தினமலர் விமர்சனம்
சில்லுன்னு ஒரு காதலை முதல் படமாக தந்த கிருஷ்ணாவின் இயக்கத்தில், அடுத்து விலாவாரியாக வெளிவந்திருக்கிறது நம்மூர் இருட்டு நெடுஞ்சாலைகளும், அதன் திருட்டு மறுபக்கங்களும்...! அதிலும், திருடனுக்கும், போலீஸ்க்கும் உள்ள கூட்டு களவாணித்தனம், அதேநேரம் ஒரு அழகான பெண்ணால் அவர்களுக்குள் எழும் ஈகோ மோதல், காதல், காமம், காமெடி என சகலத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து அதகளம் செய்திருக்கின்றனர், செய்திருக்கின்றன.., ஹீரோ ஆரி, ஹீரோயின் ஷிவதா, போலீஸ் வில்லன், காமெடி முதலாளி உள்ளிட்டோரும், அவர்களின் நடிப்பும், ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் கலர்புல் ஆர்ட்ஸ், செட்ஸ், பன்ச் வசனங்கள் இல்லை என்றாலும் சிரித்து, சிரித்து நம் வயிற்றை பஞ்சர் செய்யும் வசனங்களுடன் நம்மை கதையோடு ஒன்றவிடும் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், இருட்டை மணிரத்னம் படங்களைக்காட்டிலும் அழகாக படம்பிடித்திருக்கும் ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு, எங்கேயும் எப்போதும் சத்யாவின் இதயத்தை வருடும் இதமான இசை உள்ளிட்ட ப்ளஸ், ப்ளஸ், கூடுதல் ப்ளஸ் சமாச்சாரங்கள்!
கதையென்னவோ., நெடுஞ்சாலையில் ஓடும் சரக்கு லாரிகளில், ஓட்டப்பந்தய வீரனாட்டம் ஓடி, தாவி, ஏறி தார்ப்பாயை பிரித்து, தட்டுப்படும் பொருட்களை எல்லாம் விட்டு வைக்காமல், அந்த லாரியின் பின்னாலேயே வரும் தங்கள் சகாக்களின் வண்டியில் ஏற்றி, தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை வாழ வைக்கும் திருட்டு ஹீரோவின் காவல்துறையினருடனான கொடுக்கல், வாங்கல், முட்டல், மோதல் மற்றும் தாபா கடை கதாநாயகி உடனான காதல், புரிதல், கொடுக்கல், வாங்கல், இத்யாதி, இத்யாதி... சமாச்சாரங்கள் தான் என்றாலும், அதை இதயத்தை உருக்கும் விதமாகவும், உறைய வைக்கும்விதமாகவும், சொல்லியிருக்கும் பதத்தில் தான் நெடுஞ்சாலை ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறது.
ஆகமொத்தத்தில், நெடுஞ்சாலைக்கொள்ளை., ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்வதோடு, தயாரிப்பாளர்களுக்கும், இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும் கொள்ளை லாபத்தையும் தர இருக்கிறது என்றால் மிகையல்ல!
------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
01. நெடுஞ்சாலை
கண்மூடித் திறக்கும் நேரத்தில் மதுரை பகுதியில் லாரிகளில் சாகசக் கொள்ளை நடத்தி, போலீஸாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய தார்ப்பாய் முருகனின் பெயரையும் களத்தையும் உபயோகப்படுத்திக் கொண்டு "சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா சூடாக ஒரு படம் தந்திருக்கிறார்.
லாரிக் கொள்ளைக்காரன் ஆரிக்கும், சாலையோர தாபா வைத்திருக்கும் அவனது காதலி ஷிவிதாவுக்கும் எதற்கும் துணிந்த ஒரு போலீஸ் அதிகாரி குறி வைக்க அப்புறம் என்ன ஆச்சு? என்பதுதான் நெடுஞ்சாலை.
எப்போதும் முறைப்புடன் இருக்கும் ஆரி ரொம்ப பொருத்தம்.
ஷிவிதா ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார். ஒரு தாவணியாவது போட்டுக் கொள்ளக் கூடாதோ? காதலன் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக உடையை அவிழ்த்துப் போட்டு நிற்பது ச்சே மச்!
பணத்துக்காக எதையும் செய்யும் அந்த சலீம் குமாரும், அதே பாலிஸியில் இருக்கும் பிரசாந்த் நாராயணனும் நச்! அத்தனை ஆட்டம் போடும் அதிகாரியின் திடீர் மரணம் எதிர்பாராத திருப்பம்.
லாரியில் வரும் அந்தக் கிழவர் யார் என்பது புரிவதற்குள் மண்டை காய்ந்து போகிறது.
நெடுஞ்சாலை - வளைவுகள் ஜாக்கிரதை!
