தினமலர் விமர்சனம்
பல வருடங்களுக்கு முன் விஜயசாந்திக்கு ஆக்ஷன் ராணி பட்டம் பெற்றுத் தந்த படம் வைஜயந்தி ஐபிஎஸ். அதே படத்தை ரீ-மேக் செய்து புன்னகை இளவரசி சினேகாவை ஆக்ஷன் இளவரசி ஆக்கி இருக்கின்றனர் பவானி படத்தில் என்பதுதான் ஹைலைட்.
ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு டிரான்ஸ்பர் ஆகும் நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி சினேகா. அவருக்கு தொல்லை தரும் பொலிட்டிக்கல் தாதா கோட்டா சீனிவாசராவ். காவல், சட்டம், அமைச்சர், அரசியல் என சகலத்தையும் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என கொடிகட்டி பறக்கும் கோட்டாவின் கோட்டையை சீன்சியர் போலீஸ் ஆபீசரான சினேகா எப்படி தகர்க்கிறார்? அதற்காக பதவி உள்ளிட்ட எதையெல்லாம் இழக்கிறார்? என்பதுதான் பவானி படத்தின் மொத்த கதையும்!
ஐ.பி.எஸ். ஆபீசர் பவானியாக சினேகா ஆக்ஷனில் தூள் பரத்தியிருக்கிறார் என்றாலும், சினேகாவின் மென்மையான உடம்பும், புன்னகை முகமும் ஆக்ஷனில் விஜயசாந்தியை பண்ண விடாமல் தடுத்து விடுகின்றன. பாவம்! ஆனாலும் சினேகாவின் முறைப்பும், விரைப்பும் விணாகாமல் ஆக்ஷன் ராணி பட்டத்தை விஜயசாந்தியிடம் இருந்து தட்டிப்பறிக்க விடவில்லையே ஒழிய, ஆக்ஷன் இளவரசி என்ற பட்டத்தை பெற்றுத் தந்துள்ளதென்றால் மிகையல்ல!
படத்தில் வில்லன், ஹீரோ எல்லாம் அரசியல் தாதா கோட்டா சீனிவாசராவ் தான். மனிதர் என்னமாய் அசத்தியிருக்கிறார். வாவச! முள்ளைமலர் மேனி ரீ-மிக்ஸ் பாடலில் இவர் காட்டும் முகபாவங்கள், மேனரிஸங்கள்... கோட்டாவை வில்லனாக மட்டுமல்ல... ஹீரோவாகவும் தூக்கி நிறுத்துகின்றன என்றே சொல்ல வேண்டும். அத்தனை வயதிலும் எத்தனை நடிப்பு இந்த ஆந்திர பார்ட்டிக்கு?! அமைச்சர் ஜி.ஆர்., இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், வக்கீல் ராஜ்கபூர் என எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் மனிதர்! விவேகமான நடிகரின் காமெடி - கடி! இதுதான் படத்தின் பெரும் பலவீனம்!
தினாவின் இசையும், எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவும், ஜி.கிச்சாவின் இயக்கத்தில் ஏற்கனவே பார்த்த கதை என்றாலும், பவானியை புதிதாக காட்ட முயற்சித்திருக்கின்றன.
ஆக மொத்தத்தில் பவானி - பரவாயில்லை நீ எனலாம்!
----------------------------
குமுதம் விமர்சனம்
தெலுங்குலயும், தமிழ்லயும் சக்கைப்போடு போட்ட வைஜெயந்தி ஐ.பி.எஸ்.ஸை இப்போ ரீமேக் பண்ணா எப்படி இருக்கும்? இயக்குநர் கிச்சாவுக்கு வந்த இந்த யோசனை தப்பு இல்லை. கூடவே, இதுதாண்டா போலீஸ், பூ ஒன்று புயலானது, அப்புறம் கொஞ்சம் சொந்தச் சரக்கு என சரமாரியாய் மிக்ஸியில் போட்டு அடித்ததுதான் பவானியை பரிதாப ஜீவன் ஆக்கிவிட்டது.
போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷனர் பவானியாக சினேகா. புன்னகை அரசி ரௌத்ரம் பழக முடிந்தவரை முயன்றிருக்கிறார். ஆனால்... போலீஸ் கேரக்டருக்கு சினேகாவை அடிக்கடி ரோப்பில் கட்டித் தூக்கி, ஃபைட் பண்ண வைத்தாலே போதும் என்று இயக்குநர் முடிவெடுத்துட்டாரே?
