முயற்சிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க துப்பாக்கி ஏந்தி, எதிரிகளை துவம்சம் செய்வதுதான் 555.

மிருத்திகா, எரிக்கா என்று இரண்டு அழகுப் பதுமைகள். மாசு, மரு இல்லாத மருதாணிகள். நல்ல எதிர்காலம் இருக்குது கண்ணுகளா!

பரத்திற்கு விசேஷ சக்தி இருப்பதாக மிருத்திகா நம்பும் காட்சிகளி்ன போதெல்லாம் தியேட்டரில் கை தட்டுகிறார்கள். திரைக்கதையில் சசியின் விசேஷ கவனம் ஈர்க்கிறது.

‘‘ஹீரோயின் ஜெனிலியா மாதிரி இருக்காங்களே’’. ‘‘யார்யா இவன், ஃபுட்பாலுக்கு வாய் வரைஞ்ச மாதிரி’’. போன்று பேசி மேடை நாடகம் போல் ரொம்ப லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறார் சந்தானம். அவ்வளவுதான்.

லொகேஷனிலும் காட்சியமைப்பிலும் கவனம் செலுத்தி பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள். சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம். அதுபோல் ஸ்டண்ட் மாஸ்டருக்கும் துப்பாக்கித் தோட்டாக்களால் ஒரு மாலை செய்து பரிசளிக்கலாம்.

விறுவிறுப்பாக காதல், மர்மம் என்று போய்க்கொண்டிருந்த படம், உச்சா நேரத்துக்குப் பிறகு உற்சாகத்தைக் காலி செய்கிறது. வட இந்தியாவில் வயதான ஒருவனாம். அவனது கொல்லப்பட்ட மனைவி, மிருத்திகாவைப் போலவே இருப்பாளாம். அவன் சென்னை வந்து, கோடீஸ்வரனாக ஆகி, இந்த மிருத்திகாவைப் பார்த்து அவளைக் கல்யாணம் செய்வதற்காக அவளது அப்பா, அம்மாவைக் கொன்று, பரத்தின் நினைவுகளில் இருந்து மிருத்திகாவை மறக்கச் செய்து... என்னங்க படிக்கிற உங்களுக்கு தலை சுத்துதா? அப்ப காசு கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்?

மொத்தத்தில் ‘555’ - ஆக்ஷன் அதிகம். ரியாக்ஷன் கம்மி.

குமுதம் ரேட்டிங் - ஓகே.-------------------------------------------------------------------------------  நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஒரு விபத்தில் படுகாயம் அடைந்த ஹீரோ தன் கூடவே காரில் பயணம் செஞ்ச தன் காதலியை காணாம தவிக்கறார். தன் காதலியை அவரால மறக்கவே முடியலை. காதலியின் வீடு, காதலி கூட சேர்ந்து சுத்துன இடம் எல்லாம் போய்ப்பார்க்கறார். அவரோட காதலி விபத்தில் இறந்துட்டாரு.(ன்னு நினைக்கிறார்) அவரோட சமாதியில் ஹீரோ பழியாக்கிடக்காரு. ஹீரோவோட அண்ணன், சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் 2 பேரும் ஹீரோ கிட்டே சொல்லும் மேட்டர் அதிர்ச்சியானது .

குடைக்குள் மழை பார்த்திபன் மாதிரி ஹீரோவுக்கு பேரா நாமீசியா அப்டினு ஏதோ ஒரு வியாதி இருக்காம். அதாவது இல்லாத ஒன்றை கற்பனை பண்ணிக்கறது. அந்த  கேரக்டர் கூடவே வாழ்வது. குணா கமல், அபிராமியை நினைச்ச மாதிரி. ஹீரோ தன் காதலியின் அத்தையை சந்திக்கறார். அவரும் ஹீரோவை யார்னே தெரியாது அப்டிங்கறார். ஹீரோவுக்கு ஒரு குழப்பம். இவங்க நடிக்கறாங்களா? நிஜமாவே தெரியலையா? அப்டினு

இருக்கற குழப்பங்கள், பிரச்சனைகள் பத்தாதுன்னு இன்னொரு பொண்ணு  ஹீரோவை லவ் பண்றேன்னு பின்னாலயே சுத்திட்டு இருக்கு. சமர் படத்துல வர்ற மாதிரி எல்லாமே ஒரு டிராமாவோ அப்டினு  நினைக்கறப்போ  இல்லை, இது வேற மாதிரி கதை அப்டினு பின்பாதி திரைக்கதைல இயக்குநர் அழகா முடிச்சை அவிழ்க்கிறார்.

