தினமலர் விமர்சனம்
இதுநாள் வரை அரவாணிகளை கொச்சைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அரவாணிகளை தங்களது இச்சைக்கு படுத்தி வந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ள சீர்திருத்த திரைப்படம்தான் நர்த்தகி.
அவனுள் பிறந்த அவள் அவளான அவனின் கதை எனும் அடை மொழிகளுடன் வெளிவந்திருக்கும் நர்த்தகி கதைப்படி, அவளுக்கென்று இவன், இவளுக்கென்று அவன்... என சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் உறவுமுறை குழந்தை ஜோடியில் உள்ள ஆண், பருவ வயதை எட்டிடும் தருவாயில் அவளாக மாறுகிறான்! அவளாக மாறிய அவன், அரவாணியாக கிளம்பியதால் ஊரின் ஏச்சு, பேச்சுகளுக்கு பயந்து குடும்பத்தில் ஏற்படும் இழப்புகளையும், அரவாணியாக படும் சிரமங்களையும்ல அவன் அவளானதால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும், அதையே சாக்காக்கி, அதுவே கதி என்று கிடக்காமல், தான் விரும்பியபடி நல் உள்ளங்கள் சிலரால் நாட்டியக்காரி ஆவதும், நர்த்தகி ஆன பின்பும் நய வஞ்சகர்கள் சிலரால் ஏமாற்றப்படுவதும், அதன் பின்பும் புரட்சிப் பெண்ணாக புயலென புறப்பட்டு சாதிக்கும் யுவன்- யுவதியான ஒரு அரவாணியைப் பற்றியே பின்னப்பட்டிருக்கிறது நர்த்தகி படத்தின் மொத்த கதையும்!
சுப்புவாக வந்து, கல்கியாக மாறும் அஸ்வின் ஆண் - பெண் இருபால் பருவத்திலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது முறைப்பெண் மீனாவாக வரும் லீமா, காதல் காட்சிகளிலும் சரி... காதலனை பிரியும் காட்சிகளிலும் சரி... கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.
கல்கியாக கல்கி எனும் அரவாணி ஒருவரே அசத்தலாக நடித்திருக்கிறார். சோப்பு மாமா வி.கே.ஆர்.ரகு, பரதநாட்டிய குரு கிரி்ஷ், மதிவாணனாக வரும் விவின், சிலம்ப வாத்தியாராக சுப்புவின் அப்பாவாக வரும் கராத்தே வெங்கடேஷ், சுப்புவின் அம்மாவாக வரும் மைனா சூசன் உள்ளிட்ட அனைவரும் நர்த்தகிக்கு நன்மதிப்பையும், நம் மதிப்பையும் கூட்டும் வகையில் நடித்துள்ளனர்.
அவன் அவளானதும், மும்பை சென்று அரவாணிகளால் அரவாணியாக அறுத்துக் கொள்ளும் காட்சி ஒன்று போதும்... பெண் இயக்குனர் ஜி.விஜயபத்மாவின் துணிச்சலையும், டைரக்டர் டச்சையும் சொல்ல...! ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, கேசவனின் ஒளிப்பதிவு, ஜாக்குவார் தங்கத்தின் சண்டைப்பயிற்சி... இவையெல்லாம் நர்த்தகிக்கு மகுடம் சேர்க்கும் சமாச்சாரங்கள் என்றாலும், அரவாணிகளின் பாஷையிலேயே சில காட்சிகள் படம் முழுக்க வியாபித்திருப்பது பொதுஜனங்களுக்கு புரியாத போர் என்பது பலவீனம்.
மற்றபடி பெண் தயாரிப்பாளர் புன்னகைப்பூ கீதாவின் தயாரிப்பில் பெண் இயக்குனர் ஜி.விஜயபத்மாவின் எழுத்து, இயக்கத்தில் அரவாணிகளின் கதையை அநாகரீகமில்லாமல் சொல்லும் நர்த்தகி - நல் வித்தகி!
----------------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில் சிலம்பு வாத்தியாருக்கும், நாட்டியப் பெண்மணிக்கும் பிறந்தவன் சுப்பு. சிறுவயதில் அம்மாவின் பரத நாட்டியத்தைப் பார்த்து தானும் ஆடுகிறான். இதற்கிடையே மீனா என்ற அத்தைப் பெண்ணுக்கும் சுப்புவுக்கும் எதிர்காலத்தில் திருமணம் என்று பெற்றோர் முடிவு கட்டுகின்றனர்.
"நான் எனக்குள் பெண்மையை உணர்கிறேன் அம்மா... சில சமயங்களில் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசிக்கிறேன்... என பெற்றோரிடம் சொல்ல, அவர்களோ அவனை துரத்தியடிக்கின்றனர். அதன்பிறகு சுப்புவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என ஆணாகப் பிறந்த ஒரு திருநங்கையின் (அரவாணி) வாழ்க்கைக் கதையை வண்ணம் குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய பத்மா.
சிறுவயதில் சுப்புவாக வந்து அந்தப் பையன் நளினமாக கலக்குகிறான். உடன் படிக்கும் பையன் பாஸ்கரனின் உடம்பு தன் மேல் உராயும்போது ஒரு பெண் என்னவிதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டுவாளோ அதை அப்படியே கொண்டுவந்திருக்கிறான் அந்த விடலை பையன்.
"நான் ஒரு அரவாணி... நீ என் பக்கத்துல வந்தா எனக்கு... எந்த உணர்ச்சியும் வரமாட்டேங்குது மீனா... என்று படாரென சுப்பு, நாயகியிடம் விஷயத்தைப் போட்டு உடைக்கும்போது நமக்கே சங்கடமாக இருக்கிறது. அரவாணி எனத் தெரிந்தபின்னும் மாமா பையனுடன் அந்த மீனா கேரக்டர் கட்டிப் புரள ஏங்குவது டூ மச். தவிர்த்திருக்கலாம்.
மும்பை போகும் சுப்பு அங்கே கல்கியாக உருமாறுகிறான். அரவாணியாக மாறுவதற்கு என்னென்ன சடங்குகள் உள்ளன என்பதை திரைக்கதையில் கொண்டு வந்திருப்பது வெகு ஆச்சரியம்தான். அரவாணிகளாக வரும் அந்த மும்பைப் பெண்கள் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். கல்கியை தாதா கோஷ்டி கற்பழிக்கும் காட்சி கொடூரம்.
ஒளிப்பதிவாளர் கேசவன் தஞ்சை மண்ணையும், மும்பை நெரிசலையும் அழகாக கேமிராவில் கொண்டுவந்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் இதமாக இருக்கின்றன. அரவாணி கல்கியின் பால்ய கால் ஃப்ளாஷ்பேக்கை ஜவ்வு மிட்டாய் கணக்காக இழுத்திருக்க வேண்டாம்.
நர்த்தகி: ஆனந்த நடனம்.
குமுதம் ரேட்டிங்: ஓகே