Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

யா யா

யா யா,Ya Ya
  • யா யா
  • மிர்ச்சி சிவா
  • தன்ஷிகா
  • இயக்குனர்: ராஜசேகரன்
30 செப், 2013 - 13:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யா யா

  

தினமலர் விமர்சனம்


‘டைமிங்’ நடிகர்கள் ‘மிர்ச்சி’ சிவாவும் சந்தானமும் இணைந்து கலக்கி கலகலக்க வைத்து, களகளத்து, களைத்து, கலைந்து போயிருக்கும் படம்தான் ‘யா... யா...’

அதாகப்பட்டது, அம்மா ரேகா, ராமராஜன் ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு ராமராஜன் எனப்பெயர் சூட்டி அவரது முறைப்பெண் ‘காதல்’ சந்தியாவுக்கு கனகா எனப்பெயர் (நல்லவேளை ‘கரகாட்டக்காரன்’ கனகா எனப் பெயர் சூட்டவில்லை..) சூட்டி இவருக்கு அவர், அவருக்கு இவர் என வளர்த்து ஆளாக்குகின்றனர். ஆனால், ‘போனால் அரசு வேலைக்குத்தான் போவேன்..’ என்று வைராக்கியத்துடன் வேலை வெட்டி எதற்கும் போகாம அப்பா காசிலும் அடுத்தவங்க பணத்திலும் குவாட்டர், கட்டிங், சைடிஸ் என ஜபர்தஸ்துடன் வாழுகின்ற சிவா, தன் பெயரை தோனி என மாடர்னாக மாற்றிவைத்துக் கொண்டு கீதா-தன்ஷிகா பின் காதல் கத்திரிக்காய் என்று அலைகிறார்.

மற்றொரு பக்கம் சந்தானத்தின்  அப்பா ராஜ்கிரண் ரசிகர் என்பதால் அவருக்கு ராஜ்கிரண் எனப் பெயர்சூட்டி வளர்த்து ஆளாக்க, வெட்டி ஆபீசராக திரியும்‌ அவரும் ஷேவாக் என்னும் கிரிக்கெட் பிளேயர் மீதுள்ள அபிமானத்தில் பெயர் மாற்றத்துடன் தோனியின், அதாங்க ராமராஜன் என்னும் சிவாவின் நண்பராக அவருக்கு தன்ஷிகாவுடனான காதலுக்கு உதவுவதுபோல் சில சுயலாபங்களுக்காக உபத்திரவம் செய்கிறார். கூடவே, சிவாவின் மாமன் மகள் ‘காவலர்’ சந்தியாவை (‘காதல்’ சந்தியாவேதன் படத்தின் இவர் பெண் கான்ஸ்டபிள்...) ‘லவுஸ்’ வயப்படுகிறார். (நல்லவேளை ‘ராஜ்கிரண்’ சந்தானத்திற்கும் ராமராஜனின் முறைப்பெண் கனகா மாதிரி மீனா, சங்கீதா என இரண்டு அத்தை, மாமா மகள்கள் இல்லை..)! அப்புறம்? அப்புறமென்ன? சந்தானம் அவருக்கு பின்னால் இருக்கும் தேவதர்ஷினி உள்ளிட்டவர்களின் தடை பல கடந்து சிவா - தன்ஷிகாவின் காதல் கைகூடியதா? சந்தானம் - சந்தியாவின் திடீர் காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா?! என்பது க்ளைமாக்ஸ்!

‘மிர்ச்சி’ சிவா ராமராஜன் ‘அலைஸ்’ தோனியாக நிறைய பேசுகிறார். நிறைய குடிக்கிறார். கொஞ்சமாக காதலிக்கிறார். கொஞ்சம் கொஞ்சம் சந்தானம், சந்தியா, டாக்டர் சீனிவாசன், அப்பா இளவரசு, அம்மா ரேகா, உடன்பிறப்பு ஸ்டெபி உள்ளிட்டவர்களையும் சேர்த்து நம்மையும் கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். ஆங்காங்கே ‘கடி’க்கவும் செய்கிறார். இனியும் சிவா, இது மாதிரி கதைகளில் ‘காமெடி’, ‘கடி’ படங்களில் நடிப்பதைக் குறைத்து கதையம்சம் நிறைந்த படங்களில், பேச்சைக்குறைத்து நடிப்பது நலம் பயக்கும்!

