தினமலர் விமர்சனம்
வழக்கமான காதல், கண்ணாமூச்சி கதைதான் பதினாறு. ஆனால் அதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் விதம்தான் தொன்னுற்று ஆறையும் ரசிக்க வைத்திருக்கிறது என்றால் மிகையல்ல!
சிவாவும், மதுசாலினியும் கல்லூரி காதல் ஜோடி! மதுவின் வசதியான தந்தை அபிஷேக்கும், அவரது மனைவியும் இந்த காதலுக்கு எல்லா வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க, மதுவோ ஏழை இளைஞனான சிவாவை விடாமல் காதலிக்கிறார். அவர்களது காதலை பிரிக்க கடைசி அஸ்திரமாக பதினாறு எனும் நாவலை படிக்க கொடுக்கிறார் அபிஷேக்கின் மனைவி. காதல் நாவலான பதினாறு, அதன் பின் திரையில் ஓட., அதில் கிராமத்து வசதியற்ற மாணவனுக்கும், வசதியான பள்ளி மாணவிக்குமிடையேயான காதல், கைகூடாமல் போன கதை சொல்லப் பட்டிருக்கிறது. அந்த கதையை படித்த பின்பும் மனம் மாறாத சிவா, அந்த கதையில் இடம்பெற்ற பாத்திரங்களைத் தேடிப் புறப்படுகிறார். அவ்வாறு புறப்பட்ட சிவாவிற்கு கிடைத்த விடை என்ன? எத்தனையோ காதல் கதைகள் இருந்தும் பதினாறு கதையை அபிஷேக்கின் மனைவி மதுசாலினி - சிவா ஜோடியிடம் கொடுக்க காரணம் என்ன? சிவா - மது காதல் கடைசியில் கைகூடியாதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இனிமையாகவும், இளமையாகவும் விடையளிக்கிறது பதினாறு படத்தின் மீதிக்கதை!
சென்னை 29, தமிழ்ப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகரா இது? எனக் கேட்கும் அளவுக்கு வித்தியாசமாக நடித்திருக்கிறார் சிவா. ஆங்காங்கே அவருக்கே உரித்தான நையாண்டித்தனமும், நக்கலும் வெளிப்பட்டாலும் படத்தின் இயல்பு மாறாமல் நகரத்து காதலராக நச்சென்று நடித்திருக்கிறார் மனிதர். பேஷ்..! பேஷ்..!!
சிவாவை விட, சின்ன வயது அபிஷேக்காக கிராமத்து காதலர் கிஷோருக்கு நடிக்க நிறையவே வாய்ப்பு. அத்தனை வாய்ப்புகளையும் அழகாக பூர்த்தி செய்து ஜொலித்திருக்கிறார் புதுமுகம் கிஷோரும். சில இடங்களில் சிவா - மதுவின் கிராமத்து காதலைவிட, பதினாறு கதையாக சொல்லப்படும் கிஷோர் - வினிதாவின் கிராமத்து காதல் ரசிகர்களை உருக்கி எடுத்து விடுகிறது என்றால் அது பொய்யல்ல!
சிவா - கிஷோர் மாதிரியேல நகரத்து காதலி மது, ிராமத்து காதலி வினிதா இருவரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு! அதிலும் புதுமுகம் வினிதா பிரமாதம்! அப்பா விட்ட சவாலுக்கு பதிலடியாக கோவிலுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டு உடுத்தியிருக்கும் துணிமணிகளை அவிழ்த்து எறிந்து விட்டு, கோபி நீ உழைச்சி ஒரு முழம் துணியாவது வாங்கி வா... எனும் இடத்தில் நம்மை அதிர வைப்பதோடு, இவர்களது காதல் எப்படியாவது சேர்ந்து விடாதா...? என அழவும் வைப்பது வினிதாவின் நடிப்பிற்கு கிடைத்த வெமாணமாகும்.