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ போன்ற  மாறுபட்ட காதல் கதைகளைத் தந்த சசிதான் இந்தப்பட இயக்குநர். திரைக்கதை தான் படத்துக்கு பக்கபலம். ஹீரோ எல்லாம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமான பெண்ணின் பார்வையில் சொல்லப்படும்  முதல் காதல் கதையை எடுத்தவர் (பூ) அது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் கஜினி டைப் ஆக்சன் பேஸ்டு லவ் சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுத்திருக்கார். சபாஷ் சசி

ஹீரோ பரத். பழநி, திருத்தணி மாதிரி  லோகிளாஸ் ஆடியன்ஸ் படங்களாக நடித்தவர் ரொமாண்டிக் யூத். எய்ட்பேக் பாடிபில்டர் என இரு மாறுபட்டதோற்றத்தில் சிரத்தையாக நடிச்சிருக்கார். படத்தில் பெரிய ஆறுதல் இவர் பஞ்ச் டயலாக் எதுவும் பேசாமல் இயக்குநர் சொன்னபடி கேட்டு அடக்கி வாசித்திருப்பதுதான். க்ளைமாக்ஸில் தன் ஜிம் பாடியை இவர் காட்டும்போது பிரமிப்பு. இது வரை எந்தஒரு தமிழ் சினிமா ஹீரோவும் இந்த அளவு எய்ட்பேக் பாடி காட்டியதில்லை (வாரணம் 1000 சூர்யா சிக்ஸ்பேக்)  அதற்கும் ஒரு சபாஷ்.

ஹீரோயின் புதுமுகம் மிர்திகா. அழகு  முகம், வந்து  பழகு பழகு என்று கொஞ்ச வைக்கும் கவிதை பேசும் கண்கள். சாத்துக்குடி ஆரஞ்சுப்பழ சுளை சைசில் இருக்கும் கொடை ஆரஞ்சுப்பழ சுளைக்கு மருதாணி வெச்சா எப்படி இருக்கும்  அப்படி ஒரு இயற்கையான ஆரஞ்சு சிவப்பழகு கொண்ட உதடுகள். ஒரு சின்ன பருகூட இல்லாத மொசைக் ரசகுல்லா மாதிரி கன்னங்கள் அழகு அழகு. ஹீரோ ஒரு யோகா ஆள், பவர் உள்ள ஆள் என இவர் நம்புவது லைலாத்தனமாக இருந்தாலும் (லூஸ்) தன் அப்பாவித்தன நடிப்பில் அப்ளாஸ் வாங்குகிறார். இவரை  மணிரத்னம் , ஷங்கர் மாதிரி இயக்குநர்கள் ஹீரோயினாக (படத்தில்) யூஸ் பண்ணிக்கிட்டா நல்ல எதிர்காலம் இவருக்கு உண்டு

இன்னொரு  ஹீரோயின் எரிக்கா. முதல் ஹீரோயின் ”அளவுக்கு “ இவர் இல்லைன்னாலும் ஆள் அழகாத்தான் இருக்கார். இவருக்கு வாய்ப்பு  கம்மின்னாலும்  வந்தவரை   ஓக்கே.

ஹீரோயின் அத்தையாக நடிச்ச நடிகை கூட கவனிக்க வைக்கும் அழகுதான். உயிர் பட சங்கீதாசாயல். கொழுக் மொழுக் வில்லின்னா இனி அவரைக்கூப்பிடலாம் போல. 

வில்லனாக வருபவர் கடைசி சில காட்சிகள் என்றாலும் நல்ல நடிப்பு.