சந்தானம் ராஜ்கிரண் ‘அலைஸ்’ ஷேவாக் ‘அலைஸ்’ சச்சினாக (அது ‌எப்போ?) பேசும் வசனங்கள் கண்டு தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. ‘புலிக்கு முன்னாலேயே போன மானும், பொண்ணுங்க பின்னாடி போன ஆணும் தப்பி பிழைத்ததா சரித்திரம் கிடையாது...’ என்னும் வசனத்தில் தொடங்கி, ‘புல்லா  தண்ணி அடிச்ச பசங்களைகூட நம்பிடலாம். ஆனா புள்ள பூச்சியாட்டம் இருக்கும் பொண்ணுங்களை நம்பமுடியாது என்பது வரை படத்திற்கு இருநூறு, முந்நூறு காமெடி ‘பன்ச்’ வசனங்களை எங்குதான் சந்தானம் கவ்வி பிடிக்கிறாரோ?! எல்லாமே காமெடி சரவெடி!

‘பவர் போன ஸ்டார்’ சீனிவாசன், தனுஷ், அஜீத், விஜய், கமல், ரஜினி கெட் அப்புல வந்து பயமுறுத்துகிறார். ரசிகர்கள் பாவம்!

தன்ஷிகாவின் கவர்ச்‌சி சந்தியாவின் நடிப்பு முதிர்ச்சி இரண்டும் படத்திற்கு பெரும்பலம். ரேகா, ஸ்டெபி, தேவதர்ஷினி, இளவரசு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.. அதில் சிவாவுக்கு ரூட்டு போட்டு சீனிவாசனை பிக்அப் பண்ணும் தேவதர்ஷினியின் ‘பல்’லும் சொல்லும்‌ திகிலூட்டுகின்றன என்றாலும் காம நெடியில்லா காமெடி!

விஜய் எபினேசரின் இனிய இசை, வெற்றியின் அழகிய ஒளிப்பதிவு என எல்லாம் இருந்தும் ஐ.ராஜசேகரின் எழுத்தும் இயக்கமும் வெறும் காமெடியை மட்டுமே நம்பி இருப்பது சற்றே திகட்டுகிறது!

மொத்தத்தில் ‘யா... யா...’ - ‘சும்மா ‘வாய்யா’ - சிரிச்சுட்டு ‘போய்யா’!’ என்னும் அளவிலேயே இருக்கிறது!

 

------------------------------------------------------------------------------------------------


நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



கோடம்பாக்க காமெடி சினிமா பார்முலாப்படி  ஹீரோ  ஒரு வெட்டாஃபீஸ், அவருக்கு ஒரு முறைப்பொண்ணு, முறைச்சிட்டு இருக்கற ஃபிரண்ட். ஹீரோயினை பார்க்கறாரு, பார்த்ததும் லவ், ஹீரோயின் ஹேண்ட் பேக்ல  தன் ஃபிரண்ட்டோட செல்போனை போட்டுட்டு வேணும்னே  ஃபிரண்டுக்கு  ஃபோன் பண்ற மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு (இதைப்பார்த்து யாரும் ட்ரை பண்ணாதீங்கய்யா, நிஜ வாழ்வுல சிம்மை கழட்டி வீசிட்டு ஃபோனை யூஸ் பண்ணிக்குவாங்க உதார் பார்ட்டிங்க பொண்ணுங்க)

ஒரு கம்பெனியோட 45 வயசு  கன்னி ஆண்ட்டிக்கு ஹீரோ மேல லவ். இண்டர்வ்யூவுக்கு வந்தவரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ண  பிளான் போடறாங்க. ஹீரோவின்  ஃபிரண்ட்டை விலைக்கு வாங்கிடறாங்க. ஹீரோவின் ஃபிரண்ட்  கருணா மாதிரி கூட இருந்துட்டே குழி பறிக்கறாரு. ஹீரோ, ஹீரோயின் காதல் எப்படி என்ன ஆச்சு என்பதை ரெண்டரை மணி நேரம்  சிரிக்க சிரிக்க  சொல்லி  இருக்காங்க.