சின்ன வயதில் கிஷோராகவும், பெரிய வயதில் அபிஷேக்காகவும் வரும் கோபால கிருஷ்ணன் கதாபாத்திரம் நச் என்றால் இளவரசி - கோபி என முதல் ஆங்கி எழுத்துக்களைச் சேர்ந்து 16 என காடு மேடெல்லாம் எழுதி வைக்கும் அவரது காதல் கவிதை டச். இவர்கள் எல்லோரையும் விட இளவரசி எனும் வினிதாவின் கிராமத்து அப்பா கேரக்டரில் வரும் குணா உருக்கம்! மனிதர், மகளின் மீதிருக்கும் அன்பால் அவள் பண்ணும் காதல் அடாவடிகளை பொறுத்துக் கொண்டு, தங்கையின் காலில் விழுந்து கதறும் இடத்தில் பெண்ணைப் பெற்றவர்களின் கண்ணீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக கைத்தட்டலாக பெற்று தியேட்டரை அதிர வைக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நகரத்து காதலுக்கு பாடல்கள் ஓ.கே.! அப்பா இசைஞானியிடம் அட்லீஸ்ட் ஐடியாவாவது கேட்டிருக்கலாம் யுவன்! அருள்தாஸின் ஒளிப்பதிவு நகரம் - கிராமம் இரண்டிலும் இளமையாகவும், இனிமையாகவும் இருப்பது பலம்! அதேமாதிரி ஆர்.கே.மகாலிங்கத்திவ் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வசனங்களும் படத்தின் பெரும்பலம்.
டி,சபாபதியின் இயக்கத்தில் பதினாறு., இருபத்தாறு, முப்பத்தாறு, நாற்பத்தாறு, ஐம்பத்தாறு, அறுபத்தாறு, எழுபத்தாறு, எண்பத்தாறுல தொன்னுத்தாறு உள்ளிட்டா எல்லாரும் ரசிக்கும் படம்.
பதினாறு - காதல் தேனாறு; பாலாறு.
-----------------------------------
குமுதம் விமர்சனம்
துவக்கத்திலேயே ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். "இந்த காதல் விவகாரமெல்லாம் எங்க வீட்டுக்கு செட் ஆகாது.. என பழைய பாணியில் நாயகியின் அப்பாவும், அம்மாவும் டயலாக பேசுகின்றனர். "காதல்ங்கறது சுத்தமான பொய்... என "பதினாறு என்ற ஒரு புத்தகத்தையும், அதையொட்டிய ஃப்ளாஷ்பேக்கையும் திருப்பமாக வைத்திருக்கிறார் டைரக்டர் சபாபதி.
அவசர கதியில் காட்டப்படும் சிவா - மதுஷாலினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் துளியும் ரொமான்ஸ் இல்லை. காதலனாக வரும் சிவாவை பார்த்தால் சிரிப்புதான் வருது. ஏதோ கடமைக்காக காதலிக்கிறேன் என்பது போல செம "பல்பு வாங்குறார். ஹீரோயின் மதுஷாலினி சுமார் அழகுதான்.
ஃப்ளாஷ்பேக்கில் கிராமத்தைக் காட்டுகிறாங்க. இங்கே டவுசர் போட்ட காலத்தில் சின்னஞ் சிறுசுகள் கைகோர்த்து காதலிப்பதை... இதற்கு மேல் என்ன சொல்ல... அதே பழைய பாணி பால்ய காலத்து காதல் சங்கதிதான். ஒரு மாற்றமுமில்லை. முறைப் பையனாக வரும் பாண்டி பையனின் வெள்ளந்தியான நடிப்பும், வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. இளவரசியாக வரும் அந்தப் பெண்ணின் இயல்பான நடிப்பு ஓ.கே.தான். காதலை தட்டிக் கழிக்கும் காட்சியிலும், வீட்டை எதிர்த்து "எனக்கு ஒட்டுத் துணி வாங்கிக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போடா... என காதலனுக்கு கட்டளை போடுவதும் "ஜிவ்.
துணி வாங்கப் போனவன் என்னவானான்? இளவரசிக்கு என்ன நடந்தது...? என சஸ்பென்ஸ் திருப்பம் கொண்டு வருவது டைரக்டர் "டச். அந்த திருப்பத்தை க்ளைமாக்ஸில் கோர்த்துவிட்டு தன் பழைய காதலியைக் கண்டு அபிஷேக் கேரக்டர் ஒதுங்கிப் போவது அழகிய காட்சியமைப்பு. மற்றபடி, இந்த "பதினாறு ஃப்ளாஷ்பேக்கை வைத்துக் கொண்டு காதல்னா என்ன...? என சிவாமதுஷாலினி ஜோடிக்கு டைரக்டர் பாடம் நடத்தியிருக்கிறார். ச்சே... போர் அடிக்கும் அதே பழைய சிலபஸ். சுமாரான இசைதான். என்னாச்சு யுவன்?