சந்தானம் ஹீரோவின் அண்ணனாக வந்தாலும் காமெடிக்கு ஸ்கோப் கம்மி.


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
 

1. கஜினி பட ரொமான்ஸ் காட்சிகள் போல் சாயல் இருந்தாலும் ரசிக்கும்படி அதை எடுத்தது. கேபிள் கனெக்ட் பண்ண ஹீரோயின் வீட்டுக்கு வந்து அவர் பெட்ரூம் சூழலை நோட் பண்ணிவிட்டு, பின் ஃபோனில் தனக்கு ஒரு பவர்  யோகாவால் கிடைத்ததாகவும், இப்போ உன் பக்கத்தில் என்னென்னெ இருக்கு? என்பதை சொல்லமுடியும் என ஹீரோ அள்ளிவிடும் காட்சிகள் சுவராஸ்யம்.

2. சன் கிளாஸ் பொருத்தப்பட்ட காரில் ஹீரோயின் காத்திருக்க அங்கே வரும்  ஹீரோ எதேச்சையாய் கண்ணாடியில் தலை சீவ குனிய அவர் தன் பவர் மூலம் தான் இருக்கும் இடம் அறிந்து தான் தன்னைப்பார்த்து சிரிப்பதாக ஹீரோயின் புளாகாங்கிதப்படும் சீன் கைதட்டல் ரகம்.

3. முதல்முறை காதல் பாடல் காட்சி படமாக்கிய விதம், ஓப்பனிங்க் சாங்க் லொக்கேஷன் இரண்டும் அழகு.

4. சந்தானத்துடன் ஹீரோ பைக்கில் போகும்போது பெட்ரோல் ட்ரை (DRY)ஆகி விட, பெட்ரோல் பங்க்கில் பாட்டிலில் ஹீரோ பிடிச்சுட்டு வரும்போது அந்த வழியில் ஹீரோயின்  ஸ்கூட்டியை தள்ளிக்கிட்டு வரும்போது ஹீரோவைப்பார்த்து “ அட, உன்  பவர்  மூலம்  எனக்கு இப்போ பெட்ரோல் வேணும்னு கண்டு பிடிச்சுட்டியா? என கேட்பது ஆஹா!

5. திரைக்கதையில் வரும் டர்னிங்க் பாயிண்ட்டை கடைசி 20வது நிமிடத்தில் தான் சொல்வது, அதுவரை சுவராஸ்யமாக திரைக்கதையை நகர்த்தியது.

6. விஷால் நடிச்ச சமர் படத்தின் கதையை கொஞ்சம் மாத்தி எடுத்துட்டு கடைசி டைம்ல அந்த கதை வேற என நம்மை நம்ப வைக்க சிரமப்பட்டு ஒரு ட்விஸ்ட்டை இடைச்செருகலாய் சொருகியது

7. படத்தோட புரமோஷனுக்காக பரத்தை எய்ட் பேக் ஜிம் பாடி பில்டர் ஆக்கியது

8. படத்தில் வரும் 3 முக்கிய பெண் கேரக்டர்களை அழகாக தேர்வு செய்தது, அவர்களை கண்ணியமாக, அழகாக உடை அணிய வைத்து ரசிக்கவைத்தது.

9. படத்தின் டைட்டிலை மையப்படுத்தும் பார்சல்க்குள் என்ன இருக்கு என்பதை ஹீரோ யூகிக்கும் காட்சி கலக்கல். அப்ளாஸ் அள்ளியது


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ லிஃப்ட்ல வரும்போது முதன் முதலாக ஹீரோயினை பார்க்கற டைம்ல ஹீரோயின் ஹேண்ட் பேக் ஜிப் ஓப்பன் என்பதைசுட்டிக்காட்ட “ ஜிப்”என வெறுமனே சொல்றார். உடனே ஹீரோயின் தன் பேண்ட் ஜிப்பை அட்ஜஸ் செய்ய பார்க்கிறார். பொதுவாக நாம ஜிப்பை குறிப்பிட்டா பேண்ட் ஜிப் தான். பேக் ஜிப்னாவாயில் முதல் வார்த்தையே பேக் அல்லது ஹேண்ட் பேக் என்றுதான் வரும் 

2. ஹீரோ, ஹீரோயினின் சமாதியில் அவர் பெயரை கிறுக்கும்போது அந்த சமாதியில் ஒரே  ஒரு பெயர் தான் இருக்கு. அடுத்த காட்சியில் சந்தானம், டாக்டர்  எல்லாரும்  வந்து பார்க்கும்போது ஏகப்பட்ட “லவ், டயானா பேரு இருக்கே, எப்படி?

