தினமலர் விமர்சனம் » முரட்டு காளை
தினமலர் விமர்சனம்
பழைய முரட்டுக்காளையோட ரீ-மேக்தான் இந்த புதுமுரட்டுக்காளை. நிலம், பணம்னு வசதி வாய்ப்போட இருக்கிற காளையனுக்கு (சுந்தர்.சி) நாலு பாசக்கார தம்பிகள். (ஆனா, அவங்க ஏன் அரை டவுசரோடவே சுத்துறாங்கன்னு தெரியல!) ஊர் திருவிழாவுல நடக்கிற ரேக்ளா பந்தயத்துல ஜெக்கிற காளையன் மேல பணக்காரர் வரதராஜனோட (சுமன், தங்கச்சி ப்ரியாவுக்கு (சிந்து துலானி) காதல். காளையனோட நிலத்து மேல வரதராஜனுக்கு காதல். குதர்க்கமா திட்டம் போட்டு தங்கச்சிக்கு மாப்பிள்ளை கேட்டு காளையன்கிட்டே போறார் வரது. காளையனும் சம்மதிக்க கோயில்ல நிச்சயதார்த்ததுக்கு ஏற்பாடு நடக்குது. அப்போ தற்செயலா, கல்யாணத்துக்கு பிறகு காளையன்கிட்டே இருந்து தம்பிகளை பிரிச்சுடுவேன்னு ப்ரியா, தோழிகள்கிட்டே சொல்றதையும் கேட்கற காளையன், கோபமாகி நிச்சயதார்த்தத்தை நிறுத்துறார்.
இதுக்கு இடையில ஆதரவில்லாத பொண்ணு புவனா(சினேகா) மேல வரதுக்கு ஆசை வந்து தன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறார். அவர்கிட்டே இருந்து தப்பிச்சு காளையன்கிட்டே அடைக்கலம் ஆகுறாங்க புவனா. ரெண்டு பேருக்கும் காதல் வந்து, 2 டூயட்டையும் பாடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்!னு மேடையில உட்கார்ற காளையனை, வரதுவோட ஆளை கொலை பண்ணிட்டதா சொல்லி கைது பண்ணி கூட்டிட்டு போறாங்க போலீஸ். இது வரதுவோட ஏற்பாடுன்னு புரிஞ்சுக்கிற காளையன் போலீஸ்கிட்டே இருந்து தப்பிக்கிறார். அவரைத்தேடி வரதராஜன் கிளம்புறார். ரயில் மேல, காட்டுக்குள்ளே, ஊருக்குள்ளேன்னு ஓடி ஓடி சண்டை போடுறாங்க. காளையன் திரும்பி வந்து புவனாவை கல்யாணம் பண்ணினாரா...? வரதராஜன் என்னவானார்...?ங்கற கேள்விகளுக்கு நம்ம பொறுமைய சோதிச்சு பதில் சொல்றாங்க.
படம் கோர்வையே இல்லாம துண்டு துண்டா இருக்கறது... திருப்பம்ங்கற பேர்ல திடீர் திடீர்னு கதாபாத்திரங்கள் வந்து போறது... எந்த கதாபாத்திரத்துக்கும் தெளிவான பின்னணி இல்லாததுன்னு படத்துல குழப்பமான விஷயங்கள் ஏராளம். எல்லாருக்கும் தெரிஞ்ச கதையை திரும்ப எடுக்கும்போது திரைக்கதையில் ரொம்பவே கவனமா இருந்திருக்கணும். அது இங்கே மிஸ்ஸிங். மொத்தத்துல் படம் நல்லா இருக்குன்னு சொல்ல படத்துல ஒரு காட்சியும் இல்ல!
மொத்தத்தில், "முரட்டுக்காளை" - "வீரியமில்லா காளை"ரசிகன் குரல் - பழைய கதையை அப்படியே எடுத்துவங்க அதே விறுவிறுப்போட எடுக்கலையே!
----------------------------------------------------
கல்கி திரை விமர்சனம்
“பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ - எண்பதுகளில் காளையனாக ரஜினி வீராப்புக் காட்டிய இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நரம்பு நெருநெருன்னு முறுக்கேறும். அந்தப் பாடல் இடம்பெற்ற “முரட்டுக்காளை’ படத்தையே ரிமேக்கினால் அந்த நெருநெருப்பு வேண்டும்தானே? அதை கூடுமானவரை பூர்த்திசெய்ய முயற்சிக்கிறார் சுந்தர்.சி. நடித்த “முரட்டுக்காளை’. பழைய மொந்தையில் புதிய கள் அல்லது அரைத்த மாவையே அரைக்கும் வேலை. நெற்றி நிறையத் திருநீறு, நல்ல சில்க் ஜிப்பா சட்டை, குளுகுளு மேக்கப்போடு வந்து எதிரிகளைப் பந்தாடும் சுந்தர்.சி.யை ரசிக்கலாம். என்றாலும் காதல் காட்சிகளில் தத்தக்கா பித்தக்கா. ஹீரோவுக்குக் கோபம் வந்தால் ரசிகனுக்கும் கோபம் வரவேண்டும், அதுதானே காட்சி நியாயம். ஆனால், சுந்தர்.சி.க்கும் கோபம் வரலை; ரசிகனுக்கும் கோபம் வரலை;
சினேகா அதிகமாக ஓடி ஓடி நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் சுந்தர்.சி.யைப் பார்த்தாலும் ஓட்டம்; பார்த்தது போல நினைத்தாலும் ஓட்டம். இல்லையேல் சும்மாவாச்சும் ஓட்டம். கல்யாணத்துக்கு முன்னால் நடிக்கும் படம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு க்ளாமரில் ஃபோர்த் கியரில் ஓடுகிறார் புன்னகை இளவரசி.
பண்ணையார் வீட்டுப் பெண்ணாகவும், சுந்தர்.சி.யை விரும்பும் காதலியாகவும் சிந்து துலானி, திறமையை அளவுக்கு அதிகமாகத் திறந்து காட்டியதால் நடிப்பு அவருக்கு முகம் காட்டவில்லை. அவருக்கும் இயக்குனருக்கும் அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. ஜெய்சங்கர் நடித்த பார்த்திரத்தில் “சிவாஜி’ வில்லன் சுமன். நடிப்பிலும் வெடிப்பிலும் பொருத்தம். ஆரம்பக் காட்சிகளில் வசீகரிக்கும் விவேக்கின் திருநங்கை கெட்டப், போகப்போகப் புளிக்கிறது. அதுவும் அந்த பாத்ரூம் காட்சி தடா போட வேண்டிய படா. சுருளிராஜன் என்கிற மாபெரும் கலைஞன் நடித்த பாத்திரமல்லவா அது?! செல்முருகனின் “பதினாறு வயதினிலே’ டாக்டர் கெட்டப் காமெடிதான். “பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை அதே மெட்டில் பயன்படுத்தியது இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் புத்திசாலித்தனம். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் இருக்கும் அளவுக்கு இருக்கு.
வில்லன் அண்ட் கோ மாட்டுக் கொம்பால் குத்திக் கொலை செய்வதெல்லாம் ஓகே. அதுக்காக ஒரே கொம்பில் அத்தனை கொலைகளா? இருக்கிற காட்சிகளை அப்படியே எடுத்துக்கொண்ட இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்!
முரட்டுக்காளை - பாய்ச்சல் கம்மி
கதிர்பாரதி