படம் நெடுக எல்லா கேரக்டர்களும் நீட்டி முழக்கி வசனம் பேசுவதும், தொடர்ச்சியாக வட்டார பாஷையில் பழமொழிகளை எடுத்து விடுவதுமாக திரைக்கதையில் நிறைய பலவீனங்கள். பள்ளிக் கூடப் பையனும், பெண்ணும் ஏதோ பக்குவப்பட்டவர்கள் போல வயதுக்கு மீறிய கவித்துவமான வசனங்களைப் பேசுவது கொஞ்சம் அலுப்பு. இளவரசி, கோபி கேரக்டரின் ஆங்கிலப் பெயர்களில் முதல் இன்ஷியலை பதினாறாக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிய டைரக்டர், வசனங்களை குறைத்து படத்தை இன்னும் விஷூவலாக சொல்ல முயற்சித்திருக்கலாம்.
பதினாறு : வெறும் ஆர்வக்கோளாறு. குமுதம் ரேட்டிங் : சுமார்.
-----------------------------------
கல்கி விமர்சனம்
பதினாறு வயதில் மனசுக்குள் பட்டாம் பூச்சியாகப் படபடப்பது உண்மையான காதல்தான் என்கிறது டீன் ஏஜ். இல்லையில்லை அது ஹார்மோன்களின் மோதல் என்கிறது ஓல்ட் ஏஜ். காதலா... மோதலா...? இதுதான் பதினாறு படத்தின் மையச் சரடு.
* சென்னை28, தமிழ்ப்படம்... போன்றவற்றில் கலாய்க்கிற ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த சிவாவுக்கு, இந்தப் படத்தில் பெயருக்குத்தான் ஹீரோ. அதுபோலவே ஹீரோயின் மதுஷாலினியும்.
* ஹீரோ - ஹீரோயினுக்குரிய மொத்த கனத்தையும், கைதட்டலையும் பெறுவது ஃபிளாஷ்பேக்கில் விரியும் கதையும்; நாயகன் கிஷோர் - நாயகி வினிதா இருவரும்தான்.
* ஆனாலும், சிவாவின் நக்கல்ஸ், நையாண்டி... இன்னும் பிற இத்யாதிகள் கிச்சுக்கிச்சு மூட்டத்தான் செய்கின்றன.
* அந்தஸ்தை காட்டி காதலை கிள்ளியெறிய முனையும்போது, வினிதாவின் நடிப்பில் உக்கிரம்; வினிதாவின் நடிப்புக்கு முன்பு கிஷோர் காணாமல் போவதும் உண்மைதான்.
* சின்னச் சின்ன சுவாரஸ்யங்களால் படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குனர் சபாபதியின் மெனக்கெடல் படம் முழுக்கத் தெரிகிறது.
* பருத்தி வீரன் ஸ்டைலில் விரியும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். குடும்பத்து பெண்ணுக்கு இத்தனை பிடிவாதம் ஏன்? ஆங்காங்கே நொண்டும் திரைக்கதையை செதுக்கியிருக்கலாம்.
* அபிஷேக், கஸ்தூரி போன்ற ஆர்டிஸ்ட்டுகள் வந்து போனால் போதும் என்று முடிவெடுத்திருப்பார் போல. அவர்களும் அதைத்தான் செய்கின்றனர்.
* கிராமம், நகரம் மாறி மாறி பயணிக்கிற யுவனின் இசையில், பின்னணிக்காக பலமான கைகுலுக்கல்!
* அருள்தாஸின் கேமராவில் கிராமம் குளுமையெனில், மகாலிங்கத்தின் வசனங்களில் மண்மணம்!
* காதலர்கள் தோற்கலாம்; ஆனால் காதல் தோற்பதில்லை என்ற பழைய "டொக்கை தட்டி நிமிர்த்தியிருந்தால் கூடுதலாகத் தித்தித்திருக்கும்.
பதினாறு - பருவப் பட்டாம்பூச்சி.