தினமலர் விமர்சனம்
மன நலம் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்வோது வருவதுண்டு. குறிப்பாக சில படங்களில் கிளைமாக்ஸை முடித்து வைப்பதில் மனநலம் பாதிப்பு என்பதுதான் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனால், முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு சமீபகாலத்தில் எந்த படமும் வந்ததில்லை.
அறிமுக இயக்குனர் ருத்ரன், துணிச்சலான ஒரு கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, மனநல மருத்துவமனைகளில் மனநலம் சரியான பின்னரும் பலர் அங்கேயே கொடுமைப்படுத்துப்பட்டு வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், அது மட்டுமே ஒரு முழுநீளப்படத்திற்குரிய தகுதியாக அமையவில்லை என்பதுதான் உண்மை. ஒரு டாகுமென்டரி அளவில் மட்டுமே சிந்தித்துப் பார்க்கக் கூடிய ஒரு கதையை முழுநீளப் படமாகக் கொடுத்திருப்பது சுவாரசியத்தைத் தரவில்லை. இருந்தாலும், மனநல மருத்துவமனையில் நடப்பதாகச் சொல்லப்படும் கொடுமைகளைக் காட்டுவது கண்டிப்பாக கண்ணீரை வரவைத்து விடும். இரண்டு விஷயங்களுக்காக மட்டும் இயக்குனரைப் பாராட்டலாம். ஒன்று, மனநல மருத்துவமனையில் நடக்கும் கொடுமைகள் என அவர் காட்டியிருக்கும் யதார்த்தம், கிளைமாக்சில் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் கொடுத்து நெகிழ்ச்சியடைய வைத்திருக்கும் விதம், இவையிரண்டும் இயக்குனரைப் பாராட்ட வைக்கும் விஷயங்கள்.
அஜ்மல், மனோ, ஷெரீப் மூன்று பேரும் நண்பர்கள். ஊட்டியில் ஒரு கார் மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைக்குச் சேர்கிறார்கள். வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே அக்கம் பக்கத்தினர் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அஜ்மலின் நல்ல மனதைப் பார்த்து அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் வக்கீலான ராதிகா ஆப்தே. இதனிடையே ஒரு நிலச்சரிவில் நடந்த விபத்தில் இவர்கள் மூவரும் சிலரைக் காப்பாற்றுகிறார். அது பற்றி செய்திகள் பேப்பரிலும், டிவியிலும் வருகிறது. அதைப் பார்த்து காவல் துறையினர் அஜ்மல், மனோ, ஷெரீப் ஆகியோரைத் துரத்துகிறார்கள். அப்போது நடக்கும் விபத்தில் ஷெரீப் இறந்து போகிறார். அஜ்மல், மனோ இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள், அவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.
அஜ்மல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கும் படம். இடையில் 'கோ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனாலும், அந்தப் பெயரை அவர் தக்க வைக்காமல் போய்விட்டார். இந்த படத்தைப் பொறுத்தவரையில் அதிரடி, ஆக்ஷன் என்று எதுவும் இல்லாமல், நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறார். இவருடைய பிளாஷ் பேக் கண்ணீரை வரவைக்கும் ஒன்று. மனநல மருத்துவமனையில் அனைவருக்கும் உதவி செய்யும் நல்லவராக இருக்கிறார். கிளைமாக்சில் தன் நிலையைப் பற்றி சொல்லி அழும் காட்சியில் கண்ணீரை வரவைக்கிறார்.
ராதிகா ஆப்தே, பிரகாஷ் ராஜ் இயக்கிய 'தோனி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அழகான, களையான முகம். இப்படிப்பட்ட நாயகிகள் தமிழ் சினிமாவில் ஏன் அதிகப் படங்களில் நடிக்காமல் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. அஜ்மல் மீது காதல் கொண்டு, பின்னர் அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னும், அவர் மீது உண்மைக் காதலுடன் இருக்கிறார். இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் கூட உண்மைக் காதலுடன் பழகுகிறார்களா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். வக்கீலுக்குரிய மெச்சூரிட்டியுடன் இவர் கதாபாத்திரம் நடந்து கொள்கிறது. ஆனால், ஒரு முக்கியமான புலனாய்வை போலீசார் உதவி இல்லாமல் இவர் கண்டுபிடிப்பதெல்லாம் 'காதுல பூ' அல்ல 'காதுல மாலை'.
அஜ்மலின் நண்பர்களாக, பின்னணிப் பாடகர் மனோ மற்றும் ஷெரீப். பொதுவாக ஹீரோக்களின் நண்பர்கள் என்றாலே காதலுக்கு உதவி செய்வதும், நகைச்சுவை என்ற பெயரில் கண்டபடி கமெண்ட் அடிப்பதுமாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் உண்மையான நட்பைப் பார்க்க முடிகிறது.
