தினமலர் விமர்சனம் » உருமி
தினமலர் விமர்சனம்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்திருக்கும் சரித்திரப்படம் தான் "உருமி!"
கதைப்படி கடல் விஞ்ஞானம், கடல்பிரயாணம், கடல் வாணிபம் என உலகம் முழுக்க கப்பலில் சுற்றி, பல நாடுகளை கண்டறிந்த வாஸ்கோடகாமா, இந்தியாவை இங்கிலாந்துகாரர்கள் அடிமைப்படுத்தி ஆள்வதற்கு முன்பாகவே கண்டுபிடித்து கால்பதித்து, கடல் வணிகம், மிளகு ஏற்றுமதி எனும் பெயரில் கேரள குறுநில மன்னர்களை அடிமைப்படுத்தி, தன் ராஜாங்கத்தை கட்டவிழ்த்து விட்ட கதையோடு, சில கற்பனை கதைகளையும் கலந்து கட்டி உள்ளே சேர்த்து உலவவிட்டு "உருமி"யை உரும செய்து, உறுதிப்பட தென் இந்தியர்களின் வீரத்தையும், ஈரத்தையும் பிரம்மாண்டமாக பறைசாற்றியிருப்பதில் ஈர்க்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் சந்தோஷ் சிவன்.
இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் இயக்குநரின் கதையையும், கற்பனையையும் ஒருசேர புரிந்து கொண்டு பிரபுதேவா, ஆர்யா, ப்ருதிவிராஜ், அலெக்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமின்றி ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் கதை நடைபெறும் காலத்து பாத்திரங்களாகவே பளிச்சிட்டிருக்கின்றனர்.
சந்தோஷ் சிவனின் காமிராவில் மேற்கண்ட நட்சத்திரங்கள் மட்டுமல்ல, செயற்கையான செட்டுகள், இயற்கை எழில் கொஞ்சும் வளங்கள், போர்முனைக்கு வரும் குதிரைகள், யானைகள், வெள்ளைக்காரர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டடுகள் உள்ளிட்ட எல்லாமும், எல்லோரும் பிரமாதமாக பிரம்மாண்டமாக பளிச்சிட்டிருக்கின்றனர், பளிச்சிட்டிருக்கின்றன... என்றால் மிகையல்ல!
வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு தீபக் தேவ்வின் இசை பாடல்களில் மட்டுமின்றி பின்னணியிலும் பிய்த்து பெடலெடுத்து விடுகிறது பேஷ், பேஷ்! ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அனல் அரசுவின் சண்டைபயிற்சி உள்ளிட்டவைகளும் படத்தின் பெரிய பலம்!
ஒவ்வொரு காட்சியையும் உயிரைக் கொடுத்து படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் சிவனுக்கு எத்தனை சபாஷ்கள் சொன்னாலும், எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அது சாதாரணமானது!
மொத்தத்தில் "உருமி" - "பெருமி(தம்)!"
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
“போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா 1498-ல் கோழிக்கோடுக்கு வந்தார்.’ பல தலைமுறைகளாகப் படித்து அலுத்துப் போன இந்தச் செய்தியின் பின்னால் உள்ள ரத்தச் சரித்திரத்தை பாடப்புத்தகங்களில் இன்றுவரை நாம் பார்க்கவே முடியாது. திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சம்பவத்தை ஹாலிவுட் பாணியில் ஒரு ஆக்ஷன் கதையாகத் தர நம்மவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.
வெறும் பயணிகளாக வந்த போர்த்துக்கீசியக் கூட்டம் கேரளாவில் செய்த அட்டூழியங்களும், அதற்கு விலை போன குட்டி ராஜாக்களும், சொரணையுள்ள சிலர் தாய் மண்ணைக் காப்பாற்ற நடத்திய போராட்டங்களும்தான் “உருமி’.
போர்த்துக் கீசியர்களைப் பழிவாங்கத் துடிக்கும் போர்த்தளபதி கேளு கேரக்டருக்காக பிருத்விராஜ் உடம்பையும் நடிப்பையும் உரமேற்றியிருக்கிறார். ஒரே சுழற்றலில் பாம்பாய் சீறும் சுருள்வாளான உருமியோடு பிருத்வி செய்யும் சண்டைகள் “இதுதாண்டா ஆக்ஷன்’ என்று சவால் விடுகின்றன.
