ஹாட் ஸ்பாட்,Hot Spot
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

இயக்கம் - விக்னேஷ் கார்த்திக்

இசை - சதீஷ் ரகுநாதன், வான்

நடிப்பு - ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன், சாண்டி, அம்மு அபிராமி, சுபாஷ், ஜனனி, கலையரசன், சோபியா

வெளியான தேதி - 29 மார்ச் 2024

நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்

ரேட்டிங் - 2.75/5

குறிப்பு - 'ஏ' சான்றிதழ் திரைப்படம், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்

ஒரே படத்தில் வெவ்வேறு கதைகள் இடம் பெறக் கூடிய 'ஆந்தாலஜி' வகைப் படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் டிரைலரை ஆபாச இரட்டை அர்த்த வசனங்களுடன் சர்ச்சைக்குரிய விதத்தில் உருவாக்கிய இயக்குனர், அதற்கு நேர்மாறாக இந்தப் படத்தைக் கொடுக்கிறார்.

படத்தின் ஆரம்பக் கதையாக வரும் 'ஹாப்பி மேரீட் லைப்', கடைசி கதையாக வரும் 'பேம் கேம்' ஆகியவை இந்தக் காலத்திற்குத் தேவையான கதைகள். படத்தில் உள்ள மற்ற இரண்டு கதைகளான 'கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி' ஆகியவற்றுடன் சேர்த்து நான்கு கதைகளுமே உருவாக்கத்திலும், அதில் நடித்துள்ளவர்களாலும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.

ஹாப்பி மேரீட் லைப்

சில வருடக் காதலர்களாக இருக்கும் ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் அவரவர் பெற்றோர்களிடம் காதலைச் சொல்லி திருமணம் செய்து கொள்வோம் என முடிவெடுக்கிறார்கள். பேசிவிட்டு படுத்துத் தூங்கிய ஆதித்யாவுக்கு ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் வீட்டோடு மருமகனாகி வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வது, மாமனார் கொடுமையில் சிக்குவது என தவிக்கிறார். நிஜ வாழ்வில் நடப்பது கனவில் நேர்மாறாக நடக்கிறது. கனவு கலைந்த பின் தான் கனவில் கண்டதை நிஜமாக்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுக்கிறார். அது எப்படிப்பட்ட முடிவு, இருவரது பெற்றோர்களும் அதை ஏற்றுக் கொண்டார்களா என்பதுதான் மீதிக் கதை.

நிஜத்தில் கணவன் வீட்டிற்குத்தான் மனைவி வருவாள். அனைத்து வேலைகளும் அந்த மருமகள்தான் செய்வார். மாமியார் கொடுமைப்படுத்துவார், அதைக் கணவன் கண்டு கொள்ள மாட்டார். இதை அப்படியே உல்டாவாக்கி மனைவி வீட்டிற்குக் கணவன் செல்வது, வேலைகளைச் செய்வது என ஒரு விபரீதக் கற்பனையை சுவாரசியமான காட்சிகளாக்கியிருக்கிறார்கள். ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் இருவரும் '96' படத்திற்குப் பிறகு பொருத்தமான ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள். இக்கதையின் கிளைமாக்ஸ் வசனங்கள், அழுத்தமானவை, பாராட்டுக்குரியவை.

கோல்டன் ரூல்ஸ்

சாண்டி, அம்மு அபிராமி காதலர்கள். ஒரு பொய்யைச் சொல்லி பெற்றோரை மடக்கி தனது காதலுக்கு சம்மதம் வாங்குகிறார் அம்மு அபிராமி. அடுத்து அம்முவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார் சாண்டி. அம்முவின் அம்மா, அப்பாவைப் பற்றி சாண்டியின் அம்மா விசாரிக்கிறார். அப்போதுதான் ஒரு உண்மை தெரிய வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு காதலனுடன் ஓடிப் போன தனது தங்கையின் மகள்தான் அம்மு என சாண்டி அம்மாவுக்குத் தெரிய வருகிறது. அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். அண்ணன், தங்கை உறவு முறை என்பதால் சாண்டியும், அம்முவும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போகிறது.