அழகம் பெருமாள், தலைவாசல் விஜய் இவர்கள்தான் படத்தின் முக்கிய வில்லன்கள். ஆனால், அது தெரியாத அளவிற்கு அருமையான சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். கஞ்சா கருப்பு, சஞ்சனாவின் நகைச்சுவை ஆபாசத்தின் மிச்சம்.
மணிசர்மா ஒரு பாடலையாவது ரசிக்கும்படியாகக் கொடுத்திருக்கலாம். பின்னணி இசையும் சுமார்தான். ஊட்டியில் முதல் பாதி கதை நகர்ந்தாலும் கண்களுக்கு குளிர்ச்சி என்றெல்லாம் சொல்ல முடியாத ஒரு ஒளிப்பதிவு.
பிளாஷ்பேக்கில் மட்டும் உருக வைத்த இயக்குனர், மற்ற காட்சிகளிலும் நிறைய மெனக்கெட்டிருந்தால் இந்த 'வெற்றில் செல்வன்', உண்மையிலேயே நல்ல வெற்றியைப் பெற்றிருப்பார்.
------------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
வெளி நாடுகளில சில ஆபர் வருது. குறிப்பிட்ட மனித உடல் உறுப்புக்ளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிக்க ஆள் ரெடியா இருக்காங்க, வில்லன் அந்த டீலிங்க்ல இருக்கும்போது இன்னொரு டாக்டர் வந்து சேர்றார். 2 பேரும் சேர்ந்து எல்லா திருட்டு வேலையும் பண்றாங்க.
மன நலக்காப்பகத்தில் 15 வயசுப்பொண்ணு இருக்கு. அது மேல வில்லனுக்கு ஒரு கண். இந்த மேட்டர் காப்பக வார்டனுக்கு தெரிஞ்சு அதை ஹீரோ கிட்டே சொல்லி அந்தப்பொண்ணை காப்பாத்த சொல்றார். ஹீரோ காப்பாத்தப்போகும்போது ஆல்ரெடி அந்த டாக்டர் கொலை ஆகி இருக்கார். ஸ்பாட்லயே ஹீரோவை பிடிச்சிடறாங்க. அவர் தான் கொலையாளிங்கறாங்க. டாக்டரைக்கொன்னது யார்? என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் தான் இந்தப்படம்.
கோ பட வில்லன் அஜ்மல் தான் இதுல ஹீரோ. குறை சொல்லமுடியாத நடிப்பு. பல இடங்களில் பாஸ் மார்க் வாங்கிடறார்.
கர்லிங்க் ஹேர் கட்டழகி, அடர் புருவ இடர் அருவி அழகி ராதிகா ஆப்தே தான் நாயகி. பார்க்கும்போதே மனசில் பல இடர்பாடுகள் அருவி மாதிரி தோன்றுவதால் இடர் அழகினு பேரு (யார் வெச்சாங்க? நானே வெச்சுக்கிட்டேன்) டிரஸ்சிங்க் சென்ஸ் எல்லாம் பக்கா. க்ளோசப் ஷாட், லாங்க் ஷாட் எல்லாத்திலும் அழகு தான். நடிக்க எல்லாம் வாய்ப்பில்லை. கிரிமினல் லாயர்னு இவங்களா படத்தில் சொல்லிகாறாங்க. ஒரு சீனில் கூட இவர் கோர்ட்ல வாதாடவே இல்லை.
அழகம் பெருமாள் பிரமாதமான நடிப்பு. தலைவாசல் விஜய், வில்லன் ரோல் குட். அவர் கூட வரும் இன்னொரு டாக்டர் கூட பக்கா வில்லன் மாதிரியே தத்ரூபமா பண்ணி இருக்கார்.
ஹீரோவின் நண்பராக பாடகர் மனோவும், இன்னொரு வரும் வர்றாங்க. ஓக்கே, மனோவை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாம்.
பாடல்கள் மதன் கார்க்கி. பெயர் சொல்ல 2 பாட்டு நல்லா வந்திருக்கு. இசை அழகன் புகழ் மரகத மணி. பின்னணி இசைல காதை பதம் பார்க்கறார். பின் பாதி திரைக்கதையில் பி.ஜி.எம் தன் வேலையை செவ்வனே செய்கிறது.
சி.பி.கமெண்ட் : வெற்றிச்செல்வன் = மனநலக்காப்பக முறைகேடுகளின் பின்னணியில் ஒரு க்ரைம் த்ரில்லர்.