காமெடி பஞ்ச்சுகளும் காதல் குறும்புகளுமாக பிரபுதேவாவை திரையில் பார்த்து எவ்வளவு நாளாச்சு? இமேஜ் பார்க்காமல் அலட்டாத நடிப்பால் படம் முழுக்கு அப்ளாஸை அள்ளுகிறார்.
ஆர்யா சில காட்சிகளில் மட்டும் வந்தாலும், அமர்க்களம்! போர்த்துக்கீசியர்களிடம் சிக்கியுள்ள பெண்களை மீட்க தூதுவனாக, ஆர்யா தன் சின்னஞ்சிறு மகனைத் துணிந்து அனுப்பும் காட்சி சாகசம். லூசுத்தனமான காதலி கேரக்டர்களிலேயே வந்துபோகும் ஜெனிலியாவா இது? தரையிலிருந்து தாவி, காற்றைக் கிழித்து, வாளைச் சுழற்றும் சண்டைகளுக்காக ஒரு ஹீரோவுக்குச் சமமாக உழைத்திருக்கிறார்.
கேரள நாட்டிளம் பெண்களுக்கே உரிய அம்சங்கள் பளிச்சிட வரும் நித்யா மேனன் சிரக்கல் இளவரசி கேரக்டரில் மனசைக் கவர்கிறார்.
பெண்மைத்தனம் கலந்த அமைச்சராக வரும் ஜெகதி, அப்பாவி இளவரசனாக வரும் அந்த இளைஞன், சிரக்கல் ராஜாவாக நடித்துள்ள அமோல் குப்தே, வாஸ்கோடகாமாவாக வரும் முதியவர், அவரின் மகனான ஜூனியர் காமா போன்றோரும் கலக்கியிருக்கிறார்கள்.
கடவுளின் சொந்ததேசம் என்ற கேரளாவுக்கே உரிய பெருமையை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வைக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்த்துகிறது. போர்த்துக்கீசியர்களுக்கான எதிர்ப்பாக தூக்குமரத்தை ஊர்மக்கள் வெட்டிச் சாய்க்கும் காட்சி நச். தீபக் தேவின் பின்னணி இசை உருமிக்கு பலம். “உரை நீக்கிய வாளோ’ பாடல் கம்பீரமான காதலுக்குச் சரியான தேர்வு.
ஒரே பிரச்னையை கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் பொருத்தி, விவரமாகக் கோர்த்திருக்கிறார் திரைக்கதையாசிரியர் சங்கர் ராமகிருஷ்ணன். கதை நிகழும் இடங்களில் வருடக்கணக்காக வாழ்ந்தது போன்ற அனுபவத் தெளிவும், விஷயச் செறிவும் சசிகுமாரனின் வசனங்களில் தெறிக்கிறது. ஆர்ட் டைரக்டரும் ஸ்டண்ட் டைரக்டரும் “உருமி’க்குக் கொடுத்திருப்பது பிரமிக்க வைக்கிற உழைப்பு.
வித்யா பாலன், தபு என் அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களை பார்க்கும்போது ஏதோ திரைப்படவிழா வீடியோவைப் பார்க்கும் உணர்வு. ஏகப்பட்ட ராஜாக்கள் தலா ஒரு கிளைக்கதையோடு வர, “இவர் யார், அவர் யார்?’ என நமக்கு குழப்பங்கள்.
இயக்குநர் சந்தோஷ் சிவன் சிலிர்க்க வைக்கும் ஒரு சரித்திரக் கதையைச் சொன்னதோடு நின்றுவிடாமல், சுயநலமான கார்ப்பரேட் கம்பெனிகளை நோக்கி வாளைச் சுழற்றி, இன்றைக்கும் வெள்ளைக்காரன் நம்மைத் துரத்துவதை உணர்த்தியிருப்பது அருமை. தொழில்நுட்ப நேர்த்தியும் சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறமையையும் நிஜமான சமூக அக்கறையும் ஒன்று சேர்த்தால், அது எந்தளவுக்கு வலிமையும் வசீகரமும் கொண்டிருக்கும் என்பதற்கு “உருமி’ சாட்சி.
“உருமி’ - சினிமாவுக்கு மரியாதை!
குமுதம் ரேட்டிங் - நன்று