படத்தின் ஹீரோ கம் வில்லன் சந்தானம்  தான். ஹீரோவின் காதலுக்கு ஆப்பு வெச்சு  தன் வாழ்க்கையை வளப்படுத்தும் கேரக்டர். சும்மா அசால்ட்டா  ஊதித்தள்ளிடறார். அவர் படம்  பூரா 55 ஜோக்ஸ்  சொல்றார். அதுல 12  ஜோக்ஸ்  ட்விட்டர்ல இருந்து சுட்டது. 8  ஜோக்ஸ் எஸ்.வி.சேகர் காமெடி டிராமாக்களில் அடிச்சது. 6 ஜோக்ஸ் ஏர்செல் கம்ப்பெனி எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ், மீதி  29  சொந்த சரக்கு.  எப்படியோ   சிரிப்பு வருது , அதான் முக்கியம் , சுட்டாரா? சுடலையா?ன்னு எந்த சுடலைமுத்தும் உக்காந்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க டைம் இல்லை.  இந்தப்படம் ஆல்ரெடி எகிறி இருக்கும் சந்தானத்தின் சம்பளத்தை இன்னும் உயர்த்தும் (இப்போ  ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் ரூபாயாம்)

படத்தின் 2வது  ஹீரோ சிவா.  டக் டக் என  டைமிங்க்  விட் அடிப்பதில் ஆள் கில்லாடி. கொஞ்சம் முகத்தில் பாவனைகள் கொண்டு வந்தால் தேவலை. சந்தானத்தினுடனான காம்பினேஷன் காட்சியில் டம்மியாகிறார், சில காட்சிகளில் தாக்குப்பிடிக்கறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவருக்கு எந்த வித பீலிங்கும் கை கொடுக்கவில்லை.

டாக்டர் சீனிவாசன் மூணாவது காமெடி. படத்தில்  இவருக்கு  பல காட்சிகளில் பல ஹீரோக்களை கிண்டல் பண்ணி டூயட் பாடும் வாய்ப்பு. அந்தக்காலத்தில் எஸ்.எஸ்.சந்திரன், எஸ்.வி.சேகர் ஆல்ரெடி எம் ஜி ஆர் படங்களை கிண்டல் செய்து இதே போல் அப்ளாஸ் அள்ளி இருக்கிறார்கள். ஆனால் இந்த டைப் காமெடி  ரொம்ப நாள்  நிலைக்காது. அழகே அழகே பாட்டுக்கு ( ஓக்கே ஓக்கே ) அவர் போடும் உதயநிதி ஸ்டெப் கலக்கல் ரகம். இவருக்கு  ஒரு அட்வைஸ், ஆல்ரெடி  நீங்களே சொன்ன மொக்கை காமெடியை ரிப்பீட் பண்ணாதீங்க.  போர்.

ஹீரோயின்   தன்ஷிகா. விஷால், அஜித் மாதிரி ஜைஜாண்டிக் ஹீரோக்களுடன்  ஜோடி சேர வேண்டியவர் காலத்தின் கட்டாயத்தால் சிவாவுடன்  ஜோடி சேர்கிறார். காதல் காட்சிகளில்  இன்னும் கெமிஸ்ட்ரி தேவை.  கலா மாஸ்டரிடம்  ட்யூஷன் போகவும். ஹீரோவுடன் நெருக்கமாக  இருக்கும் காட்சிகளில் காட்டாத நவரசத்தை சீனிவாசனுடனான டூயட்டில் காட்டுகிறார். சீனிவாசனுடன் இவர் வரும்  17 செகண்ட்ஸ் லோ கட்  ஷாட் செம ஹாட். தியேட்டரில்  விசில்.

காதல் சந்தியா, சந்தானத்துக்கு ஜோடி. ஹீரோயினை விட இவர் அழகாகத்தெரிவது ஆச்சரியம். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமா?  மேக்கப் விமன் பர்சனலா வெச்சிருக்காரா? தெரியலை, கலக்கல் பிரசண்ட்டேசன். சந்தானத்துடனான  முதல் இரவுக்காட்சிகள்  செம கிளு கிளு.

டி.வி., புகழ் தேவதர்ஷினிக்கு ஓல்டு லேடி கெட்டப்  அந்த  கல்யாண ராமன் பல் கெட்டப் எரிச்சல். மற்றபடி அவர் நடிப்பு செம கலக்கல், அவர் போர்ஷனை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம். சந்தானம், சிவா வின் தலையீட்டால் எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும் என அவதானிக்கிறேன். இளவரசு சிவாவுக்கு அப்பா  கேரக்டர் ,  பெரிய வாய்ப்பில்லை  என்றாலும் வந்தவரை  ஓக்கே

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படம்  முழுக்க  யாரையும் சிந்திக்க  விடாமல்  ஒவ்வொரு சீனுக்கும்  ஜோக்ஸ் மழையைத்தூவி விட்டுக்கொண்டே  திரைக்கதைப்பந்தலை அமைத்தது.  தியேட்டரில் ஆடியன்ஸ்   சிரிச்சுட்டே  இருக்காங்க.