3. ஹீரோவும், ஹீரோயினும் மோதும்போது 2 பேர் செல்ஃபோனும் விழுது. ஹீரோயின் ஹீரோவோட செல்ஃபோன்ல இருந்து சிம்மை கழட்டி தர்றார். ஆனா ஹீரோயின் செல்ஃபோனை மாத்தி எடுத்துக்கும், ஹீரோ அவர் சிம்மை கழட்டித் தரவே இல்லையே?  ஹீரோ எதுக்கு ஹீரோயின் ஃபோன் நெம்பர் கேட்கறார்? அவர்  கிட்டேதான் ஹீரோயின் சிம் இருக்கே?

4. ஜிம்மில் எக்சசைஸ் பண்றவங்க ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு பண்ணுவாங்களா?  (ரெகுலரா ஜிம் போறவங்க லூஸ் பேண்ட், திருப்பூர் ஐட்டம் பனியன்கிளாத் பேண்ட் தான் போட்டுட்டு எக்சசைஸ் பண்ணுவாங்க, ஜீன்ஸ் போட்டா எல்லாம் வெந்துடும்)

5. வில்லனின் ஆள் ஹீரோகிட்டே, ஹீரோவின் அண்ணன் சந்தானம் பணயக்கைதி வில்லன் கிட்டே. அப்படி இருக்கும்போது  ஹீரோ ஏன் அவசரப்பட்டு  தன் கையில்   இருக்கும் அடியாளை போட்டுத் தள்றார்? பதிலுக்கு சந்தானத்தை வில்லன் கொல்வார் என தெரியாதா? வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் (கவுதம் மேனன்) செய்த அதே தப்பை பரத்தும் செய்வது ஏன்?

6. ஹீரோ பெயரை அர்விந்த்-னு ஸ்டோர் பண்ணி இருக்கும் ஹீரோயின், ஒவ்வொரு முறையும் நெம்பரை டைப் பண்ணுவது ஏன்?காண்டாக்ட்ஸ் ல போய் ஏ லைனில் எடுக்கலாமே?அதானே ஈசி?

7. ஹீரோயினின் ஆண்ட்டி  ஹீரோ-ஹீரோயின் என்ன பேசிக்கறாங்க என்பதை தெரிஞ்சுக்க தன் செல்ஃபோனில் இருந்து  ஹீரோயின் செல்லுக்கு கால் பண்ணி ஹீரோயின்  செல்ஃபோனை அட்டெண்ட் செய்யவெச்சு அந்த செல்லை ஹீரோயினிடம் கொடுத்து விடுகிறார். இப்போ 2 பேரும் பேசுவது அத்தைக்கு கேட்கும். ஓக்கே, ஆனா ஹீரோ ஹீரோயினின் செல்ஃபோன் மானிட்டரை பார்த்து உண்மையை கண்டு பிடிக்கறார்,. அந்த டைம்ல ஆண்ட்டி அப்டினு மட்டும் செல்ஃபோன் ஸ்க்ரீன்ல தெரியுது. அதுஎப்படி? கால் ஓடிட்டு இருக்கு. டைம்  டியூரேஷன் காட்டிட்டு இருக்கவேணாமா?

8. ஹீரோயினின் அத்தை, ஹீரோயினிடம்  நான் இந்த லவ்வர்ஸ் சிலையை பேக் பண்ணித்தர்றேன். பார்சலை பிரிக்காமல் ஹீரோ உள்ளே என்ன இருக்கு?ன்னு கண்டுபிடிச்சா லவ்வுக்கு ஓக்கே என சொல்லி சதி வேலைசெய்பவள், அதே  ரூமில் இருக்கும் வேறு சிலையை( பொம்மை) வெச்சா மேட்டர் ஓவர். எதுக்கு தன் கழுத்தில் இருக்கும் தங்கச்செயினை பார்சலில் வைக்கறார்? ரிஸ்க் தானே?