விபரீதக் கற்பனையில் உருவான கதை. விபரீதமான ஒரு கதையை யோசித்துவிட்டோம், எப்படி முடிப்பது எனப் புரியாமல் எந்த ஒரு முடிவையும் சொல்லாமல் அடுத்த கதைக்குத் தாவிவிட்டார் இயக்குனர். எப்படி நடித்தார்கள் என்பதைக் கூட விவரிக்க முடியாத அளவிற்கு இக்கதையை சீக்கிரமே முடித்துவிட்டார்கள்.

தக்காளி சட்னி

மற்றுமொரு விபரீதக் கதை. இப்படியெல்லாம் நாட்டில் நடக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது இக்கதை. ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுபாஷ், அங்கு ஒரு விபரீதச் செயலை செய்ததற்காக வேலையை விட்டு நீக்கப்படுகிறார். மீண்டும் வேலையில் சேர்ந்தால்தான் திருமணத்தைப் பற்றிப் பேச முடியும் என்கிறார் காதலி ஜனனி. சரியான வேலை கிடைக்காத விரக்தியில், பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க பெண்களை திருப்திப்படுத்தும் ஆண் விபச்சாரத் தொழிலில் இறங்குகிறார் சுபாஷ். அதில் நல்ல வருமானத்தையும் பார்க்கிறார். ஒரு கட்டத்தில் அந்த உண்மை காதலி ஜனனிக்குத் தெரிய வர, அடுத்து என்ன என்பதுதான் மீதிக் கதை.

ஆண் விபச்சாரம் பற்றி டீடெயில் ஆகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுபாஷின் துணிச்சல் ஆச்சரியத்திற்குரியது. ஜனனிக்கு ஓரிரு காட்சிகளைத் தவிர அதிக முக்கியத்துவம் இல்லை. கதையின் கிளைமாக்சில் சுபாஷின் அம்மாவையும் வேறு விதத்தில் சம்பந்தப்படுத்தி இருப்பதும், அம்மாவிடம் சுபாஷ் அது குறித்து நேரடியாக பேசுவதும் அதிர்ச்சியான காட்சிகள்.

பேம் கேம்

எந்த தனியார் டிவிக்களைப் பார்த்தாலும் குழந்தைகளை மையமாக வைத்து சில பல டிவி நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு டிவி நிகழ்ச்சியில் தங்களது சிறு வயது மகளும், மகனும் கலந்து கொண்டு பேர் வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள் ஆட்டோ ஓட்டும் கலையரசன், அவரது மனைவி சோபியா. எதிர்பார்த்தது போலவே மகள் பிரபலமாகிறார். அந்தப் பிரபலமே அவர்களது மகள் வாழ்க்கையில் எமனாக வந்து முடிகிறது. கற்பழிக்கப்பட்டு தனது மகள் கொலை செய்யப்பட்டால் என்ற உண்மையை டிவி ஷோ மேடையிலேயே உடைக்கிறார் கலையரசன். அடுத்து என்ன என்பதுதான் மீதிக் கதை.

இப்படியான டிவி நிகழ்ச்சியை நடத்தும் அந்த ஒரு டிவி நிறுவனம் மீது இயக்குனருக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. டிவி நிகழ்ச்சிகளுக்கு இனி தங்களது மகன், மகள்களை பெற்றோர்கள் அனுப்புவார்களா என்று தயங்கும் அளவிற்கு இக்கதையை வெட்ட வெளிச்சமாக அணுகியிருக்கிறார் இயக்குனர். கலையரசன், சோபியா இருவரது நடிப்பும் அழுத்தமாய் அமைந்துள்ளது.

சதீஷ் ரகுநாதன், வான் இசையமைத்திருக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர்களது கூடுதல் உழைப்பு படத்தின் தரத்திற்கு கை கொடுத்துள்ளது.

மூன்று கதைகளில் காதலன், காதலி, ஒரு கதையில் கணவன், மனைவி. அவரவர் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் என்பதுதான் இந்த நான்கு கதைகளுக்கான ஒரே ஒற்றுமை. எடுத்துக் கொண்ட சிக்கலான கதைகளை வெளிப்படையாகச் சொல்கிறார் இயக்குனர். வசனங்களில் ஆபாசம் இல்லை என்றாலும் கதையிலும், திரைக்கதையிலும் உடல் சார்ந்த பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மையமாக உள்ளது.

 

ஹாட் ஸ்பாட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஹாட் ஸ்பாட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