2. படத்தில் வரும்  தன்ஷிகா, சந்தியா, ஸ்டெபி (சிவாவின் தங்கை)  என எல்லாருக்கும்  உடை அலங்காரங்கள் அருமை . மிக ஆடம்பரமாக அதே சமயத்தில் கண்ணியமான கண்ணைக்கவரும் டிசைன்களில  சுடி, மிடிகள் கலக்கல்.  ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு.
 
3. படத்தில் 3 பாடல்கள்  கேட்கும்படி  இருக்கின்றன. சீனிவாசனுக்கான காமெடி டூயட் செலக்‌ஷன் அருமை. அப்ளாஸ் அள்ளுது.


இயக்குநரிடம்  சில  கேள்விகள்


1. ஹீரோ பிளான் பண்ணித்தான்  ஹீரோயினின்  ஹேண்ட் பேக்கில் நண்பனின் செல்ஃபோனை போடறார்.  செல்ஃபோனை  ஹீரோயின் செக் பண்ணா கேலரியில் இமேஜஸில் சந்தானம், சிவா ஃபோட்டோஸ் இருக்கும் என இவருக்கு தெரியாதா? அதை எரெஸ் பண்ணிட்டு போட்டிருக்கலாமே?

2. ஓல்டு லேடி எம்.டி., யாக வரும் தேவதர்ஷினியின் கெட்டப்பை சந்தானம் யூத்தாக மாற்ற ஐடியா தருவது ஓக்கே, அது சிவாவை கவர, ஆனால் கூடவே வரும் அந்த எடுபுடிகள் 3 பேர் எதுக்கு? எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா? அவங்களுக்கும்  கெட்டப் மாத்துவது எல்லாம் ஓவர். அந்த  3 கேரக்டரும் தேவையே இல்லை. ஏகப்பட்ட கூட்டம்.

3. ஹீரோயினுக்கு, ஹீரோ மேல் எப்போ காதல் வந்ததுன்னு  மனம் தொடும்படி சொல்லவே இல்லை இயக்குநர். ஹீரோயின் எப்பவும்  ஒரே மாதிரி முகத்தை வெச்சிட்டு இருக்கார். (ஹீரோவும் அப்படித்தான் இருக்கார், ஆனால் அவர் சுபாவமே அபப்டி, ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வராது, ஆனால் ஹீரோயின் ஆல்ரெடி அரவானில் கலக்கியவர்தானே, ஏன் அவருக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை)

4. ஹீரோ, ஹீரோயினைப்பற்றி  உயர்வாகப்பேசுவது, அதை  ஹீரோயின் ஒளிஞ்சிருந்து கேட்பது எல்லாம்  கே பாக்யராஜ்ன் டார்லிங்க் டார்லிங்க் கால டெக்னிக்குகள் . இதெல்லாம்  இப்போ அவுட் ஆஃப் ஃபேஷன்.

5. போலீஸ் காண்ஸ்டபிளாக வரும்  சந்தியா  ஓப்பனிங்க் சீன்ல  ஒரு காமெடிக்காக போலீஸ் ஸ்டேஷன்ல  யூனிஃபார்ம்ல இருக்கார்  மீதி எல்லாக்காட்சிகளிலும் பகல் டைம்ல  ஹீரோயின் கூடவோ , சந்தானம்  கூடவோ சுத்திட்டு தான்  இருக்கார்.  வேலைக்கே போக மாட்டாரா?

6 .ஓல்டு லேடி எம்.டி. வேலை இல்லாத  சிவாவுக்கு தன் கம்ப்பெனியில்  வேலை  போட்டுக்குடுத்துட்டா இந்திர விழாவில் நமீதா ஸ்ரீகாந்த்தை கரெக்ட் பண்ணியது போல் ரொம்ப ஈசியா தன் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் சிவாவை “ வெச்சிருக்கலாமே? எதுக்கு அவர் நாக்கை சுத்தி மூக்கைத்தொடனும்?  சந்தானம் மாதிரி ஒரு ஆள் சப்போர்ட் எதுக்கு ? 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. நைட் 12 மணிக்கு மேல டாஸ்மாக்ல சரக்கு கூட ஈசியா கிடைக்குது. ஆனா கட்டிக்கப்போற பொண்ணு கிட்டே ஒரு கிஸ் கிடைக்க மாட்டேங்குது