9. தன் அண்ணனைக் கொன்றவனை ஹீரோ தாக்கி கொன்னுடுறார், அல்லது மயக்கப்படுத்திடறார். மீண்டும் சுடும்போது அவர் எப்படி ஜெர்க் ஆக முடியும்? உடம்பு எப்படி துடிக்கும்?

10. பணக்காரரான வில்லன் அவ்வளவு டிராமா பண்றவர். சுபா, பிகேபி நாவலில் வருவது போல் சவப்பெட்டியில் ஏதோ ஒரு அநாதை லேடி டெட்பாடியை வெச்சா மேட்டர்  ஓவர். காலி பெட்டியை எந்தமுட்டாள் வில்லனாவது வைப்பானா? ஹீரோயின் செத்துட்டா என நம்ப வைப்பவன் அந்த சின்ன லாஜிக் கூடவா யோசிக்க மாட்டான்?

11. க்ளைமாக்ஸில் ஹீரோயினிடம், வில்லன் ஹீரோ கோமாவில் இருக்கார் என்கிறார். ஹீரோயின் ஏன் ஹீரோவை இப்போ பக்கத்தில் பார்த்தே ஆகனும்னு அடம் பிடிக்கலை. வில்லன் தான் ஹீரோயின் மேல் மயக்கமா இருக்காரே? ஹீரோயின் என்ன சொன்னாலும் கேட்கறாரே?

12. க்ளைமாக்ஸ்ல ஹீரோவுக்கு கைல அடிபட்டுடுது. அந்தகாயத்துக்கு கட்டு போட அருகில் உள்ள திரைச்சீலையை கிழிச்சோ, அல்லது அத்தனை அடியாட்கள் உடையை  கிழிச்சோ கட்டி இருக்கலாம். அதை எல்லாம் விட்டுட்டு தன் பனியனையே ஹீரோ ஏன் கிழிச்சுக்கறார்? ஜிம் பாடியை காட்டவா?

13. ஹீரோயினை ராகிங்க் செய்யும் ஆள் ரொம்ப டீசண்ட்டா உங்க கையை பசங்க சீனியர்ஸ் தொட்டுட்டுவரச் சொன்னாங்க என சொல்லி ஹீரோயின் உள்ளங்கையை சும்மானாச்சுக்கி தொட்டுட்டுப்போறார். அதுக்கு ஏன் ஹீரோயின் கற்பே போன மாதிரி கூச்சல் போடறார்? டவுன் பஸ்ல போனதே இல்லையா? திருவிழாக்கூட்டத்தில் சிக்கினதே இல்லையா? கையை தொட்டதுக்கே இப்படின்னா...... அதே மாதிரி அந்த சீனில் பரத் காட்டும் ஜாக்கிசான்-ன் ரிவன்ஞ்ச் க்ளைமாக்ஸ் ரக ஆக்ரோசம் ஓவர் டோஸ். அட்லீஸ்ட் ஹுரோயின் இடுப்பில் கிள்ளுவது போல் காட்டி இருக்கலாம்.

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உங்களுக்குள்ள உருவான ஒரு கற்பனையை வேற ஒருத்தரால பார்க்க முடியாது, உணர முடியாது.

2. நேரங்கெட்ட நேரத்துல ஃபிகருக்கு ஃபோன் பண்றான். ஃபோனுக்கு மயக்க ஊசி தான் போடணும்.

3. கரண்ட் கட் ஆவதை விட கேபிள் கட் ஆகற டைம்தான் அதிகமா இருக்கு.

4. அய்யயோ, கதவுல பூட்டு இருக்கே? பின்னே? கதவுல பூட்டு இல்லாம ரேமாண்ட்ஸ் கோட்டா இருக்கும்?