திருநெல்வேலிக்கு மிடுக்காக வந்திறங்கும் பவானி படம் முழுக்க பாடுவது அழுவாச்சி காவியம்தான்.
என்ன செய்வது என தடுமாறுகிற பிரச்னைக்கு வில்லன்களும் விதிவிலக்கு அல்ல. பாவம், உச்சகட்ட கொடூரங்கள் மூலம் அறிமுகம் ஆகிவிட்டாலும், வில்லன் ஸ்டேட்டஸை தக்க வைக்க ஏதேனும் பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
நெஞ்சை நிமிர்த்தி தவறுகளைத் தட்டிக் கேட்கிற முன்னாள் போலீஸாக வருகிற சம்பத் கேரக்டரிலும் குழப்பம்தான். பொது ஜனத்தின் ஆர்வக்கோளாறால் அடிவாங்கும் ஏட்டாக விவேக். டீக்கடை பஜ்ஜியிலிருந்து எண்ணெய் எடுக்கிற விவகாரத்தை விவேக் விடவே மாட்டாரா?
நீதிமன்றம், பொறியியல் கல்லூரி, காவல் நிலையம் உள்பட இந்த போலீஸ் கதை நிகழும் எந்தக் களத்திலும் லாஜிக் இல்லை. அடிக்கடி காட்டப்படும் நீதிமன்ற வாசலில் "பிரின்சிபல் கோர்ட் என்பதற்கு பதிலாக "பிரின்சிபிள் கோர்ட் என்ற எழுதப்பட்டுள்ளதையாவது இயக்குநர் கிச்சா கவனித்திருக்கலாம்.
படத்தில் இறுதியில் பரவை முனியம்மாவின் குரலில் ரிபீட் ஆகிற "ங்கொக்கா மக்கா இத்தனையையும் பொறுத்துக் கொண்ட ரசிகர்களுக்கான மெசேஜ்?
பவானி : அப்பிராணி. குமுதம் ரேட்டிங் : சுமார்.
----------------------------
கல்கி விமர்சனம்
புன்னகை இளவரசி சினேகா, புல்லட் ராணி அவதாரம் எடுத்திருக்கும் படம் "பவானி ஐ.பி.எஸ். தமிழிலும், தெலுங்கிலும் ஏற்கெனவே "ஹிட்ரிக் அடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ்.ஸின் ரீ-மேக் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு.
அரசியல் கட்டப்பஞ்சாயத்து தாதா கோட்டா சீனிவாச ராவை, எதிர்த்து வேட்டைப் புலியாகப் பாயும் சினேகா ஐ.பி.எஸ்.ஸின் முகத்தில் போலீசுக்கான இறுக்கம். எனினும், கோட்டாவின் நடிப்புக் கோட்டையை, சினேகா சிறிதும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே மரத்தைச் சுற்றிவரும் டூயட் பாடியவருக்கு, துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஓடியிருப்பது சிரமமாகத்தான் இருந்திருக்குமோ?
நேர்மையான காவலதிகாரியான சம்பத்தின் முடிவு அந்தோ பரிதாபம். அது சரி... அவரது கேரக்டரில் ஏன் முன்னுக்குப் பின் குழப்பம்! அரைச்ச மாவை அரைத்துத் துவைத்த துணியைத் துவைத்திருக்கும் விவேக்கின் காமெடியில் வீச்சு கம்மி. குத்துப்பாட்டு புகழ் தினாவின் இசை ரண களத்தில் "முல்லை மலர் மேலே பாடல் காதுக்கு இதம்!
ஏராளமான போலீஸ் ஜீப், அசந்தால் பார்வையாளர்கள் மீது ஏறிவிடுமோ என்று அச்சப்பட வைக்கிறது; ஆளாளுக்குத் துப்பாக்கி என்பதெல்லாம் ஆந்திரா ஸ்டைல், கல்லூரியிலேயே பாலியல் பலாத்காரம் எல்லாம் ஏகத்திலும் காரம்; எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவில் போலீஸ் ஜீப் டயரின் தடம் துல்லியமாகப் பதிவாகி இருப்பதுவரை துல்லியம்!
ஆந்திரா காரத்தில் கோடம்பாக்கம் கொத்துப் பரோட்டாவைக் கலக்கிக் கொடுத்திருக்கும் இயக்குநர் ஜி.கிச்சா, லாஜிக் மீறாமல் மேஜிக் செய்திருக்கலாம். ஆனால், ஏனோ தெரியவில்லை, அவரும் செய்யவில்லை.