2. நட்பும் காதலும் கொரியன் போன்ல இருக்கும் டூயல் சிம் மாதிரி. ஒரு சிம்க்கு கால் வரும்போது இன்னொரு சிம் வெய்ட்டிங்ல தான் இருக்கனும்

3. பியூச்சர்ல பி.எம் ஆகப்போற என்னை பியூன் வேலைக்குப்போகச்சொல்றாங்க. என்னது? அப்போ நீ பியூன் வேலைக்குப்போற அளவு படிச்சிருக்கியா?

4. போலீஸ் கான்ஸ்டபிளையே லவ் பண்ணுவியா? அழகா இருந்தா கான்ஸ்டபிள், எஸ்.ஐ., னு பார்க்க மாட்டோம்

5. எங்க ஏரியா பொண்ணுக்கு உன் பிரண்ட் ஏன் லெட்டர் குடுத்தான்?

6.  வருசமா எல்லாருக்கும் குடுத்துட்டு இருக்கான். ஏன்னா அவன் போஸ்ட்மேன் (எஸ்.வி.சேகர் டிராமா ஜோக் (வால் பையன்)

7. செல்லுல பேலன்ஸ் இல்லைன்னா லவ்வை பேலன்ஸ் பண்ண முடியாது

8. ஸாரி சொன்னா எல்லாம் சரி ஆகிடுமா? சந்தானம் - அப்போ ஆளுக்கு ஒரு செட் பூரி சொல்லட்டா?

9. பழகுன பொண்ணை புள்ளத்தாச்சி ஆக்கும் பசங்களைக்கூட நம்பிடலாம். ஆனா புள்ளப்பூச்சி மாதிரி இருக்கும் பொண்ணுங்களை நம்பக்கூடாது.

10. சிவா - எதுக்காக என் பிரண்ட்சை அடிச்சே? சந்தானம் - காசு கொடுத்தா நான் என் பிரென்ட்ஸையே அடிப்பேன் 

11. எப்பேர்ப்பட்ட ராஜாவா  இருந்தாலும் அவங்களை ஆண்டி ஆக்க இந்த பொண்ணுங்களால மட்டும் தான்  முடியும் 

12.  காதலியை எப்பவும்  தேவதையாப்பார்க்க ஆசைப்படுவோம், ஆனா அவங்க  நம்மை தேவதாசாப்பார்க்க ஆசைப்படுவாங்க (ட்விட்டரில் சுட்டது)

13. சந்தியா - வாவ் !!! சந்தானம் - யார் இங்கே இப்போ வாமிட் எடுத்தது ?

14. ஏய்  மிஸ்டர் . உனக்கு எப்படி கண் போச்சு ? பக்கத்து வீட்டுப்பொண்ணு குளிச்சுட்டு இருந்தது. அதை பார்த்தேன் கண்ணு போயிடுச்சு. அது எப்படி ? அந்தப்பொண்ணு தீக்குளிச்சுட்டு இருந்தது. என்னன்னு கிட்டே போய் பார்த்தேன், கண் அவுட் (எஸ்.வி.சேகரின் டி வி டிராமா வண்ணக்கோலங்கள்-ல் சுட்டது)

15. புலிக்கு முன்னால போன மானும், பொண்ணுங்க  பின்னால போன ஆணும்  உயிர்  பிழைச்சதா சரித்திரமே  இல்லை ( எஸ் எம் எஸ் ஜோக் , இது ஆல்ரெடி  ஒரு கல் ஒரு கண்ணாடில சந்தானமே சொல்லிட்டாரு )

சி பி கமெண்ட் -  ஏ செண்ட்டரில்  இது  ஹிட் ஆகிடும். இந்தப்படத்தை  விட அழுத்தமான கதை அம்சம், மேக்கிங்க் ஸ்டைல் பிரமாதமா  இருந்த 6 படத்துக்கு கூட்டமே இல்லை. இதுக்கு செம கூட்டம். படம் சர்வ சாதாரணமா 3 மடங்கு லாபம் சம்பாதிச்சு கொடுத்துடும். ஜாலியா கலகலன்னு ஒரு டைம் பாஸ் படம், எல்லாரும் பார்க்கலாம்.


-----------------------------------------------------------------

கல்கி விமர்சனம்

யா யா - டார்ச்சர்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in