5. அடேய், நான் கேபிள்காரன்டா, என்னமோ சிவாஜிகணேசன் கே.ஆர்.விஜயாவை உருட்டற மாதிரி என்னை உருட்டறே?

6. உங்ககிட்டே இந்த பச்சை மண்ணை ஒப்படைக்கிறேன், இதைவெச்சு நீங்க பானை செய்வீங்களோ, பன்னாடைசெய்வீங்களோ.

7. காக்கா வலிப்பு போல, அவர் கைல ஒரு சாவி குடுங்க. டேய், சாவி குடுக்க அவர் என்ன பொம்மையா?

8. அதெப்பிடிடா வெகுளீயா பார்த்து லவ் பண்றீங்க?

9. டேய், நான் இன்னும் 4 நாள்ல கனடா போகப்போறேன், எப்படிடா அவகிட்டே லவ்வை சொல்றது? நீ கனடா போறேன்னு சொன்னாலே போதும், தானா லவ் பண்ண்ணுவா  பாரு.

10. ஹீரோயின்-ஐ, நகத்தைக்கூட உன் கிட்டே மறைக்க முடியலை (கற்பனையை வளர்த்த வேணாம், இது ஒரு கவித்துவமான காட்சி)

11. உனக்கு சிக்கி இருக்கறவ ஜெனிலியா டைப்னு நினைச்சேன், அஞ்சலி பாப்பா டைப் போல.

12. என்னமோ பிளஸ்டூல அட்டெம்ப்ட்டே வைக்காத  மாதிரி பேசறே?

13. எனக்குவரப்போற புருஷன் யார்?னு உன்கிட்டே இருக்கும் பவரை  யூஸ் பண்ணி கண்டுபிடி பார்ப்போம்.

14, டேய், என் கிட்டே எவ்வளவு நம்பிக்கை இருந்தா அவளுக்கு வரப்போற மாப்ளை யாரா இருக்கும்னு என்கிட்டே கேட்பா? டேய், மேட்ரிமோனியல் போனா 5000  ரூபாய் செலவாகும். அதான் காரணம்.

15. வில்லன் - அவன் என்ன யோசிக்கனும்னு நான் தான் முடிவு பண்ணனும். அவனை எப்படி அலையனும், எங்கே அலையனும் அப்டிங்கறதையும் நாந்தான் முடிவு பண்ணுவேன் (சமர் டயலாக்)

16. எல்லாரும் வாழ்க்கைல எடுக்கும் முக்கியமான முடிவே தன் வாழ்க்கைத்துணை யார் அப்டிங்கறது தான்.

17. அவ கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலைடா, செத்துப்போயிடலாம் போல இருக்கு. கேள்விக்குப் பதில் தெரியாதவன்  எல்லாம் சாகனும்னா நாம எல்லாம் ஒண்னாங்கிளாஸ்லயே செத்திருக்கணும்

சி.பி.கமெண்ட் - காதலர்கள், சஸ்பென்ஸ் பட விரும்பிகள், ரொமாண்டிக் ஃபிலிம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். பரத், சசிக்கு ஒரு முக்கியமான படம்.வாசகர் கருத்து (21)

Sivasubramanian Ramachandran - Batlagundu,இந்தியா
04 செப், 2013 - 08:25 Report Abuse
Sivasubramanian Ramachandran சிறப்பான முயற்சி
Rate this:
B.MuthuNilavan - Sankarankovil-Tirunelveli,இந்தியா
24 ஆக, 2013 - 09:17 Report Abuse
B.MuthuNilavan படம் சுமார்
Rate this:
Antoo Ootna - kerala,இந்தியா
21 ஆக, 2013 - 09:17 Report Abuse
Antoo Ootna வளர்பவரை வாழ்த்துங்கள் சார் தூற்றாதீர்கள்
Rate this:
Antoo Ootna - kerala,இந்தியா
21 ஆக, 2013 - 09:16 Report Abuse
Antoo Ootna பரத் வாழ்த்துகள்
Rate this:
Antoo Ootna - kerala,இந்தியா
21 ஆக, 2013 - 09:15 Report Abuse
Antoo Ootna இந்த படம் 555 இல்லை 100 100 100
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in