குமுதம் ரேட்டிங் - ஓகே
-------------------------------------------------------------
கல்கி - சினி விமர்சனம்
தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத "ஹைவேஸ் ராபரிதான் பின்னணி. நடுநடுங்க வைக்கும் வேகத்தில் நெடுஞ்சாலையில் அரை இருளில் நடக்கும் அந்தக் கொள்ளைக் காட்சிகள் எடுத்த எடுப்பில் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. நெடுஞ்சாலைக் கொள்ளையில் கைதேர்ந்த தார்ப்பாய் முருகன், அவனது கூட்டாளிகள், கொள்ளைப் பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் முதலாளி, நெடுஞ்சாலை கொள்ளையைத் தூண்டி ஆதாயம் காணும் இன்ஸ்பெக்டர் மாசானமுத்து, நெடுஞ்சாலையில் தில்லி தாபா நடத்தும் மங்கா ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது, இல்லை இல்லை ஓடுகிறது வேகமாக.
ஃப்ளாஷ்பேக் காட்சியாக விரியும் தார்ப்பாய் முருகனின் கதைக்குள் இன்னொரு ஃப்ளாஷ்பேக்காக அவனது குழந்தைப் பருவம். வளர்த்த தந்தை இறந்த பிறகு கருவுடன் இணைந்து நெடுஞ்சாலை கொள்ளையில் ஈடுபடும் முருகனுக்கு முதல் சந்திப்பிலேயே எதிரியாகி விடுகிறான் இன்ஸ்பெக்டர் மாசானம். அந்தப் பகையை மேலும் எரிய வைக்கிறது மங்காவின் வரவு. எப்படியாவது இன்ஸ்பெக்டரை சரிகட்டி தொடர்ந்து தொழில் செய்ய நினைக்கும் முருகனின் முதலாளி, இவர்கள் இருவருக்குமிடையே மாட்டிக் கொண்டு விலாங்கு மீனைப் போல நழுவுகிறார்.
ஆரம்பத்தில் எதிர்ரெதிர் துருவங்களாகச் சீரும் முருகனும், மங்காவும் காதல் அரும்பும் காட்சி கவிதை. தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் தன்னைப் பயன்படுத்தி ஆதாயம் காண்பதை உணரும் முருகன், மங்காவின் தன்னலமற்ற அன்பைப் புரிந்து கொள்ளும் காட்சி இன்னொரு கவிதை. படம் முழுவதும் மிக வலிமையான வசனங்கள், திரைக்கதையை அழகூட்டுகிறது.
ஆக்ஷன் படங்களில் கதாநாயகிகள் எப்போதும் டூயட் மட்டும் பாடிவிட்டு ஒதுங்கி நின்று அழும் வகையறாக்களாகச் சித்திரிக்கப்படும் நிலையில் மங்கா பாத்திரம் மாறுபட்ட படைப்பு. அத்தனை தன்னம்பிக்கை, சுயமரியாதை, திடமான கொள்கைகளுடன், வியாபாரத்துக்காக தில்லுமுல்லு செய்யும் ஒரு பெண் பாத்திரம்.
தார்ப்பாய் முருகனாக ஆரி, விக்ரமை நினைவு படுத்துகிறார். மங்காவாக ஷிவதா நாயர் அஞ்சலியின் இடத்தை முதல் படத்திலேயே எட்டிவிட்டார். தமிழுக்கு ஒரு நல்ல வரவு. முதலாளியாக மலையாள நடிகர் சசிவதா, மாஸ்டராக தம்பி ராமையா என்று நிஜமான பாத்திரங்களாகவே நம் மனத்தில் பதிகிறார்கள். இன்ஸ்பெக்டராக அறிமுகமாகியிருக்கும் பிரஷாந்த் நாராயணன் பேசும் பாணி அப்படியே ரஜினி.
பெயர்ப் பலகையில் பழைய தமிழ், ஓடும் லாரியிலிருந்து நாலரை கோடியைக் கொள்ளையடிக்கும் போது பழைய ஆயிரம் ரூபாய்த்தாள் என நம்மை அசரவைக்கிறார் இயக்குநர். இசை சத்யா. பின்னணி இசையில் நம்மை நெடுஞ்சாலையிலேயே பயணப்பட வைக்கிறார். கொள்ளைக் காட்சியில் ஒளிப்பதிவு பிரமாதம். ஒளிப்பதிவாளர் ராஜ்வேல் ஒளிவண்ணன் காட்சிக்கு மெருகூட்டியிருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களம் என்றாலும் பழக்கப்பட்ட பாணியில் செல்கிறது திரைக்கதை; இருப்பினும் அதிரவைக்கும் பயணத்துக்கு உத்தரவாதம் இந்த நெடுஞ்சாலை.
நெடுஞ்சாலை: புதிய பயணம்!
- நர்மதா குப்புசாமி